Connect with us

கட்டுரை

கடலில் காணாமல் போகும் கிழக்கு மீனவர்களின் வாழ்க்கை ! தினம் உடமைகள் இழந்து உயிருடன் போராடுகிறார்கள் !!

Published

on

மீன்பிடி என்பது இலங்கையின் பொருளாதாரத்தின் மிகமுக்கிய பங்கை வகிப்பது. அதிலும் கிழக்கு மாகாணம் மீன்பிடியில் எப்போதும் முதன்மையான பிரதேசமாக இருந்துவருகிறது. கிழக்கு மக்களில் முக்கால்வாசிக்கும் அதிகமானவர்கள் மீன்பிடியுடனும் கடலுடனும் கடற்கரையுடனும் நேரடி உறவை கொண்டவர்கள். சுனாமியால் அதி உச்ச பாதிப்பை கிழக்கு மக்கள் சந்தித்திருந்தும் கடலுடனான காதல் முறியவில்லை எனலாம்.

அதிலும் அம்பாறை மாவட்டத்தில் சுனாமி பாதிப்பு அதிகம். கிராமங்கள் அடியோடு அழிந்தது முதல் உயிர்கள் பல ஆயிரம் அழிந்தது வரை அந்த மக்களின் இழப்புக்கள் அதிகம். ஆனால் இன்றைய சூழ்நிலையில் அதை விடப்பெரிய ஆபத்தொன்றை அவர்கள் எதிர்நோக்கியுள்ளார்கள். அதுதான் கடலரிப்பும்,  கடல் கொந்தளிப்பும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப் கண்ட கனவின் பிரதிபலிப்பாக அவரின் இளசுகள் சேர்ந்து உருவாக்கிய திட்டமிடா வேலைத்திட்டமே ஒலுவில் துறைமுகம். கம்பு எடுத்தவர்களெல்லாம் வேட்டைக்காரர்களாகி இப்போது அப்பிரதேச மக்களின் ஒவ்வொரு நாளும் திக்திக் நிமிடங்காளாக மாறியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டினதும் இறுதி மாதங்கள் கடலின் கொந்தளிப்பு அதிகமாக இருக்கும். அப்போது மீனவர்கள் தங்களுடைய தொழிலை நிறுத்தி தங்களுடைய மீன்பிடி வள்ளங்களை கரைக்கு இழுப்பார்கள். அல்லது ஒரு ஒழுங்கான துறைமுகம் இருந்தால் அதனில் தரித்து நிறுத்துவார்கள். அதுதான் வழமை. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறி எல்லாம் போராட்டங்களாக உருவெடுத்துள்ளது.

அம்பாறையில் கல்முனை தொடக்கம் பொத்துவில் வரை இருக்கின்ற ஆழ்கடல் மீனவர்கள் ஒலுவில் துறைமுகம் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டபின் வாழைச்சேனை துறைமுகத்தை தற்போது பயன்படுத்தி வருகின்றனர் மேலும் ஒலுவில் துறைமுகம் அமைப்பதற்கு முதல் மிக நீண்ட காலமாக இப்பகுதி மக்கள் வாழைச்சேனை துறைமுகத்தை பயன்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்க விடயம். ஆனால் தற்போது வாழைச்சேனை துறைமுகத்தில் காணப்படும் மீன்பிடி படகுகளை கல்முனை தொடக்கம் பொத்துவில் வரையிலான மீன்பிடி தொழிலாளர்கள் தொழிலுக்குப் பயன்படுத்துவதற்கு முடியாத சூழ்நிலையை தடைவிதித்து வாழைச்சேனையில் இருக்கின்ற சில குழுக்களும் பொதுமக்களும் சேர்ந்து தடுத்து வருகின்றனர் .
இது சம்பந்தமாக ஆராய்ந்தபோது கல்முனைப் பிராந்தியத்தில் தற்பொழுது கோபிட்19 நோய் அதிகரித்து உள்ளதால் இங்கு உள்ளவர்கள் அங்கு வந்து படகுகளை எடுத்து செல்லும் பொழுது வாழைச்சேனை பிரதேசத்தில் நோய் பரவும் என்ற அச்சத்தினால் இதை தடுப்பதாக சொல்லுகின்றனர். இதனால் அம்பாறை மாவட்ட மீனவர்களின் இறுதி நம்பிக்கையும் இழக்கப்பட்டுள்ளது.

ஒலுவில் மீன்பிடி துறைமுகத்திலுள்ள படகுகள் பயணிக்கும் வழியை மணல் மூடியுள்ளது. இதனால், மீனவர்கள் கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட முடியாத நிலை உள்ளது. ஒலுவிலுக்கு வந்திருந்த துறைமுகங்களுக்குப் பொறுப்பான அப்போதைய அமைச்சர் மஹிந்த சமரசிங்க, முதல் இப்போதைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வரை ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தின் படகுப் பாதையை மூடியுள்ள மணலை அகற்ற வாக்குறுதியளித்தார்கள் ஆனால் நடந்தது எதுவுமில்லை. ஒலுவிலில் துறைமுகம் அமைக்கப்பட்ட பின்னர்தான், தங்களது பகுதியில் கடுமையான கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளதாக, ஒலுவில் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். தமது பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள தீவிர கடல் அரிப்பை தடுத்து நிறுத்துவதற்கு வழி செய்யாமல், மீன்பிடித் துறைமுக படகுப் பாதையை மூடியுள்ள மணலை அகற்றக் கூடாது என ஒலுவில் பிரதேச மக்கள் அமைதிப் போராட்டம் ஒன்றையும் நடத்தினர்.

கடல் அரிப்பால் நிலப்பரப்பில் கடல் நீர் புகுந்துள்ளதுடன் அப்பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள், கட்டிடங்கள் அழிந்துள்ளன. கடல் அரிப்பை தடுப்பதற்காக கடலுக்குள்ளும், கரைப்பகுதியிலும் பெரிய பாறாங்கற்கள் கொட்டப்பட்டுள்ள போதிலும், கடல் அரிப்பின் தீவிரம் குறையவில்லை. இதனால் ஒலுவில், அட்டாளைசேனை, பாலமுனை, நிந்தவூர், காரைதீவு, மாளிகைக்காடு, சாய்ந்தமருது, கல்முனை ஆகிய ஊர்கள் கடுமையாக பாதித்துள்ளது. முஸ்லிம் மையவாடிகள், மீனவர்களின் வாடிகள், அரச கட்டிடங்கள் என பலதும் இந்த கடலரிப்பில் பாதித்துள்ளது.

சமீபத்தை நாட்களில் மீன்பிடி வள்ளங்கள், வலைகள், மீன்பிடி இயந்திரங்கள் என பலதும் கடலுடன் போரிட்டு தோற்கிறது. இதனால் மீனவர்களுக்கு பல லட்சம் ரூபாய்கள் நஷ்டம் ஏற்படுகிறது. உயிர்களும் மயிரிழையில் தப்புகிறது. சிலர் காயங்களுடன் வைத்தியசாலைகளுக்கும் செல்கிறார்கள். திட்டமிடா திட்டம் ஒன்றின் பிரதிபலிப்பகவே இதை நோக்கவேண்டி உள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பொருளாளர் நிந்தவூர் எம்.பி பைசால் காஸிம் பகிரங்கமாகவே ஒலுவில் துறைமுகத்தை மூடிவிட வேண்டும் என்று அறிவித்தார். அவர் சொன்னது போலவே மிகப்பெரும் ஆபத்தை அப்பிரதேசம் சமீபத்தைய நாட்களில் எதிர்கொண்டுள்ளது.

ஒலுவில் துறைமுகம் 1998ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2013ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. டென்மார்க் அரசு வழங்கிய 46 மில்லியன் யூரோ வட்டியில்லாக் கடன் மூலம், இந்தத் துறைமுகம் அமைக்கப்பட்டது. அக் கடன் தொகைக்கும் மானியத்திற்கும் மேலதிகமாக துறைமுக அதிகாரசபையினால் இச் செயற்திட்டத்திற்காக ரூபா 426,487,682 தொகை 2000 ஆம் ஆண்டிலிருந்து 2010 ஆம் ஆண்டு வரையான காலத்தில் செலவிடப்பட்டிருந்தது. வர்த்தகம் மற்றும் மீன்பிடி ஆகியவற்றுக்கென இங்கு இரண்டு துறைமுகங்கள் அமைக்கப்பட்டுள்ளபோதும், வர்த்தகத் துறைமுகம் இன்னும் இயங்க ஆரம்பிக்கவில்லை. மீன்பிடித் துறைமுகம் மட்டுமே, பல்வேறு குறைபாடுகளுக்கு மத்தியில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

ஒலுவில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்பட்டமையினால் பாரிய மண்ணரிப்பை எதிர்கொள்வதாக பிரதேச மக்களினால் குற்றஞ்சாட்டப்படும் கடற்கரை பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிலமைகளை நேரடியாக அவதானித்தார்.

இன்றையதினம் (15.03.2020) குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சரிடம் குறித்த பிரதேச கடற்றொழிலாளர்களின் பயன்பாடிற்காக அமைக்கப்பட்ட எரிபொருள் தாங்கி கடந்த 15 வருடங்களாக பழுதடைந்து இருக்கின்ற நிலையில் அதனை சீரமைத்து தருமாறு அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் இறங்குதுறை மற்றும் நவீன குளிரூட்டப்பட்ட களஞ்சிய அறை உட்பட்ட கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்ட கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், ஒலுவில் துறைமுகம் அமைக்கப்பட்டதனால் கடலரிப்பு பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படும் பிரதேசங்கள் தொடர்பாக ஆய்வு செய்து நிரந்தர தீர்வை மேற்கொள்கின்ற அதேவேளை, ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் செயற்பாடுகளை இந்த மாத இறுதிக்குள் ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். ஆனால் இன்றுவரை அது வாக்குறுதியாகவே இருக்கிறது ஆனால் இன்னும் அது செயற்பாட்டுக்கு வரவில்லை.

அம்பாறை மாவட்ட எம்.பிக்கள் எல்லோருக்கும் வாக்கு சேகரிக்கும் பிரச்சினையாக உள்ள இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு அவசரமாக தேவைப்படுகின்றது. கடல் இருக்கிறது. கடற்கரை இல்லாமல் இருக்கிறது என்கிறார்கள் மீனவர்கள். படகு தரித்து நிறுத்த இடமில்லாமல் வீதியோரங்களில் படகுகள் தரித்து நிறுத்தப்படுகின்ற அவல நிலை தொடர்கிறது. மீன்பிடியையும் கடல் சார் தொழிலையும் நம்பி லட்சக்கணக்கான மக்களும் ஆயிரக்கணக்கான குடும்பங்களும் இருக்கிறது. நீதி கேட்டு இயந்திர படகுகளை கொண்டு வீதிமறியல் போராட்டம் செய்தும் இதுவரை நிரந்தர தீர்வுகள் இல்லை என அங்கலாய்க்கின்றனர் மீனவர்கள்.

அமைதியாக பொறுமையாக கையாளும் பிரச்சினையல்ல இது. உடனடி தீர்வு தேவையான ஒன்றாக இருக்கும் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை அரசு பெற்றுத்தர வேண்டும் எனும் மீனவர்களின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *