Connect with us

இலங்கை செய்திகள்

‘இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் சிறுபான்மை சமூகமும் நற்பிரஜைத்துவமும்’

Published

on

நூல் அறிமுகம் – ‘இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் சிறுபான்மை சமூகமும் நற்பிரஜைத்துவமும்’
நூலாசிரியரான
அஷ்ஷெய்க் ஏ.ஸீ.அகார் முஹம்மத் அவர்கள் இஸ்லாமிய அழைப்புப் பணியில் 35 வருட கால அனுபவத்தைக் கொண்டவர்.
தனக்கேயுரிய அழகிய சொல்லாடல்களால் வாசகர்களை மிக விரைவாகக் கவரும் வசீகரமிக்க பேச்சாளர்.
அதே வசீகரம் இந்த நூலிலும் விரவிக் காணப்படுவது நிச்சயம் வாசகர்களை ஈர்க்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. என மருதமுனையைச் சேர்ந்த ஆசிரியரான நெளபஸ் ஜமால்தீன் இந்நூலை அறிமுகம் செய்து வைக்கிறார்.
இந்த நூலுக்கு,
மர்ஹூம் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி,
பேராசிரியர் சோ.சந்திரசேகரன் ஆகிய இரு பெரும் ஆளுமைகள் அணிந்துரை வழங்கியுள்ளமை இன்னும் ஒரு படி மேலெலுப்பிக் காட்டுகிறது.
இதில் பேராசிரியர் சோ.சந்திரசேகரன் அவர்கள் தனது அணிந்துரையில்;
அண்ணாத்துரை இஸ்லாமிய மாநாடொன்றில் உரையாற்றும்போது “இஸ்லாம் ஓர் உலகளாவிய மதம் மட்டுமன்று, அது ஒரு மார்க்கம். அது யாவருக்குமுரிய பிரபஞ்ச தத்துவங்களைக் கொண்டது” என தெரிவித்த கருத்தொன்று இந்த நூலைப் படித்தபோது தனக்குள் ஒரு சிந்தனை பளிச்சிட்டதாகக் கூறுகின்றார்.
மற்றொரு முக்கியத்துவம், ஏனைய சமயத்தவரும் தமது சமய சிந்தனைகளின் படியான நற்பிரஜைத்துவ தத்துவங்களை ஆராய இந்நூல் ஒரு பிரதான தூண்டுகோலாக அமையும் அதேவேளை, அவை பற்றிய ஒப்பியல் ஆய்வுகளுக்கும் வழிவகுக்கும் என்பதாகக் கூறியுள்ளார்.
இனி நூலின் உள்ளடக்கத்தை நோக்குவோம்.
1- அறிமுகம்: சிறுபான்மை,
முஸ்லிம் சிறுபான்மை பற்றிய எண்ணக்கருக்கள்.
2- பிரஜைத்துவம் எனும் எண்ணக்கரு
(Concept of Citizenship)
3- இஸ்லாமும் பிரஜைத்துவமும்
( Islam and Citizenship)
4- நற்பிரஜைத்துவமும் தேசப்பற்றும்
(Good Citizenship and Patriotism)
5- நற்பிரஜைத்துவமும்
 சகவாழ்வும்
(Good Citizenship and Coexistence)
6- இன்றைய தேவை நல்லிணக்கமும் சகவாழ்வுமே
7- ஆய்வின் விதந்துரைகள்
8- உசாத்துணை நூல்கள்
என தொடர்ந்து,
வாசிக்கத் தூண்டுகிறது.
‘ஒரு நாட்டில் வாழும் இனத்தால் அல்லது மொழியால் அல்லது சமயத்தால் அந்நாட்டின் பெரும்பான்மை குடிமக்கள் சாராத ஒன்றை சார்ந்திருக்கும் பல நூறு குடிமக்களைக் குறிக்கும்.’
இது சிறுபான்மை என்பதற்கு சமூகவியலாளர்கள் கொடுத்துள்ள விளக்கமாகும்.
அந்த வகையில் இன்றைய உலக முஸ்லிம் சிறுபான்மை சமூகங்களை இரு பிரிவுகளாகப் பிரித்து நோக்க முடியும்.
1- பாரம்பரிய முஸ்லிம் சிறுபான்மை சமூகங்கள்:
இவர்கள் தாம் வாழும் நாட்டின் குடிமக்களாக இருப்பர். இந்தியா, இலங்கை முஸ்லிம் சமூகங்களையும் சேர்பியா, பல்கேரியா,
மெஸடோனியா போன்ற நாடுகளில் வாழும் முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தினரையும் உதாரணமாகக் குறிப்பிடலாம்.
2- புலம் பெயர்ந்த முஸ்லிம் சிறுபான்மை சமூகங்கள்.
1950 களுக்குப் பின்னர் அரசியல், பொருளாதாரம், கல்வி முதலான காரணங்களுக்காக அரபுலகிலிருந்தும், ஏனைய இடங்களிலிருந்தும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு இடம்பெயர்ந்ததால் அங்கு உருவான முஸ்லிம் சமூகம்.
பிரஜாவுரிமை என்பது ஒருவர் ஒரு குறிப்பிட்ட நாட்டின் சட்டபூர்வ உறுப்புரிமையைப் பெற்ற நிலையைக் குறிக்கும்.ஒரு நாட்டின் பிரஜை என்பவர் அந்நாட்டின் எல்லா வகையான சமூக, அரசியல் உரிமைகளையும் பெற்றவராவார்.
என்று சிறுபான்மை, பிரஜைத்துவம் பற்றிய அழகிய அறிமுகத்தோடு ஆய்வு தொடர்கிறது.
முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளில் பிரஜாவுரிமை பெற்று வாழ்வதற்கு மார்க்கம் பூரண அனுமதியை வழங்குகிறது என நூலாசிரியர் மிகத் துல்லியமான ஆதாரங்களை அல்-குர்ஆன் மற்றும் அல்-ஹதீஸ் ஊடாக முன்வைக்கிறார். விரிவஞ்சி அவற்றில் சிலதுகளை எழுதியுள்ளார்.
“ஆகவே நீங்கள் பூமியில் சுற்றுப்பயணம் செய்து, பொய்யர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதைக் கவனியுங்கள்.”
(அல்-குர்ஆன் 16:36)
இவ்வசனம் பூமியில் பரந்து திரிந்து தாம் விரும்பும் இடத்தில் குடியேறி வாழலாம் என்பதைத் தெளிவுபடுத்துகின்றது.
“அவர்களில் ஒரு சாரார் பூமியில் பரந்து சென்று அல்லாஹ்வின் அருளைத் தேடுவார்கள்.”
(அல்-குர்ஆன் 73:20)
இவ்வசனமானது வாணிப நோக்கில் பூமியின் பல பாகங்களுக்கும் பயணம் செய்வதை அனுமதிக்கிறது. இந்த வகையில் ஒரு முஸ்லிம் எந்தப் பாகத்திற்கும் சென்று அங்கு குடியேறி வாழலாம். பல நாடுகளில் இஸ்லாம் வர்த்தக நோக்கோடு பயணித்த வியாபாரிகளாலேயே அறிமுகமானது என்பது இங்கு ஈண்டு குறிப்பிடத்தக்கது.
“உம்மை முழு மனித சமூகத்திற்குமான தூதராகவே நாம் அனுப்பினோம்.”
(அல்-குர்ஆன் 34:28)
இவ்வசனமானது இஸ்லாத்தின் சர்வதேசத் தன்மையைப் பறைசாற்றுகிறது. முஸ்லிம்கள் தாம் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் பிரஜாவுரிமை பெறுவதன் மூலம் இஸ்லாத்தின் உன்னத கோட்பாடுகளையும், சிறப்பம்சங்களையும் பற்றி ஏனைய சமூகத்தினருக்கு எடுத்துச் சொல்லும் வாய்ப்புக் கிடைக்கிறது.
ஸுன்னாவிலிருந்து
———————————-
“நாடுகள் அனைத்தும் அல்லாஹ்வின் தேசங்களாகும். மனிதர்கள் அனைவரும் அல்லாஹ்வின் அடியார்களாவர். நீ எங்கு நலவைப் பெற்றுக் கொள்கிறாயோ அங்கு தங்கிக்கொள்”
என நபியவர்கள் ஒரு தோழருக்கு ஆலோசனை கூறினார்கள். (அஹ்மத்)
நூலின் நான்காவது தலைப்பான நற்பிரஜைத்துவமும் தேசப்பற்றும் என்ற பகுதி பிரமாதம். இஸ்லாத்தில் இன, மொழி, பிரதேச வாதங்களுக்கு இடமில்லை. ‘உம்மா’ எனும் கோட்பாடே இஸ்லாத்தின் ஆன்மா. இஸ்லாம் இனம், மொழி, நாடு முதலான அனைத்து எல்லைகளையும் கடந்து உலகளாவிய மனித சமுதாயத்தினரை இறையடியார்களாக, சகோதரர்களாகப் பார்க்கிறது. அதேநேரம் இன, மொழி, தேசம் மீதான பற்றுக்கும் உணர்வுக்கும் இஸ்லாம் மதிப்பளிக்கிறது. ஏனெனில்  அது யதார்த்தமானது. மனிதனது இயல்புடனும், மனித சுபாவத்துடனும் ஒத்துச் செல்கிறது. இஸ்லாம் இயற்கையின் மார்க்கமாக (தீனுல் பித்ரா) திகழ்வதே இதற்குக் காரணமாகும்.
இதுபற்றி அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது.
“மனிதர்களே! உங்களை நாம் ஓர் ஆணிலிருந்தும் ஒரு பெண்ணிலிருந்தும் படைத்தோம்.”
(அல்-குர்ஆன் 49:13)
தேசப்பற்றின் வெளிப்பாடுகளாக பின்வருவனவற்றை அடையாளப்படுத்தலாம்.
# தேசத்தின் ஜனநாயக விழுமியங்களை மதித்தல்.
# தேசத்தின் சட்ட யாப்பு மற்றும் சட்டம் போன்றவற்றை மதித்தல்;
அவற்றுக்குக் கட்டுப்படல்.
# தேசியக் கொடி மற்றும் சின்னங்களை மதித்தல்.
# தேசிய விவகாரங்களில் பங்கேற்றல்.
இதனை வாசிக்கும் போது பேராசிரியர் தாரிக் ரமழானின் 3L கோட்பாடும், மர்ஹூம் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி அவர்களின் மதசகிப்புத்தன்மை சிந்தனையும் நினைவலைகளில் மின்னலாய்ப் பளிச்சிடுகின்றது.
பேராசிரியர் தாரிக் ரமழான் எகிப்தைப் பிறப்பிடமாகக் கொண்டாலும், பிரான்ஸ் நாட்டிலேயே வாழ்ந்து வரும் தற்கால மிகப் பெரும் இஸ்லாமிய அறிஞர் ஆவார்.
ஐரோப்பிய நாடுகளில் சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம்களின் பால் அதீத கவனம் செலுத்திய பேராசிரியர் தாரிக் ரமழான் அரபு மற்றும்  இஸ்லாமிய நாடுகளில் வாழும் முஸ்லிம்களின்  வாழ்க்கை முறைக்கும், சிறுபான்மை முஸ்லிம்களாக வாழும் முஸ்லிம்களின் வாழ்க்கை முறைக்கும் பாரிய வேறுபாடு இருப்பதை சமகாலத்தில் அல்லாஹ்வின் பேரருளினால் தனது அறிவுத் தீட்சன்யத்தின் மூலம் இவரை விட அறிந்தவர் வேறு யாராகவும் இருக்க முடியாது.
பேராசிரியர் தாரிக் ரமழானின்
3L கோட்பாட்டுக்கு வருவோம்.
1- L- Language.
அந்நாட்டு மொழியை அறிதல் : –
மொழி என்பது வெறும் பாஷையோடு மட்டும் நிற்பதில்லை.மாறாக அந்த மக்களின் பண்பாடு, கலாசாரம்,
பழக்கவழக்கம், உடை,
ஆபரணங்கள், உணவுப்பழக்கங்கள்,
விழாக்கள், பண்டிகைகள், மத அனுஷ்டானங்கள் என அது விரிந்து செல்கிறது.
மெய்யியலாளர் விக்கின்ஸ்ரைன் தற்கால பிரச்சினைகளின் மூலம் மொழி பற்றிய புரிதல் இல்லாததே என்றார். அவர் இங்கே மொழி எனக் கூறியது. மேற்சொன்ன விரிந்த பொருளில் தான்.
2- L- Laws.
நாட்டு சட்டங்களை மதித்தல் :-
அந்தந்த நாடுகளுக்கென சில சட்டங்கள் உள்ளன. அவற்றை மதித்தே வாழ வேண்டும்.
உதாரணமாக
ஒவ்வொரு நாட்டிலும்
# போக்குவரத்து விதிகளுக்கான சட்டம்.
# குற்றத் தடுப்புச் சட்டம்
# பாதுகாப்புச் சட்டம்
# மதக் கிரியைகளுக்கான சட்டம்
# அரசியல் அமைப்புச் சட்டம்
# வரி விதிப்புச் சட்டம்
# கல்விச் சட்டம் என அமையும்.
3- L-Loyalty.
உண்மைப் பற்றுடன் வாழுதல் : –
நாம் வாழும் தேசம் என்ற வகையில் அதற்கு எப்போதும் விசுவாசமாக இருப்பதோடு, அதன் இறைமைக்கு எவ்வித பாதிப்பும் ஒருபோதும் ஏற்படாதவாறு செயற்பட வேண்டும்.
அடுத்தவரைப் போன்று எனக்கும் இந்த நாட்டில் எல்லா உரிமைகளும், சலுகைகளும் உண்டு. என்ற வகையில் அவரவர் தகுதிக்கேற்ப பங்களிப்புகளை
(அறிவு, ஆன்மீக, பொருளாதார ,அரசியல், சமூக, உடலியல், பாதுகாப்பு ரீதியாக) வழங்குதல்.
எமது நாட்டைப் பொறுத்த வரை எமது முன்னோர்கள் இப்படித்தான் வாழ்ந்து, அதே நேரம் தமது மார்க்கக் கடைமைகளில் தனித்துவம் பேணி, கரைந்து விடாமல் கலந்து வாழ்ந்து பல உரிமைகளையும் பெற்றெடுத்து எமக்குத் தந்துள்ளனர். எடுத்துக் காட்டாக, ஜூம்ஆ சலுகை, றமழான் விடுமுறை, மத்ரஸாக்கள், பள்ளிவாசல்கள்,
பல்கலைக்கழகத்தில் அரபு மொழி கற்கை,முஸ்லிம் தனியார் சட்டம், பர்தா சீருடை  என்று தொடர்கிறது.
எமது முன்னோர்கள் பொருளாதார ரீதியாக சுதந்திரத்திற்கு முன்னரும், பின்னரும் இந்நாட்டுக்குச் செய்த பங்களிப்பு மகத்தானது. இதனை சிலாகித்தே சுதந்திர தேசத்தின் முதலாவது பிரதமர் டீ.எஸ்.சேனநாயக்க அவர்களினால்
“பொருளாதாரத்தில் இந்நாட்டின் முதுகெலும்புகள் முஸ்லிம்கள் “
என்று கூறி போற்றியுள்ளதை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய சிறப்பம்சமாகும். முதுகெலும்பு ஒரு மனிதனுக்கு எவ்வளவு முக்கியத்துவம் என்பதை நாம் அறிவோம்.
இந்த நாட்டை மன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில் மன்னருக்கு மிகமிக விசுவாசமாக இருக்க வேண்டிய
1-  சமயற்காரர்
2- வைத்தியர்
3- மெய்ப் பாதுகாவலர், போன்ற பதவிகளுக்கு  முஸ்லிம்கள் இருந்திருக்கின்றனர் என்பதை நாம் துல்லியமான வரலாற்று  ஆதாரத்துடன் அறிகிறோம்.
இதனை விட நம்பிக்கைப் பற்று இருக்க முடியுமா?
“மத சகிப்புத் தன்மை என்பது , மதங்களுக்கிடையில் உரையாடல் என்பது, ஒவ்வொரு மதமும் அதனுடைய கொள்கையை, அடிப்படைக் கோட்பாடுகளை விட்டுவிடுவதல்ல. அவரவர்களது மதத் தனித்துவத்தை, மதக் கோட்பாடுகளைப் பாதுகாத்துக் கொண்டு, ஏனைய மதங்களின் அடிப்படைகளைப் புரிந்து கொண்டு நல்லுறவை வளர்ப்பதாகும். அந்த வகையில் இஸ்லாத்துக்கும் பௌத்தத்திற்குமிடையில் சில பொதுவான ஒழுக்கக் கோட்பாடுகள் இருக்கின்றன. கருணை, அன்பு, உயிரினங்கள் மீது அன்பு காட்டுதல், பொறுமை,மன்னிப்பு, சகிப்புத் தன்மை, தாராளத் தன்மை போன்றவை இஸ்லாம், பௌத்தம், இந்து, கிறிஸ்தவம் என்பவற்றுக்கிடையிலுள்ள பொதுவான ஒருமைப்பாடுகள்.”
உண்மையில் இந்த நூல்; இஸ்லாமிய ஆட்சியில் முஸ்லிம் அல்லாதவர்கள் எவ்வாறு சுபீட்சமான வாழ்வு வாழ்ந்தனர் என்பதனை,
– மதீனா சாசனம் (உடன்படிக்கை)
– நஜ்ரான் தேச கிறிஸ்தவர்களுடனான உடன்படிக்கை.
– யூத சமூகத்தினருடனான பல உடன்படிக்கைகள்.
என பல்வேறு கண்ணோட்டங்களில் விளங்கப்படுத்தியிருப்பது
கலாநிதி முஹம்மத் இமாராவின்
‘தபாஹூமுத்தீனி பில் இஸ்லாம்’ (மத சகிப்புத்தன்மையும் பன்மைத்துவமும்) என்ற நூலில் கூறப்பட்ட மேற்படி விடயங்களை ஒத்ததாக வாசகர்களை ஆர்வத்துடன் வாசிக்கத் தூண்டுகிறது.
உண்மையில் இந்தப் புத்தகத்தை வாசித்துக் கொண்டு செல்லும் பொழுது நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாகவும்,
சகவாழ்வுடனும் வாழ்வதை உறுதிப்படுத்தும் வகையில் இலங்கையின் அரசியல் யாப்பிலிருந்து மிகத் துல்லியமான ஆதாரங்களை காட்டியுள்ளமை உஸ்தாத் அஷ்ஷெய்க் ஏ.ஸீ.அகார் முஹம்மத் அவர்களை ஒரு சிறந்த அரசியல் விஞ்ஞானத்துறை ஆய்வாளராகக் காட்டுகிறது.
அதே போன்றே இலங்கையில், மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்களின் வகிபாகங்களை வாசிக்கும் போதும் நூலாசிரியர் அவர்களை ஒரு சிறந்த வரலாற்று ஆய்வாளராகவும் சித்தரிப்பதை மேற்படி இரண்டு பாடங்களிலும் ஓரளவு பரிச்சயமானவன் என்பதால் என்னால் அவ்வாறு உணர முடிகிறது.
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *