சர்வதேசம்
உள்நாட்டுக்கு உள்ளான பயணத் தடை நீடிப்பு

இத்தாலியில் உள்நாட்டுக்கு உள்ளான பயணத் தடையை நீடித்து அந்நாட்டு பிரதமர் மரியோ டிராகி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இத்தாலி பிரதமர் பொது மக்களிடையே பேசும்போது, “ இத்தாலியில் 20 மாகாணங்களுக்கு இடையேயான கரோனா பயணத் தடை மார்ச் மாதம் 27 -ம் தேதிவரை நீடிக்கப்படுகிறது. உருமாற்றம் அடைந்த கரோனா பரவும்வரை கட்டுப்பாடுகளை நீட்டிப்பது அவசியம். ஆனால் இந்த கட்டுப்பாடுகள் வேலை, மருத்துவ தேவைகளுக்கு பொருந்தாது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ரெட் சோன் பகுதிகளில் நிலவும் கட்டுப்பாடுகள் அவ்வாறே தொடரும். என்று இத்தாலி அரசு தெரிவித்துள்ளது.
இத்தாலியின் பல மாகாணங்களில் கரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருப்பதைத் தொடர்ந்து அங்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு மருத்துவ நிபுணர்கள் குழு அறிவுறுத்தியுள்ளது.
இத்தாலியில் இவ்வாண்டின் தொடக்கத்தில் கரோனா பரவல் தீவிரமாக இருந்தது. இதனால் அங்கு ஊரடங்கு பரந்த அளவில் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாகப் பொருளாதாரம் சரிந்தது. எனவே, இம்முறை நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 11 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் வெற்றி பெற்று தற்போது பல நாடுகளில் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.