சர்வதேசம்
அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் ஆதரவு கும்பல் கலவரம், 4 பேர் பலி

அமெரிக்க நாடாளுமன்றம் கூடும் கேப்பிடல் கட்டடத்துக்கு வெளியேயும், உள்ளேயும் குவிந்த டிரம்ப் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நடந்துகொண்டிருந்த நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதில் இதுவரை நான்கு பேர் இறந்துள்ளனர்.
நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் தாம் தோல்வி அடைந்து ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றதை ஏற்றுக்கொள்ள மறுத்துவரும் அதிபர் டொனால்டு டிரம்ப், இந்த வெற்றியை ஏற்று சான்றிதழ் தராமல் தேர்தல் முடிவுகளை நிராகரிக்கும்படி துணை அதிபர் மைக் பென்சை வலியுறுத்தி வருகிறார்.
இந் நிலையில், அதிபர் தேர்தல் முடிவுகளை உறுதி செய்வதற்காக நாடாளுமன்றக் கூட்டம் நடந்துகொண்டிருந்தது. அப்போது டிரம்ப் ஆதரவு கலவரக் கும்பல் நாடாளுமன்றத்தில் புகுந்தது.
கேப்பிடல் கட்டடம் மீண்டும் பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டுக்குள் வந்து, நிறுத்தப்பட்ட நாடாளுமன்றக் கூட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது.
இதையடுத்து வாஷிங்டன் டிசி-யில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கலவரத்தை தொடர்ந்து தனது ஆதரவாளர்களைத் திரும்பிப் போகும்படி டிரம்ப் வேண்டுகோள் விடுக்கும் வீடியோவை ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் அகற்றியுள்ளன. அந்த வீடியோவில் ஆதரவாளர்களை திரும்பிப் போகச் சொல்லும் அதே நேரம், அவர் தேர்தலில் முறைகேடு நடந்துவிட்டதாக ஆதாரமில்லாமல் மீண்டும் குற்றம்சாட்டினார்.
டிவிட்டர் டிரம்பின் கணக்கை 12 மணி நேரத்துக்கு முடக்கி வைத்துள்ளது.