தொழில்நுட்பம்
கடன் வழங்கும் செயலிகளை நீக்கியது கூகுள் நிறுவனம்

தனிநபர் கடன் வழங்கும் செயலிகளின் நடவடிக்கைகள் குறித்து அதிகளவில் புகார்கள் எழுந்துள்ள நிலையில் கூகுள் நிறுவனம் அதன் பிளே ஸ்டோரிலிருந்து இத்தகைய பல செயலிகளை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
அண்மைக் காலமாக மிகக் குறைந்த அளவிலான தொகையை கடனாக வழங்குவதற்கு என நிறைய செயலிகள் வந்துள்ளன. இவை பெரிய அளவில் எந்த பிணையும் பெறாமல் சொற்ப தொகைகளைக்கூட தனிநபர் கடன்களாக வழங்குகின்றன. ஆனால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அல்லது தாமதமாகும் போது பணத்தை வசூல் செய்ய மிகத் தவறான வழிகளை இந்நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.
பெரும்பாலும் கடன் வாங்கியவரின் செல்போனில் உள்ள நம்பர்களை அவர் அறியாமல் எடுத்து விடுகிறார்கள். அதன் மூலம் சம்பந்தப்பட்ட நபர்களின் தொடர்பில் இருப்பவர்களுக்கு போன் செய்து கடனை திருப்பித் தராதது குறித்து பேசி அவமானப்படுத்துகின்றன. மேலும் அந்நபரின் போட்டோவுடன் ‘கடனை திருப்பித் தராதவர்’ என போஸ்டர்கள் ரெடி செய்து வாட்ஸ்ஆப் உள்ளிட்டவை மூலம் அனுப்பி வைத்து அசிங்கப்படுத்துகின்றன. இது போன்ற செயல்களால் கடன் வாங்கிய சிலர் தற்கொலை செய்துள்ளனர்.
இந்நிலையில் கூகுள் நிறுவனம் இந்தியாவில் இதுபோன்ற நூற்றுக்கணக்கான கடன் வழங்கும் செயலிகளை ஆய்வு செய்து பயனர்களுக்கான பாதுகாப்பு கொள்கைகளை மீறிய செயலிகளை கூகுள் பிளேஸ்டோரிலிருந்து நீக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. நீக்கியவை போக மீதமிருப்பவை நாட்டின் சட்டம் மற்றும் விதிமுறைகளை மீறவில்லை என்பதை நிரூபிக்க சொல்லி உள்ளது. அப்படி செய்யாதபட்சத்தில் அவையும் நீக்கப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது.
இருப்பினும் நீக்கப்பட்ட செயலிகளின் பட்டியலை கூகுள் வெளியிடவில்லை. இதற்கிடையே ரிசர்வ் வங்கியும் இந்த ஆன்லைன் நிறுவனங்கள் குறித்த ஒழுங்குமுறை நடவடிக்கைகளை பரிந்துரைக்க ஒரு செயற்குழுவை புதன்கிழமையன்று அமைத்துள்ளது.