இலங்கை செய்திகள்
கடுமையான முடக்க நிலையை அமுல்படுத்துவதன் அவசியம்

இலங்கையில் கொரோனா வைரஸ் இந்த வருடம் மார்ச் மாதமளவில் ஏற்பட்டது. அந்தவேளையில் நாடுமுழுவதிலுமே ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தி அரசு கொரோனா வைரஸை பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இருந்தாலும் கம்பஹா ஆடைத்தொழிற்சாலையில் தொற்று மீண்டும் ஏற்பட்ட நேரம் அதைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு மேற்கொண்ட நடவடிக்கை போதாதாகவே இருந்தது. இந்த நிலை காரணமாகவே இன்று கொரோனா இலங்கை முழுவதும் ஆட்டிப்படைக்க ஆரம்பித்திருக்கின்றது. குறிப்பாக மேல் மாகாணத்தில் இதன் கோரத்தாண்டவம் அதிகரித்துக் கொண்டு செல்கின்றது. நிலைமை இவ்வாறே செல்லுமாக இருந்தால் மிகக்கடினமான ஒரு சூழ்நிலையை இலங்கை சந்திக்க வேண்டி வரும். இந்தப் பண்டிகைக்காலத்தை கருத்திற்கொண்டு உடனடியாக பூரணமுடக்க நிலையை வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.
ஏனெனில் மேல்மாகாணம் என்பது மிகவும் சன அடர்த்தி கூடிய மாகாணமாகும். அதுமாத்திரமல்ல அங்கு பெருமளவு மக்கள் தங்கி வாழக்கூடியவர்களாகவும் இருக்கின்றார்கள். இந்த நிலைமைகளைக் கருத்திற் கொண்டு மேல்மாகாணம், தென்மாகாணம், மத்தியமாகாணம் போன்ற சன அடர்த்திகூடிய மாகாணங்களில் பூரண ஊரடங்கு உத்தரவு அமுல் படுத்தப்படவேண்டியது மிகவும் அவசியமானதாகக் காணப்படுகின்றது. அவ்வாறு இல்லாமல் போகுமாக இருந்தால் இன்னும் பல ஆயிரக்கணக்கான தொற்றாளர்கள் ஏற்பட்டு மிகப்பயங்கரமான பாதிப்புக்களை இந்த நாடு சந்திக்க வேண்டிவரும்.
இன்றைய நிலையில் பொருளாதாரம் என்பது மிகவும் மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கின்றது. அதேசமயம் எதிர்காலப் பொருளாதாரத்தைப் பாதிக்கக்கூடிய வகையில் கல்வி நடவடிக்கைகளில் பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆகவே இந்த நிலைமையைக் கருத்திற்கொண்டு குறைந்தது ஒருமாதத்திற்காவது மிகப்பயன் மிக்கதான ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட வேண்டும்.
இலங்கையில் பெருமளவு நிதியினை பாதுகாப்புத்துறை பெற்றுக் கொள்கின்றது. ஆகவே பொருளாதாரரீதியாக இந்த நிதியினைப் பெற்றுக் கொள்ளும் பாதுகாப்புத்துறை இந்த நாட்டைப் பூரணமாகப் பாதுகாக்க வேண்டியது அதன் கடமையாகும். ஆகவே இலங்கையில் இருக்கக்கூடிய முப்படையினரும், பொலிஸாரும் கொரோனா ஒழிப்பிற்காக பூரணமாகப் பயன்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமானதாகும். அவ்வாறே சுகாதாரத் துறையினரும் சில மாதங்களுக்கு மீண்டும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். அவ்வாறு செயற்படா விட்டால் மேலும் பல உயிரிழப்புக்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
தடுப்புமருந்து கண்டுபிடிப்பு
இன்று அமெரிக்க, பிரித்தானியா, ரஷ்யா போன்ற நாடுகளில் கொவிட் 19 வைரஸுக்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டதான செய்திகள் வெளிவந்து உலகமக்களுக்கு ஆறுதல் அளிக்கக்கூடியதாக இருக்கின்றது. 10 டொலர்கள் தொடக்கம் 33 டொலர்கள் வரையான விலையில் இந்த மருந்துகள் விநியோகிக்கப்படுவதாக அந்த நாடுகளிலிருந்து செய்திகள் வருகின்றன. அதேசமயம் பலநாடுகளில் இந்த ஊசி மருந்துகள் ஏற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு மகிழ்ச்சிகரமான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. ஆகவே இந்த மருந்துகள் வெகுவிரைவில் இலங்கைக்கும் வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பில் இலங்கை மக்கள் இருக்கின்றார்கள். ஆகவே இந்த மருந்து வரும் காலப்பகுதிக்கிடையில் இங்கு கொரோனா பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுமாக இருந்தால் அது மக்களுக்கு மிகுந்த ஆறுதல் அளிப்பதாக அமைந்திருக்கும். எனவே அரசாங்கம் இந்த விடயத்திலும் கரிசனையாக இருப்பது அவசியமானதாகும்.
அதுமாத்திரமல்ல இந்தக் கொரோனா ஊசி முழு இலங்கையர்களுக்கும் ஏற்றப்படுமாக இருந்தால் அதற்கு பெருமளவு நிதியும் இலங்கைக்குத் தேவைப்படும். சர்வதேச சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனையுடன் பல்வேறுபட்ட நாடுகளும் இலங்கைக்கு நிதி வழங்கத் தயாராக இருக்கின்றது. இந்த நிலைமையில் தற்காலிகமாக கொரோனாவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது இலங்கை அரசாங்கத்திற்கு மிக முக்கியமான பணியாக அமைந்திருக்கின்றது.