Connect with us

இலங்கை

கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 199 வது வருடாந்த கொடியேற்ற விழா.

Published

on

கல்முனை  நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீபின் (கடற்கரைப் பள்ளி வாசல்) 199 வது வருடாந்த கொடியேற்ற விழா எதிர்வரும்  14.01.2021ம் திகதி ஆரம்பமாவதையிட்டு இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகின்றது.

மனிதர்கள் வாழும் ஒவ்வொரு பிரதேசத்திற்கும் அல்லது ஊருக்கும் வரலாற்றுச்சான்றுகள் அதிகமாக உள்ளன. இவ்வாறுதான் கல்முனை நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீபிற்கும் அந்த வளவில் அமைந்திருக்கும் ஒவ்வொரு கட்டிடத்திற்கும் அதில் அமைந்திருக்கும் பள்ளிவாசல்களுக்கும் மிக நீண்ட சுவாரசியமான வரலாறுகள் நிறைந்து காணப்படுகின்றன. கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீப் கல்முனை  மக்கள் மட்டுமல்ல முழு நாட்டு மக்களும் பெற்ற ஒரு வரலாற்று பொக்கிஷம்.

கல்முனை மாநகரத்தின் கிழக்கே பரந்து விரிந்து இருக்கும் அழகிய கடலோரம் இப்பள்ளி வாசல் அமைந்துள்ளதனால் இதனை எல்லோரும் கடற்கரைப் பள்ளிவாசல் என்றும், கொடியேற்றப்பள்ளி என்றும் அழைக்கின்றனர்.

இந்நாளில் தான் உலகின் இருளகற்றி ஒளியூட்ட வந்த நபி பெருமானார் முகம்மது நபி (ஸல்) அவர்களின் 23 வது தலை முறையில் செய்யது ஹசன் குத்துஸ், செய்யது பாத்திமா தம்பதிகளுக்கு மகனாக ரபீயுல் ஆகிர் மாதம் வெள்ளிக்கிழமை இந்தியாவின் மனிக்கபூர் என்னும் ஊரில் பிறந்தவர் தான் சங்கைமிகு சாகுல் ஹமீது ஒலியுல்லா அவர்கள்.

இஸ்லாத்தின் ஞான விளக்கை பரந்த உலகின் பல்வேறு பாகங்களுக்கும் எடுத்துச் சென்று இருளகற்றி ஒளிபெறச் செய்த பெருமை பல மகான்களையே சாரும். தன்னலம் மறந்து மக்களுக்கு அறிவூட்டி தொண்டு செய்வதையே வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டு ஊன் அற்று உற்றார் உறவினரை விட்டு இறைவனது வழி நடந்து எல்லா உலகத்தையும் இன்ப வாழ்க்கையில் ஆழ்த்த நினைத்து இறைதொண்டாற்றிய ஒருபெரும் மகானே சங்கை மிகு சாகுல் ஹமீது ஒலியுல்லா.

அப்பெரு மகானின் நினைவுச்சின்னம் அவர்கள் மறைந்து பல ஆண்டுகள் சென்ற பின்னரும் அவர் செய்த இறைத் தொண்டின் பலனாக பூத்துக்காய்த்து கனிந்து வருகின்றது. அவர்களின் வாழ்க்கை உலக மக்களுக்கு மிக உன்னதமான படிப்பினையும் முன் மாதிரியுமாகும்.

நாகூர் அண்ணல் சாகுல் ஹமீத் ஆண்டகை அவர்கள் மனித சமூகத்திற்கு ஆற்றிய தொண்டுகள் அளப்பரியன. மானிக்கபூரில் பிறந்து  அரபு மொழி வல்லுனராய் தந்தை தாயைத் துறந்து ஞான வழி நடக்க விளைந்து ஆண்டவனின் பாதையில் இறங்கி பிறந்தகம் விட்டு வெளியேறிச் சென்று பெரும் அற்புதங்கள் செய்த பெருமானாரின் சரிதையை நினைக்க நினைக்க உள்ளம் உருகுகின்றது.

தனது எட்டாவது வயதிலேயே குர்ஆன் ஓதி மண்ணமிட்டு முடித்தார்கள். அதன் பின்பு தமது இளம் வயதில் இஸ்லாமிய நற்பணி நோக்கோடு உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்றார். இவர்களின் ஆன்மீக சுற்றுலாவின் ஒரு பகுதியாக எமது நாட்டிற்கும் வந்து தப்தர் ஜெய்லானி எனும் இடத்தை அடைந்தார்.

இலங்கையின் தென்பகுதி கரையை அடைந்தார். அவர்கள் புனித ஸ்தலங்களில் ஒன்றாகிய. நபி ஆதம் (அலை) அவர்களின் பாதம் பட்ட இடத்தினையும் தரிசித்து விட்டு தொடர்ந்தும் கரையோரப் பகுதியாக தென்கிழக்கு நோக்கி வந்தார்.

கடும் நோயினால் அவஸ்தைப்பட்ட இவர் கடலில் நீராடவும் சுத்தமான காற்றைச் சுவாசிக்கவும் கல்முனைக்  கடற்கரையோரம் ஒரு குடிசையை அமைத்து வாழ்ந்து வந்தார். இவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த போதிலும் தமது அன்றாட மார்க்கக்கடமையை செய்து வரத்தவறவில்லை.

கால ஓட்டத்தில் ஒரு வெள்ளிக்கிழமை தமது இரவுத் தொழுகையின் பின் அயர்ந்து துங்கிவிட்ட முகம்மதுத்தம்பி லெவ்வை அவர்களின் கனவில் ஒரு வாட்ட சாட்டமான மனிதர் பூரண சந்திரனை ஒத்த முகத்துடன் தலையில் பச்சை நிறத்தலைப்பாகையுடன் தோன்றி உமது குடிசையின் கிழக்கே சுமார் 100 யார் துரத்தில் கடற்கரை மணல் குவித்து வைத்திருக்கின்றேன். நீர் அவ்விடம் சென்று அடையாளம் இருக்கும் இடத்தில் எனது நினைவாக ஒரு இல்லம் அமைத்து விடும். இன்றுடன் உம்மைப்பிடித்துள்ள நோயும் அகன்று விடும் என் பெயர் சாகுல்ஹமீத் என்று கூறி மறைந்து விட்டார்கள். கண் விழித்து பார்த்த போது பொழுது புலர்ந்து இருந்தது. அவர்களின் உடலில் இருந்த நோய் முற்றாக குணமாகி இருந்ததோடு நோய் இருந்தமைக்கான எவ்வித அடையாளமும் இருக்கவில்லை. உடனேயே இறை வனைப் புகழ்ந்தவர்களாக குறிப்பிட்ட மண் குவியலைத்தேடி கண்ணுற்று அருகிலிருந்த மரங்களைத் தறித்து கம்புகளைக் கொண்டு அவ்விடத்தில் பந்தல் அமைந்தார்.

இச்சம்பவங்களை அன்றைய ஜும் ஆத் தொழுகையின் பின்னர் பொது மக்களிடம் கூறினார். பொது மக்களும் அவ்விடத்து வந்து அடையாளப் பொருட்களை கண்ணுற்றதோடு அவரின் நோயும் முற்றாக குணமாகி உள்ளதையும் அவதானித்தனர். இவற்றை எல்லாம் கண்ணுற்ற மக்கள் பந்தலைச் செப்பனிட்டு தர்ஹாவாக மாற்றினர். சாஹுல் ஹமீத் ஒலியுல்லா பெயரில் மெளலீது ஓதி குர்ஆன் பாராயணம் செய்ததோடு அவர்களின் பெயரில் அன்னதானமும் வழங்கினர். தொடர்ந்து மக்கள் இத்தர்ஹாவில் கூடத் தொடங்கினர். சங்கைமிகு சாஹுல் ஹமீத் ஒலியுல்லாஹ் அவர்களின் பெயரில் மக்கள் அதிக நம்பிக்கை கொண்டு தொடர்ந்தும் அவ்விடத்தில் கூடத்தொடங்கினர். இதனால் சங்கை மிகு சாஹுல் ஹமீது நாயகம் அவர்கள் வபாத்தானார்கள். ஜமாத்துல் ஆகிர் மாதம் தலைப்பிறையுடன் இத் தர்ஹாவில் தொடர்ந்தும் பன்னிரெண்டு நாட்கள் அவர்களின் பெயரில் மெளலீது ஓதப்பட்டு பன்னிரெண்டாம் நாள் மாபெரும் கந்தூரி அன்னதானமும் கொடுக்கும் வழக்கம் ஏற்பட்டது. இதுவே கல்முனை கடற்கரைப் பள்ளிவாசலினதும் அதன் கொடியேற்ற விழாவினதும் வரலாறு ஆகும்.

இக்கொடியேற்றக் காலப்பகுதியில் தர்ஹாவில் தொடர்ந்து பன்னிரெண்டு நாட்கள் மார்க்க சொற்பொழிவுகள், மெளலீது மஜ்லிஸ், பக்கீர் ஜமா அத்தினரின் றாதிபு என்பன சிறப்பாக நடைபெறும். இவ்வாறே 14 ஆம் திகதி கொடியேற்றப்பட்டு அடுத்த 12 நாட்கள் முடிந்தவுடன்  மாபெரும் கந்தூரி அன்னதானத்துடன் இவ்விழா இனிதே நிறைவேறும். இவ்விழாவில் கலந்து கொள்ள உள்நாட்டவர்கள் மட்டுமின்றி வெளிநாட்டவர்களும் வருவதுண்டு. ஒரு நாளில் சுமார் 15000 முதல் 20000 பேர் வரை கலந்துகொள்ளும் இந்த விழாவில் வருடா வருடம் லட்சக்கனக்கானோர் கலந்து கொள்வது சிறப்பம்சம்.

ஏழு அடுக்குகளைக் கொண்ட பிரமாண்டமான மினராவும் மூன்று அடுக்குகளைக் கொண்ட சிறிய மினராவும் அடங்களாக பல மினராக்கள் கம்பீரமாக காட்சி தருகின்றன. இத்துடன் முற்றாக புனரமைப்புச் செய்யப்பட்டுள்ள இத்தர்ஹாவில் மேலும் மூன்று சிறிய மினராக்களும் வானுயர்ந்து கம்பீரமாகக் காட்சி தருகின்றன. இவற்றிலேதான் நாட்டின் சகல பாகங்களிலுமிருந்து வரும் பக்தர்கள் அரசியல் பிரமுகர்கள், அரச உயரதிகாரிகள் முன்னிலையில் ஊர்வலமாக கொடி கொண்டுவரப்பட்டு வருடா வருடம் கொடியேற்றப்படுகின்றது. இவ்விழாவானது கிழக்கிலங்கை இந்து, முஸ்லிம் மக்களினாலும் இன பேதமற்ற முறையில் கொண்டாடப்படுவதனாலும் மிகப்பெரிய மலிவு சந்தைகள் அமைக்கப்படுவதனாலும் இரு சமூகங்களின் உறவுப்பாலமாக கல்முனை கொடியேற்றப்பள்ளி திகழ்கின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கல்முனைக்குடி கடற்கரை எல்லையிலிருந்து 40 மீற்றர் எல்லையில் இருக்கும் அழகிய தர்ஹாவும் பெரிய சிறிய மினராக்களும் கடந்த 2004 ஆம் ஆண்டு உலகை தாக்கிய சுனாமி பேரலைகளினால் தாக்கப்பட்ட போதிலும் தர்ஹாவுக்கும் மினராக்களுக்கும் எவ்வித சிறு சேதங்களும் இல்லாமல் கம்பீரமாக காட்சி தருவது ஆச்சரியம்.

வழமைபோல் இம்முறையும் கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா கொடியேற்ற விழா வெற்றிகரமாக முடிவடைய வேண்டும் எனும் ஏக்கம் பக்தர்கள் மனதில் இருந்தாலும் கொரோனாவின் ஆட்டம் கல்முனையில் இல்லாமலும் இல்லை. சுகாதார வழிமுறைகள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என இம்முறை கொடியேற்றப்பள்ளி வரலாறு காணாத ஒரு தொய்வு நிலையை சந்திக்கபோவது கவலையான விடயமே.


Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *