இலங்கை செய்திகள்
உருமாறிய வைரஸ் இலங்கையிலும் வேகமாக பரவுமா?

இங்கிலாந்தில் பரவியுள்ள புதியவகை கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவக் கூடியது. எமது நாட்டுக்கும் இது தொடர்பான எச்சரிக்கை காணப்படுவதால் இங்கிலாந்திலிருந்து வரும் விமானங்கள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில்,
கடந்த செப்ரெம்பர் மாதம் முதல் இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை வைரஸ் இனங்காணப்பட்டது.
எனினும் அதற்குள் அங்கிருந்து சிலர் நாட்டை வந்தடைந்துள்ளனர். அவ்வாறு இலங்கை வந்த கிரிக்கட் விளையாட்டு வீரர்கள் குழுவில் ஒருவருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளான குறித்த நபர் எமது நாட்டிலுள்ள எந்தவொரு பிரஜையுடனும் நேரடி தொடர்புகளை பேணியிருக்கவில்லை. எனவே இலங்கையில் அந்த வைரஸ் சமூகப்பரவலாகும் வாய்ப்புக்கள் இல்லை. குறித்த நபருக்கு முறையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதால் அவரூடாக ஏனையோருக்கு பரவும் வாய்ப்பு முற்றிலும் இல்லை
இது வரையில் தயாரிக்கப்பட்டுள்ள கொவிட் தொற்றுக்கான தடுப்பூசியின் மூலம் உருமாறிய புதிய வகை வைரஸ் பரவலையும் கட்டுப்படுத்த முடியும் என்று இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.