சர்வதேசம்
ஏமனில் 4 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிப்பு!!

ஏமனில் 5 வயதுக்கும் குறைவான 4 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில், “ஏமனில் 5 வயதுக்கும் குறைவான 4 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், குழந்தைகளின் இறப்பு சதவிகிதமும் அதிகரித்துள்ளது. நாம் போதிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மேலும் குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்படும். லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வியல் முறை சவாலானதாக மாறியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா காலத்தில் நிதித் தட்டுப்பாடு நிலவுவதால் ஏமனில் போரால் பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான குழந்தைகள் பட்டினிக்குத் தள்ளப்படலாம். ஏமனில் உள்ள சுகாதார அமைப்புகள் கரோனா வைரஸைச் சமாளிக்கப் போராடி வரும் சூழலில் அங்கு குழந்தைகளின் நிலைமை மிக மோசமடைந்துள்ளது என்று ஐ.நா. முன்னரே தெரிவித்து இருந்தது.
அதுமட்டுமல்லாது, உலக சுகாதார அமைப்பு, யுனிசெஃப், உலக உணவுத் திட்டம், உணவு மற்றும் வேளாண் அமைப்பு ஆகிய 4 அமைப்புகளும் கடந்த சில மாதங்களாகவே ஏமனில் நிலவும் உணவுப் பற்றாக்குறை குறித்து தொடர்ந்து எச்சரிக்கை கொடுத்து வருவது நினைவுகூரத்தக்கது.
தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.
மேலும், ஐக்கிய அமீரக ஆதரவு ஏமன் தென்பகுதி பிரிவினைவாதிகள், ஏமன் அரசுக்கு எதிராகச் சண்டையிட்டு வந்தனர். ஏமனில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏமன் போரில் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.