இலங்கை செய்திகள்
கொரோனா தடுப்பு மருந்துக்கு அங்கீகாரம் வழங்கியது அமெரிக்கா

கொரோனாத் தொற்று உலகம் முழுவதும் தீவிரமாகப் பரவி அமெரிக்காவில் அதிகமான உயிர்களைக் காவு கொண்டது.
இன்று உலகப் பொருளாதாரத்தை மட்டுமல்ல உலக மக்களின் மனநிலையையும் இந்தக் கொரோனா மாற்றியமைத்திருக்கின்றது. பெருமளவு உளவியல் தாக்கங்களை உலக மக்கள் சந்தித்திருக்கின்றார்கள். இவற்றுக்கெல்லாம் விரைவில் முடிவு கட்டவேண்டுமென்று இரவும் பகலுமாக பல்வேறுபட்ட ஆராய்ச்சி நிறுவனங்கள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டன.
தீவிர ஆராய்ச்சியின் பயனாக இன்று பல்வேறுபட்ட நிறுவனங்கள் கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றிபெற்றிருக்கின்றன.
அந்த வகையில் மெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசி, மொடர்னா ஊசி மருந்து மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்திய அஸ்ட்ராஜெனெகா ஊசி மருந்து, இந்த மூன்று ஊசி மருந்துகளுக்கு மேலதிகமாக, ரஷ்ய மருத்துவ நிபுணர்கள் ஸ்பூட்னிக் வி என்ற ஊசி மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளனர், மேலும் சீனாவும் மற்றொரு ஊசி மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை தற்பொழுது பாவனைக்கு வரத்தொடங்கியுள்ளன.
இந்த மருந்துகளுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. அத்துடன் பிரித்தானியா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் ஏற்கனவே தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்தத் தடுப்பூசிகள் சரியாக ஏற்றப்படுமாக இருந்தால் அடுத்து வரும் மூன்று மாத காலத்துள் பெருமளவு தடுப்பூசிகள் ஏற்றப்படுவிடுமென நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றார்கள்.
அவ்வாறு பக்கவிளைவுகள் அற்றவகையில் இந்தக் கொரோனா தடுப்பூசி உலக மக்களைச் சென்றடையுமாக இருந்தால், உலக மக்கள் நிம்மதிப் பெருமூச்சுடனான வாழ்க்கையை நடத்தக்கூடியதாக இருக்கும்.
மீண்டும் விமானநிலையங்கள் திறக்கப்பட்டு, நாடுகளுக்கிடையிலான போக்குவரத்துகள் ஆரம்பிக்கப்பட்டு, மக்களின் மனநிலைகள் சாதாரண நிலைக்குக் கொண்டுவரப்பட்டு இந்த உலகப்பந்து நிம்மதியாக சுற்றக்கூடிய நிலை ஏற்படும்.
எனவே இந்த நிலைமை சர்வதேச மக்களைப் பொறுத்தமட்டில் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் ஊட்டக்கூடிய நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் நிலைமை
சர்வதேசத்தில் கொரோனா தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட மகிழ்ச்சிகரமான நிலைமைகள் காணப்பட்டாலும் கூட, இலங்கையில் கொரோனாத் தொற்றின் வேகம் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது.
குறிப்பாக களுத்துறை மாவட்டத்தில் அதன் பரவல் அதிவேகமாகக் காணப்படுகின்றது. அந்தப் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாப்புத் துறையினர் திணறுகின்றனர்.
காரணம் அப்பகுதி மக்கள் பெருமளவு ஆதரவினை பாதுகாப்புத் துறையினருக்கு வழங்காமல் இருக்கின்றார்கள். அவ்வாறே வடமாகாணத்தில் கூட இன்று கொரோனாவின் தாக்கம் பரவியிருக்கின்றது. கிழக்கு மாகாணத்தில் கொரோனாவின் மரணமும் பதிவாகிவிட்டது.
மக்கள் சுயகட்டுப்பாடின்றி தங்களைப் பாதுகாக்காமல் அதேசமயம் சமூகத்திற்கும் தீங்குகளை ஏற்படுத்தி வருகின்றார்கள். இது இலங்கையினைப் பொறுத்தமட்டில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்ற அச்சம் சுகாதாரத்துறையினர் மத்தியில் தோன்றியிருக்கின்றது.
நேற்றுக்கூட வவுனியாவில் புதியசாளம்பைக்குளம் பகுதியில் கொரோனா தொற்று நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்கள். இது வவுனியாவில் சமூகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தொற்றாகும். கொழும்பிலிருந்து வந்த நபர்களின் அலட்சியப் போக்கு இந்தக் கொரோனாவை இங்கே தொற்றியிருக்கின்றது. அவ்வாறே வடமாகாணங்களிலும் பல இடங்களில் கொரோனாத் தொற்று ஏற்பட்டதான செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன.
எனவே இலங்கை மக்கள் இந்தத் தொற்று நோய்க்கான தடுப்பு மருந்து வரும் வரை தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்பது சுகாதாரப் பிரிவினரின் எதிர்பார்ப்பாகும்.