Connect with us

இலங்கை

கைது செய்யப்பட்டாலும் அவற்றை எதிர்கொள்ளத் தயார்-பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன

Published

on

தான் போர்க் குற்றவாளி அல்ல என்றும் நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் தனது சேவையையே செய்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், ஜெனரல் கமால் குணரத்தன தெரிவித்தார்.

மேலும் தமது இராணுவம் காட்டில் பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போரிட்ட காரணத்தினால்தான் அனைவரும் இன்று சுதந்திரமாக சுற்றித்திரிவதாகவும் அவர் கூறினார்.மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பயணத்தடை விதிப்பது குறித்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிவிப்பு தொடர்பாக, ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அத்தோடு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை முட்டாள்தனமான அறிக்கையை வெளியிட்டடுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக எந்த அடிப்படையில் அவர்கள் அத்தகைய முடிவுகளுக்கு வந்தார்கள் என்பது தானக்குத் தெரியவில்லை என்றும் கமால் குணரத்தன தெரிவித்தார்.போலி தகவல்களின் அடிப்படையில் தங்களுக்கு எதிராக அறிக்கைகளை சமர்பிக்காமல் யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என தான் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையிடம் கேட்டுக்கொள்வதாகவும் கூறினார்.

இதேவேளை மனித உரிமைகள் குறித்து பேசுபவர்கள், போர் இடம்பெற்றபோது அந்த கிராமங்களில் கண்டெடுக்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கையைப் பற்றியோ, சிறுவர் போராளிகளை இணைத்தமை மற்றும் விடுதலைப் புலிகளின் குற்றங்களைப் பற்றியோ பேசுவதில்லை என்றும் சாடினார்.மேலும் தான் போர்க்குற்றவாளி அல்ல என்பதால், கைது செய்யப்பட்டாலும், அவற்றை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் யு.என்.எச்.ஆர்.சி அறிக்கையிலிருந்து தங்கள் பெயர்களை நீக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் கமால் குணரத்தன குறிப்பிட்டார்.