சர்வதேசம்
இந்தோனேசிய விமானத்தின் உடைந்த பாகங்கள் மீட்பு!

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள விமான நிலையத்தில் இருந்து, போண்டியானாக் நோக்கி புறப்பட்ட “ஸ்ரீவிஜய” விமான நிறுவனத்துக்கு சொந்தமான, போயிங் 737 ரக பயணிகள் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, ரேடாரின் கண்காணிப்பில் இருந்து மறைந்துள்ளது. விமானம் 11 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென மாயமானதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, மாயமான விமானத்தை தேடும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டனர். ஜாவா கடற்பரப்பிற்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது தகவல் துண்டிக்கப்பட்டதால் விமானம் கடலில் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகம் நிழவியது. இதனை தொடர்ந்து ஜாவா கடலில் விமானத்தை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், ஜாவா கடல் பகுதியில் விமானத்தின் பாகங்களை உள்ளூர் மீனவர்கள் கண்டெடுத்துள்ளனர். இதனால், இந்தோனேசிய விமானம் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது என சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. எனினும் கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் பாகங்கள் மாயமான விமானத்தின் பாகங்கள் தானா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே, கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி, மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து புறப்பட்ட போயிங் 777-200 ரக விமானம், பீஜிங் செல்லும் வழியில் மாயமானது. அந்த விமானத்தின் நிலை என்னவென்பது, இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
