சர்வதேசம்
கொரோனா வைரஸ் தொற்றுநோயைப் பொறுத்து இரு தலைவர்களுக்கிடையில் ஒரு உச்சிமாநாடு விரைவில் நடைபெறும்.

ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா மற்றும் அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் இடையே, ஏப்ரல் மாத தொடக்கத்தில் வொஷிங்டனில் ஒரு சந்திப்பு இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஜப்பானிய அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜனவரி மாதம் பைடனுடனான தொலைபேசி பேச்சுவார்த்தையில், ஜப்பான் பிரதமர் சுகா, அமெரிக்கா வருவதற்கான ஆர்வத்தைக் காட்டியிருந்தார்.
இதனடிப்படையில், ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா அடுத்த மாதம் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், அங்கு அவர் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்து இருதரப்பு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிழக்கு சீனக் கடலில் ஜப்பான் கட்டுப்பாட்டில் உள்ள செங்காகு தீவுகளைச் சுற்றியுள்ள இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் அதிகரித்துவரும் உறுதிப்பாட்டின் மத்தியில் இரு நாடுகளும் தங்களது வலுவான கூட்டணியை வெளிப்படுத்த இதுவொரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என கூறப்படுகின்றது.
தொற்றுநோய்களின் போது பைடன் நிர்வாகம் எவ்வாறு வெளியுறவுக் கொள்கையை நடத்துகிறது என்பதற்கான இயல்புநிலையையும் இது குறிக்கும்.
78 வயதான ஜனாதிபதி பைடன், இதுவரை வொஷிங்டனில் வெளிநாட்டுத் தலைவர்களை நேரில் சந்திக்கவில்லை அல்லது பிற நாடுகளுக்குச் செல்லவில்லை. ஏனெனில் அவர் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கிறார்.
இவ்வாறு இருவருக்கும் இடையில் இச்சந்திப்பு இடம்பெற்றால், பைடன் ஜனாதிபதியானதற்கு பிறகு நேரில் அதுவும் அமெரிக்காவில் சந்தித்த முதல் வெளிநாட்டு தலைவராக சுகா இருப்பார்.
எனினும், இந்த சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தவில்லை. பெரும்பாலும் வசந்த காலத்தின் பின்னர் திகதி நிர்ணயிக்கப்படலாம்.
இதுகுறித்து டோக்கியோவில், தலைமை அமைச்சரவை செயலாளர் கட்சுனோபு கடோ கூறுகையில், ‘கொரோனா வைரஸ் தொற்றுநோயைப் பொறுத்து இரு தலைவர்களுக்கிடையில் ஒரு உச்சிமாநாடு விரைவில் நடைபெறும்.
ஆனால் இரு தலைவர்களுக்கிடையில் ஒரு சந்திப்பு எப்போது நடக்கும் என்று எந்த நேரமும் நிர்ணயிக்கப்படவில்லை’ என கூறினார்.