Connect with us

ஆன்மீகம்

ஆசைகள் அனைத்தும் நிறைவேற…

Published

on

தை பிறந்துவிட்டால், அந்த மாதத்தில் வரும் பூசம் நட்சத்திரம் நம் நினைவுக்கு வரும். ஆசைகள் அனைத்தும் நிறைவேற, தைப்பூசத்தன்று முருகப்பெருமானை வழிபட வேண்டும். அந்தத் திருநாள் 28.1.2021 (வியாழக்கிழமை) வருகின்றது. அன்றைய தினம் ஒவ்வொருவரும் படைவீடுகளில் உள்ள முருகனையோ, பக்கத்து ஆலயத்தில் உள்ள முருகனையோ வழிபடவேண்டும். மாறாக வீட்டு பூஜையறையில், வள்ளி-தெய்வானையுடன் கூடிய முருகப் பெருமான் படம் வைத்து பஞ்சமுக விளக்கேற்றி பழங்கள், கந்தரப்பம் நைவேத்தியம் படைத்தும் வழிபடலாம்.

ஆசை இல்லாத மனிதன் இல்லை. ஆனால் அந்த ஆசைகள் நியாயமானதாக இருக்கவேண்டும். பொதுவாக ஒருவர் ‘சுயதொழில் செய்து முன்னுக்கு வரவேண்டும்’ என்று ஆசைப்படுவார். மற்றொருவர் ‘நிறையப் படித்து, பெயருக்குப் பின்னால் ஏராளமான பட்டங்களைச் சேர்த்துக் கொள்ளவேண்டும்’ என்று விரும்புவார். இன்னும் சிலரோ ‘ஞான மார்க்கத்தில் சென்று ஆன்மிக உலகத்தில் அடியெடுத்து வைக்கவேண்டும்’ என்று விரும்புவர்.

இதுபோன்ற ஆசைகளை நிறைவேற்றி வைப்பது தெய்வ வழிபாடுகள்தான்.

ஜாதகத்தில் பாக்ய ஸ்தானாதிபதி இருக்கும் நிலை அறிந்து, அதன் பலமறிந்து வழிபாடுகளை மேற்கொண்டால் நினைத்தது நிறைவேறும். மேலும் ஒவ்வொரு மாதங்களிலும் சிறப்பு நட்சத்திரங்கள், சிறப்பு திதிகளில் அதற்குரிய தெய்வ வழிபாடுகளை மேற்கொண்டாலும் எதிர்பார்த்த நற்பலன்களைப் பெற இயலும்.

அந்த அடிப்படையில் தான் மாதங்கள் தோறும் முருகப்பெருமானுக்குரிய மங்கல நிகழ்ச்சிகள் நடந்தாலும், வைகாசி விசாகமும், தைப்பூசமும், ஐப்பசியில் வரும் கந்த சஷ்டியும், கார்த்திகையில் வரும் திருக்கார்த்திகையும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரமும் முக்கியத்துவம் பெறுகின்றன.

இவற்றில் தை மாதம் என்பது சூரிய பலத்தோடு இருக்கும் மாதமாகும். தேவர்களின் விழிப்புணர்ச்சி காலம். இந்த மாதத்தில் வரும் பூச நட்சத்திரம் அன்று கந்தப்பெருமானை கைகூப்பி வழிபட்டால், வந்த துயரங்கள் வாசலோடு நிற்கும். சந்ததிகள் தழைக்கும். தனவரவும் திருப்தி தரும்.

பூசத்தன்று வேலவன் பெயரை உச்சரித்தாலே வெற்றிகள் குவியும். கந்தப் பெருமானை கைகூப்பித் தொழுதால் கவலைகள் அகலும். வேலாயுதனை துதித்தால் வியாபாரம் தழைக்கும். குகனை வணங்கினால் குறைகள் விலகும். ஆறுதல் தரக்கூடிய ஆறு முகத்திற்கும், அருணகிரிநாதப் பெருமான் அழகாக விளக்கம் சொல்கின்றார்.

‘சிவனுக்கு ஓங்காரத்தின் பொருளை உரைத்த முகம் ஒன்று, அடியவர்களின் வினை களைத் தீர்க்கின்ற முகம் ஒன்று, சூரனை சம்ஹாரம் செய்வதற்கும், அன்னையிடம் வேல் வாங்குவதற்கும் உரிய முகம் ஒன்று, சூரனை வதைத்த முகம் ஒன்று, வள்ளியை மணந்துகொள்ள வந்த முகம் ஒன்று, தனது வாகனமான மயில் மீது ஏறி நின்று விளையாடும் முகம் ஒன்று.’ இப்படி ஆறுமுகம் பெற்ற அழகனைப் போற்றிக் கொண்டாட உகந்தநாள், தைப்பூசத் திருநாளாகும்.

முருகப்பெருமானுக்குரிய ஆறுபடை வீடுகளில் திருச்செந்தூர் சென்று வழிபட்டு வந்தால் பகை மாறும். மனம் தெளிவுபெறும். பழனி சென்று வழிபட்டுவந்தால் செல்வ நிலை உயரும். சுவாமிமலை சென்றுவழிபட்டு வந்தால் ஞானம் கைகூடும். திருத்தணிகை சென்று வழிபட்டு வந்தால் கோபம் தணியும். பழமுதிர்சோலை சென்று வழிபட்டு வந்தால் நமது நிலை உயரும். திருப்பரங்குன்றம் சென்று வழிபட்டு வந்தால் திருமணம் கைகூடும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *