Connect with us

இலங்கை

கொரோனா அலையின் மறுபக்கத்தில் இதுவும் உள்ளது! மக்களுக்கு போதியளவு விழிப்புணர்வில்லை!!

Published

on

கொரோனா தொற்று இருக்கா இல்லையா என கேட்டால் நடிகர் எஸ்.ஜெ சூர்யா சொல்வது போல இருக்கு ஆனா இல்லை எனும் நிலையே இப்போது இலங்கையில் இருக்கிறது. கிவி பழம், வெண்டிக்காய் என எதுக்கு பரிசோதனை செய்தாலும் அதுக்கும் கொரோனா இருக்கிறது என கிண்டல்களும் கேலிகளும் கூட பரவலாக சமூகத்தின் மத்தியில் இருக்கிறது. இவைகளெல்லாம் இப்படி இருக்க சுகாதார துறை கொரோனாவை கட்டுப்படுத்த தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளது என்பதே மிகப்பெரும் உண்மை.

வைத்தியர்கள், தாதிகள், சுகாதார துறை ஊழியர்கள், அம்புலன்ஸ் வண்டி சாரதிகள், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், வைத்தியத்துறை பணிப்பாளர்கள் என யாரை எடுத்துக் கொண்டாலும் அவர்களின் சேவை மகத்தானது எனலாம். அவர்களுக்கு மழை, வெயில், இரவு, பகல், குடும்பம், நல்லது, கெட்டது, பண்டிகைகள் என எதுவும் இந்த நாட்களில் இல்லை என்பதை நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். பண்டிகை புத்தாடையுடன் கொரோனா கட்டுப்பாட்டுக்காக உழைத்த அத்தனை சுகாதார பணியாளர்களுக்கும் மிகப்பெரும் சலூட் !

இவர்களின் சேவைக்கு நிகர் இவர்களே. உலகமே கொரோனா நோயாளிகளை கண்டு அதிர்ந்து தலைதெறிக்க புறமுதுகு காட்டி ஓடிக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் அவர்களை புன்னகை பூத்த முகத்துடன் வரவேற்று சிகிச்சையளிப்பது இவர்களின் மனதின் வலிமை. இருந்தாலும் இவர்கள் அறியாமல் மக்களின் நலனுக்கு என செய்யும் சில தீர்மானங்கள் மக்கள் விரும்பாத அல்லது ஏற்றுக்கொள்ள மறுக்கின்ற இன்னும் ஒரு பக்கத்தையும் கொண்டுள்ளதை யாராலும் மறுக்க முடியாது.

கொரோனா தொற்றாளர் என ஒருவர் அடையாளம் கண்டால் அவ்வளவுதான் அவரின் மானம், மரியாதை எதிர்காலம் எல்லாம் அந்த நிமிடத்துடன் கீழ்நோக்கி பயணிக்க ஆரம்பிக்கிறது. அதற்கான காரணம் என்ன? சமூகத்தில் இது தொடர்பிலான ஒழுங்கான விழிப்புணர்வு வழங்கப்படாமையே என்பது எனது கருத்து. கொரோனா பாதுகாப்பு அங்கிகளுடன் விண்வெளி வீரர்களை போன்று காட்சியளித்து கொண்டு அவரின் வீட்டின் முன்றல் தொடக்கம் அப்பிரதேசம் முழுவதிலும் வளம் வரும் சுகாதார தரப்பினர்களில் சிலரின் நடவடிக்கைகளினால் அப்பிரதேசங்களில் தேவையற்ற பதட்டங்கள் நிலவுகின்றது தவிர்க்க முடியாத ஒன்றாகவே தொடர்கிறது.

அது மாத்திரமின்றி அங்குவரும் சில அதிகாரிகள் அப்பிரதேசத்து பக்கத்து வீட்டில் இருக்கும் தனக்கு தெரிந்தவரிடம் எத்திவைக்கும் தகவல்கள் கொரோனாவை விட வேகமாக அப்பிரதேசங்களில் பரவுகின்றது. அதனால் வேறு சில பதட்டங்களும் ஏற்படுகிறது. ஒரு வயது வந்த பெண்பிள்ளைக்கு கொரோனா தொற்று உறுதியானால் அந்த பெண்பிள்ளையின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. கொரோனாக்காரி என பெயர்சூட்டப்பட்டு அந்த பிள்ளைக்கான திருமண வாய்ப்புகள் தள்ளிப்போவது சமூகத்தில் நடக்காமல் இல்லை. அதே போன்று சக மாணவிக்கோ அல்லது சக அலுவலக நண்பருக்கோ அந்த நிலை வந்தால் அவர் அங்கு கூனிக்குறுகி போகும் நிலையே இருக்கிறது.

கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டவர் சிகிச்சைக்காக சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினாலும் அவரை அந்த சமூகம் இலகுவில் ஏற்றுக்கொள்ள தயங்குகிறது. சுய தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் முதல் தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்டவர்கள் வரை இந்த நிலை தொடர்கிறது என்பதே வருத்தமான செய்தி. இவ்வாறான அச்சநிலை மக்கள் மத்தியிலிருந்து அவசரமாகவும் அவசியமாகவும் களைந்தெறியப்பட வேண்டும்.

சுகாதார தரப்பினர் மக்களுக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதிப்படுத்த முன்னர் தங்களை அதிலிருந்து விடுபட்டவர்களாக ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முன்வர வேண்டும். ஒரு நபருக்கு பி.சி.ஆர் அல்லது அண்டிஜன் எடுத்த கையுறையுடனையே மற்றவருக்கும் அந்த பரிசோதனை நடக்கிறது இதனால் கொரோனா பரவாதா? எனும் கேள்வி மக்கள் மத்தியில் இருக்கிறது.  பி.சி.ஆர் அல்லது அண்டிஜன் எடுக்க அனுமதிக்காது சுகாதார தரப்பின் முக்கிய அதிகாரிகள் மற்றும் வைத்தியர்கள் தவிர்க்கிறார்கள் எனும் செய்திகளை கேட்டு மக்கள்  இன்னும் தூரமாகிறார்கள். இதனால் மிகபெரும் ஆபத்தை நாம் எதிர்நோக்குகின்றோம்.

பி.சி.ஆர் அல்லது அண்டிஜன் பரிசோதனை என்பது அரச விதிமுறைகளை மீறுவோருக்கான தண்டனைகள் போன்று அறிவிக்கப்படுவதனால் மக்கள் இன்னும் ஒருவகையான மனரீதியான பிரச்சினைகளை அனுபவிக்கின்றனர். கொரோனா தொற்று என்பது சுகாதார துறையோடு அல்லது மருத்துவத்துடன் தொடர்பு பட்டது. ஆனால் இலங்கையில் கொரோனா கட்டுப்பாட்டு செயலணியின் பிரதானியாக இராணுவ உயரதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டிருப்பதும் மக்களுக்கு ஒருவகையான குழப்பத்தை உண்டாக்கியுள்ளது எனலாம். மட்டுமின்றி இவ்விடயத்தில் பாதுகாப்பு படையின் தலையீடுகள் அதிகரித்திருப்பதால் மக்களின் மனோ நிலை மிக உயர்ந்த பயத்தில் இருக்கிறது என்பதே வெளிப்படையான உண்மை.

கொரோனா தொற்று தமக்கு இருக்கும் என அச்சம் கொள்ளும் முஸ்லிம், கத்தோலிக்க மக்கள் தம்மை பரிசோதனை செய்வதற்கு தயங்குகிறார்கள். இறைவனின் தீர்ப்பு எழுதப்பட்டு நாம் மரணித்து விட்டால் எமது உடல்கள் குடும்பத்தாருக்கு கூட காட்டப்படாமல் எரித்துவிடுவார்கள் என பயந்து அவர்கள் சோதனை நடவடிக்கைகளுக்கு மறுத்து தப்பிவிடுகிறார்கள். கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதை விட சுகாதார துறைக்குள் நுழைந்துள்ள புதிய இனவாத வைரஸை கட்டுப்படுத்துவதே இன்றைய மருத்துவத்துறைக்கு பாரிய சவாலாக உள்ளது. சர்வதேச சுகாதார விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளை பின்பற்ற முடியாமல் இலங்கை சுகாதார துறை தத்தளிப்பதில் எமது நாட்டின் உண்மை முகம் தெளிவாகிறது.

இந்த கொரோனா தொற்று காலத்தை சரியாக பயன்படுத்தி தமது மனங்களில் தேங்கியுள்ள இனவாத, பிரதேச வாத அழுக்குகளையும் சில சுகாதார துறை நிர்வாகிகள் செய்கிறார்கள் என நாடுமுழுவதிலும் பரவலான குற்றச்சாட்டுக்கள் ஆரம்பத்திலிருந்தே இருந்து வருகின்றது. அதில் உண்மைகள் இல்லாமலும் இல்லை. சில பிரதேசங்களில் தனி நபரை அல்லது ஒரு சமூகத்தை அதுவும் இல்லாது போனால் அவர்களின் பொருளாதாரத்தை இலக்கு வைக்கிறார்கள் என குற்றப்பட்டியல் நீள்கிறது. தொற்று ஆரம்பித்து ஓராண்டு பிறந்த தினத்தையும் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள கொரோனா வைரஸானது அரசியல், சமூக, சமய, கலாசார, பொருளாதார ரீதியாக பல்வேறு குரோதங்களை இலங்கையில் விதைத்துள்ளது. இவைகளிலிருந்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல எல்லோரும் சகமனித கௌரவத்தையும் மரியாதையையும் மான்பையும் பேணி நடக்க முன்வருவதுடன் வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் மனிதாபிமானமில்லா சுகாதார துறை களைகளை அப்புறப்படுத்தவும் வேண்டும்.

அரசியல்வாதிகள் கொரோனா அலையை தமக்கு சாதகமாக பயன்படுவதில் மட்டுமே குறியாக இருக்கிறார்களே தவிர மக்களுக்கு போதியளவு விழிப்புணர்வை உண்டாக்க தவறி விட்டனர். இந்த வைரஸானது காய்ச்சல், தடுமல் வைரஸை போன்றது ஆனால் என்ன சற்று வீரியம் கூடியது. பேணுதலாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றினால் இந்த தொடரிலிருந்து விடுதலை பெறலாம். அச்சப்படும் அளவுக்கு ஒன்றுமில்லை என்பதை பகிரங்கமாக அறிவிக்க எல்லா தரப்பும் பின்வாங்குவது ஏன்? கொரோனா தொற்றாளர்களை தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்து சென்று அங்கு அவர்களுக்கு நடக்கும் அன்றாட நடைமுறைகளை தொலைக்காட்சி, இணையதளம், சமூக வலைத்தளங்கள், பத்திரிகைகள் மூலம் திறந்தவாரியாக மக்கள்மயப்படுத்துவதன் மூலம் பொதுமக்களுக்கு இருக்கும் அச்சம் நீங்கி தெளிவு பிறக்கும். அதன் மூலம் இலங்கையர்களின் ஒட்டுமொத்த ஒத்துழைப்பையும் இவ்விடயத்தில் பெற கூடியதாக இருக்கும்.

இனவாத, மதவாத சக்திகளுக்கு அடிபணியாமல் அதி கௌரவ சேவையான மருத்துவ துறை இந்த வைரஸ் தொற்றின் உண்மை நிலையை மக்களுக்கு தெளிவுபடுத்த முன்வருவதுடன் ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு படையின் உதவியை சில கட்டங்களுக்கு மேல் நாடாமல் இருப்பது மக்களுக்கும் மருத்துவர்களுக்கும் இருக்கும் உறவை பலப்படுத்தும் என்பது வலிமையான வாதம்.