இலங்கை
கல்முனை மாநகர சபைக்கு எதிரான குப்பை வரி வழக்கு பற்று சீட்டுகள் தொடர்பாக ஆட்சேபனைகள் முன்வைப்பு.

கல்முனை மாநகர சபையால் அறவிடப்படுகின்ற 300 ரூபாய் குப்பை வரியை இல்லாமல் செய்து தடை விதிக்க வேண்டும் என்று கோரி கல்முனை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சுவாரஷியமான திருப்பம் ஏற்பட்டுள்ளது.
மருதமுனையை சேர்ந்த இஸட். ஏ. நௌசாத் என்பவர் சட்டத்தரணி முஹமட் பாருக் மூலமாக இவ்வழக்கை கல்முனை மாநகர சபை, இதன் ஆணையாளர் எம்.சி. அன்ஸார் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்து இம்மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட வீடுகளில் இருந்து அறவிடப்படுகின்ற குப்பை வரி சட்டவிரோதமானது, சட்ட அடிப்படை அற்றது, அநீதியானது என்று முன்வைத்திருந்தார்.
வீட்டு குப்பைகளின் நிறைக்கு ஏற்ப குப்பை வரி அறவிடப்படாமல் ஒவ்வொரு வீட்டில் இருந்தும் தலா 300 ரூபாய் எதேச்சையான முறையில் அறவிடப்படுகின்றது, இது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று அரசியல் அமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ள அடிப்படை உரிமையை மீறுகின்றது என்றும் மனுதாரர் முன்வைத்திருந்தார்.
மாநகர சபையால் இவ்வரியை செலுத்தியவர்களுக்கு பற்றுச்சீட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன என்று முன்வைத்து இவர் அடங்கலாக மூவரின் பற்று சீட்டுகளை முக்கிய ஆதாரங்களாக மனுவில் இவர் ஆவணப்படுத்தி இணைத்திருந்தார்.
இந்நிலையில் இம்மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி மனுவின் பிரதிவாதிகளை ஆதரித்து சட்டத்தரணி காதர் இப்ராஹிம் சஜித் அஹமட்டால் நீதிமன்றத்துக்கு எழுத்துமூல ஆட்சேபனை கடந்த 12 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டது.
இதில் இவ்வழக்கில் மனுதாரர் பிரதானமாக சார்ந்து நிற்கின்ற பற்றுச்சீட்டுகள் என்று சொல்லப்படுகின்ற ஆவணங்கள் முதலாவது பிரதிவாதியான கல்முனை மாநகர சபையால் வழங்கப்பட்டவை அல்லது உறுதிப்படுத்தப்பட்டவை என்பதற்கு எந்தவொரு நிரூபணமும் கிடையாது, இந்த ஆவணங்களை வேண்டும் என்று மனுதாரர்தான் தயாரித்து இருக்க வேண்டும் என்பது பிரதிவாதிகளின் நிலைப்பாடு ஆகும், இந்த ஆவணங்களை பற்றி குறிப்பிடுவதற்கு மனுதாரர் அவருடைய சத்திய கடதாசியில் தவறி உள்ளார், மனுதாரர் ஏற்புடைய முறையில் இந்த ஆவணங்களை சமர்ப்பித்து இல்லை, இவற்றில் இரு ஆவணங்கள் வேறு நபர்களுடையவை என்று முக்கியமாக ஆட்சேபிக்கப்பட்டு உள்ளது.
இதே நேரம் முதலாவது பிரதிவாதியான கல்முனை மாநகர சபையின் சார்பாக மேயர் சட்டத்தரணி ஏ.எம்.
றக்கீபால் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள சத்திய கடதாசியிலும் இதே ஆட்சேபனைகள் முக்கியமாக சமர்ப்பிக்கப்பட்டு முன்வைக்கப்பட்டு உள்ளன.