Connect with us

இலங்கை

கிராமத்துக்கு ஒரு வீடு – நாட்டுக்கு எதிர்காலம்

Published

on

அம்பாறை மாவட்டத்தில் ‘கிராமத்துக்கு ஒரு வீடு – நாட்டுக்கு எதிர்காலம்’ திட்டத்தின் புதிய வீடுகள் பயணாளிகளிடம் கையளிக்கப்பட்டன.          

ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஸவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்துக்கு அமைய வீடமைப்பு அமைச்சர் மஹிந்த ராஜபக்ஸவின் வழிகாட்டலில் தேசிய வீடமைப்பு அதிகார சபையால்  கிராமத்துக்கு ஒரு வீடு – நாட்டுக்கு எதிர்காலம் தேசிய வேலை திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்துக்கு கீழ்  கல்முனை, சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுகளில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை பயனாளி குடும்பங்களிடம் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு (06) நடைபெற்றது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் விசேட பிரதிநிதியாக அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்ட தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் ரேணுக பெரேரா, கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை உறுப்பினர் றிஸ்லி முஸ்தபா, கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது தமிழ் பேசும் மக்களால் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் ரேணுக பெரேராவுக்கு மாலைகள் அணிவித்து, பொன்னாடைகள் போர்த்தி, நினைவு பரிசில்களும் வழங்கி மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர் அயோன் முஸ்தபாவின் புதல்வர் றிஸ்லி முஸ்தபா , இவரின் பிரத்தியேக செயலாளர் ஏ. எல். ஜவாஹிர் ஆகியோரின்; சேவைகளுக்காகவும் நினைவு பரிசில்கள் வழங்கப்பட்டன.

றிஸ்லி முஸ்தபா இங்கு பேசும் போது, முஸ்லிம்கள் என்கிற காரணத்துக்காகவோ, தமிழர்கள் என்கிற காரணத்துக்காகவோ ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஸவின் அபிவிருத்தி வேலை திட்டங்களில் எமது மக்கள் எவருமே புறக்கணிக்கப்படவில்லை. இதற்கு கிராமத்துக்கு ஒரு வீடு – நாட்டுக்கு எதிர்காலம் வேலை திட்டத்தின் கீழ் எமது மக்களுக்கு கட்டி தரப்பட்டு இருக்கின்ற இவ்வீடுகள் மிக நல்ல உதாரணங்கள் ஆகும். ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் நாட்டை மிக திறம்பட முன்னேற்ற பாதையில் இட்டு செல்கின்றது.

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய ஒவ்வொரு வாக்குறுதிகளையும் கோதாபய ராஜபக்ஸ நிறைவேற்றி தந்த வண்ணம் உள்ளார். எனவே நாம் அவருக்கும், அவருடைய தலைமையிலான அரசாங்கத்துக்கும் எமது பூரண ஆதரவை வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.