சர்வதேசம்
ஆளும் கட்சியில் இருந்து நேபாள பிரதமர் நீக்கம்

நேபாளத்தில், ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து, பிரதமர் ஒலி, நேற்று அதிரடியாக நீக்கப்பட்டார்.
நேபாளத்தில், கடந்த ஆண்டு முதல், பிரதமர் சர்மா ஒலிக்கு எதிராக, சொந்த கட்சியினரே போர்க்கொடி துாக்கி வருகின்றனர். இதற்கிடையே, பார்லிமென்டை முன்கூட்டியே கலைக்க, அதிபர் பித்யா தேவி பண்டாரிக்கு, பிரதமர் ஒலி பரிந்துரைத்தார். இதையடுத்து, பார்லி.,யை கலைத்து, அதிபர் உத்தரவிட்டார்.இது, நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில், கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. கட்சியின் துணைத் தலைவரான பிரசந்தா, பிரதமர் ஒலியை கடுமையாக சாடினார்.
இதையடுத்து, கட்சித் தலைவர் பதவியில் இருந்து, ஒலி நீக்கப்பட்டு, அந்த பதவியில், மாதவ் குமார் நியமிக்கப்பட்டார். பார்லி., குழுத் தலைவராக பிரசந்தா நியமிக்கப்பட்டார்.பின், பார்லி.,யை கலைத்தது குறித்து, பிரதமர் ஒலியிடம், கட்சித் தலைமை விளக்கம் கோரி இருந்தது. எனினும், அதற்கு அவர் தரப்பில் விளக்கம் தரப்படவில்லை
இந்நிலையில், பிரதமர் ஒலி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நேற்று நீக்கப்பட்டார். நேற்று நடந்த நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைக்குழு கூட்டத்தில், இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.