Connect with us

இலங்கை

கொவிட் -19 நிலையறிய சரியான உண்மைத் தகவல்களை வழங்குங்கள்.

Published

on

வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நிலையில், கோவிட்-19 நிலையை அறிவதற்காக கேட்கப்படும் வினாக்களுக்கு, 

சரியான உண்மைத் தகவல்களை வழங்குங்கள். நீங்கள் பிழையான தகவல்களை வழங்கும் போது நீங்கள் மாத்திரமல்ல, உங்களைச்
சார்ந்திருக்கின்ற உங்களது உறவினர்கள் மற்றும் சமூகத்தையே நோய்த் தொற்றுக்குள்ளாக்கும் ஆபத்தை விளைவிக்கின்றீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி டாக்டர் இரா. முரளீஸ்வரன், உண்மைக்கதிர் இணையத்தள செய்தித்தாளுக்கு அளித்த செவ்வியிலேயே இவ்வாறு கூறினார். அந்தச் செவ்வியின் முழு விவரம் வருமாறு,                                                                                                                                   

01) கேள்வி :- கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் என்ற ரீதியில் வைத்தியசாலையின் கொரோனா தொடர்பான நிர்வாகக் கட்டமைப்பு எவ்வாறு உள்ளது?


பதில் :- சுகாதார அமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் செயலணி வைத்தியசாலையில் உருவாக்கப்பட்டுள்ளது. இக் குழுவில் வைத்திய அத்தியட்சகர், வைத்திய நிபுணர்கள், வைத்திய உத்தியோகத்தர்கள், தொற்று நோய்ப்பிரிவு தாதிய உத்தியோகத்தர்கள், கணக்காளர் என பல
உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். இக்குழு கிரமமாக கூடி கொரோனா பரவல் தடுப்புச் செயற்பாடுகள் குறித்து ஆராய்ந்து அவற்றுக்குரிய சரியான தீர்வுகளை முன்வைத்து அவற்றை அமுல்ப்படுத்துகின்றது. சுகாதார அமைச்சினால் கொரோனா தொடர்பாக பரிந்துரைக்கப்படுகின்ற விடயங்களை விசேட நுண்ணுயிரியல் வைத்திய நிபுணரின் ஆலோசனைகளைப் பெற்று கொரோனா பரவல் தடுப்புச் செயற்பாடுகள்
முன்னெடுக்கப்படுகின்றன.

சாய்சாலைகள், விடுதிகள், விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு, வெளிநோயாளர் பிரிவு, மருந்தகம் மற்றும் வைத்தியசாலையில் உள்ள ஏனைய பிரிவுகளுக்கும்
இக்குழுவிலுள்ள வைத்திய மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் ஒவ்வொருநாளும் விஜயம் செய்து ஏற்கனவே கொரோனா பரவல் தடுப்பு
சம்பந்தமாக எடுக்கப்பட்ட தீர்மானங்கள் ஒவ்வொரு பிரிவிலும்
அமுல்ப்படுத்தப்படுகின்றதா என்பதை மேற்பார்வை செய்கின்றார்கள். மேலும் அப் பிரிவுகளில் நடைமுறைப்படுத்தக்கூடிய விடயங்கள் குறித்து ஆராய்ந்து கொரோனா தடுப்பு செயலணி மூலம் இறுதித் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன.

02) கேள்வி :- கொரோனா தொற்றுப்பரவலுடன் வாழும் நிலையில் தடிமல், காய்ச்சலால்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களை எவ்வாறு கையாளுகின்றீர்கள் ?

பதில் :- அவ்வாறான அறிகுறிகளுடன் வைத்தியசாலைக்கு வருபவர்களிடம் முதலில் கொரோனா தொடர்பான நிலை அறியப்படுகின்றது. அதாவது, நோயாளர் தனி வீட்டில் வசிக்கின்றாரா? அல்லது குடியிருப்புப் பகுதியில்
வசிக்கின்றாரா?, நோயாளர் கடந்த மூன்று வார காலப்பகுதியினுள் வெளிநாட்டில் இருந்து திரும்பியவரா? வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவருடன் சமூகத் தொடர்பை பேணி இருந்தாரா ?அல்லது கடந்த மூன்று வார காலப்பகுதியில் சுற்றுலா பயணிகள் கூடுகின்ற இடங்களுக்கு சென்றவரா? அல்லது கடந்த மூன்று வார காலப்பகுதியில் சுற்றுலா பயணிகள் கூடுகின்ற இடங்களுக்கு சென்றவரா? அல்லது கடந்த மூன்று வார காலப்பகுதியில் கொரோனா தொற்றுடையவர் என சந்தேகிக்கப்படும் நபருடன் சமூகத் தொடர்பை பேணி இருந்தாரா, வீட்டிலுள்ள அங்கத்தவர் எவராவது தனிமைப்படுத்தப்பட்டனரா? அல்லது குறித்த நோயாளி தனிமைப்படுத்தப்பட்டவரா ?,மக்கள் அதிகம் கூடுகின்ற இடங்களுக்குச் சென்று வந்தவரா? ,சொந்த வாகனத்தின் மூலமாகவோ பொதுபோக்குவரத்தின் மூலமாகவோ பயணம் செய்தவரா ?


உங்களுடைய குடும்ப அங்கத்தவர்களில் யாரேனும் ஒருவர், கொரோனா தொற்றாளருடன் பழகி இருந்தவரா? கொரோனா அறிகுறிகளான காய்ச்சல், தொண்டைநோ, இருமல், மூச்செடுப்பதில் சிரமம்
போன்றவற்றுடன் இருக்கின்றனரா? கொரோனா தொற்று நோயாளராக அடையாளம் காணப்பட்டு சிகிச்சை பெற்றவரா? ,வேறு யாராவது கொரோனா தொற்று நோயாளராக உங்களைச் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதியில் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டனரா?

போன்ற மேலுள்ள வினாக்கள் தடிமல், காய்ச்சலால் அனுமதிக்கப்படவுள்ளவர்களிடம் தாதிய உத்தியோகத்தரினால் வினவப்பட்டு அவர்கள் அளிக்கும் பதில்களை பொறுத்தே, கொரோனா தொற்று சந்தேகத்திற்குரிய நோயாளராக இனம்
காணப்பட்டால் வைத்தியசாலையிலுள்ள வெளிநோயாளர் பிரிவு மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவிலுள்ள தனிமைப்படுத்தல் பிரிவில் தற்காலிகமாக அனுமதிக்கப்படுவார்கள்

பின்பு வைத்திய உத்தியோகத்தர்கள் முறையான பாதுகாப்பு அங்கிகளை அணிந்து கொண்டு துரித அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்வார்கள். வைத்தியர்களுடைய தீர்மானத்தைப் பொறுத்து மேலதிக பி.சி.ஆர் பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகின்றது.

03) கேள்வி :- கல்முனை பிராந்தியத்தில் கொரோனாத் தொற்றுப் பரவல் தொடர்ச்சியாக அதிகரித்துள்ள நிலையில் கொரோனா தொடர்பான முன் ஆயத்த செயற்பாடுகள் கட்டமைக்கப்பட்டுள்ளதா?

பதில் :- ஆம். வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவிலும் அவசர சிகிச்சைப் பிரிவிலும் தனித் தனியாக தனிமைப்படுத்தல் பிரிவுகள் நிறுவப்பட்டுள்ளது. கொரோனா தொற்று சந்தேகத்திற்கிடமான நோயாளர்கள் இத் தனிமைப்படுத்தல்
பிரிவுகளில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டு அவர்களுக்குரிய துரித அன்ரிஜன் மற்றும் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுடன் இணைந்தவாறு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்படாத, கொரோனாத் தொற்று சந்தேகத்திற்கிடமான நோயாளர்களுக்கு சிகிச்சைகளை வழங்குவதற்காக பிரசவ அறை, சத்திர சிகிச்சைக்கூடம் மற்றும் அதி தீவிர சிகிச்சை பிரிவு என்பன உருவாக்கப்பட்டுள்ளன. வைத்தியசாலையில் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு செயலணி ஒவ்வொருநாளும் கூடி கொரோனா பரவல் தடுப்பு முறைகளை ஆராய்ந்து மிகவும் விரைவாக அமுல்ப்படுத்தி எமது வைத்தியசாலையின் வளர்ச்சிக்காக அயராது உழைக்கின்றனர்.

வைத்தியசாலையின் ஊழியர்களின் பாதுகாப்பிற்கான மேலதிக பாதுகாப்பு அங்கிகள் எங்களுடைய வைத்தியசாலையிலேயே தயாரிக்கப்படுகின்றது. வைத்தியசாலைக்கு வருகின்ற நோயாளர்களின் பெயர், முகவரி, அடையாள அட்டை இலக்கம் ஆகிய விபரங்கள் வைத்தியசாலையின் வாயிலில் வைத்து
சேகரிக்கப்படுகின்றன.

வைத்தியசாலையின் பிரிவுகள் அனைத்தும் தொற்று நீக்கித் திரவம் விசிறப்பட்டு கிருமி நீக்கம் செய்யப்படுகின்றது. வைத்தியசாலையின் ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான போதனைகள் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கொவிட்-19 தொற்று அதிகம் காணப்படும் மாவட்டங்களுக்குச் சென்று வரும் வைத்தியசாலையின் ஊழியர்கள் அனைவருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

04) கேள்வி :- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் எவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது?

பதில் :- கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர், வெளிநோயாளர் பிரிவு அல்லது அவசர சிகிச்சை பிரிவில் உள்ள தனிமைப்படுத்தல் பிரிவில் தற்காலிகமாக தங்க வைக்கப்படுவார். நோயாளர் நின்ற மற்றும் அமர்ந்த இடங்கள் அனைத்தும் தொற்று நீக்கித் திரவம் கொண்டு கிருமி நீக்கம் செய்யப்படுகின்றது.

கொரோனா தொற்று நோயாளர் தொடர்பான தகவல்கள் Regional Epidemiologist க்கு
அறிவிக்கப்படுகின்றது.

அவர், கொரோனா தொற்று நோயாளரின் நோய் அறிகுறிகள் மற்றும் நோய் நிலைமையை கருத்திற் கொண்டு அவர்களுக்குரிய தகுந்த கொரோனா சிகிச்சை நிலையங்களைத் தெரிவு செய்து கொரோனா நோய்த் தொற்றாளர் தகுந்த பாதுகாப்பு முறைகளுடன் குறித்த கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பப்படுகின்றார்.

கொரோனா நோய்த் தொற்றாளரின் குறித்த தகவல்கள் அனைத்தும் பிரதேசத்தின் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகருக்கு கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதத்தில் அறிவிக்கப்படுகின்றது.

05) கேள்வி :- கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையுடன் கொரோனா தொடர்பாக எவ்வாறான தொடர்புகளை பேணுகின்றீர்கள்?

பதில் :- கொரோனா பரவல் இடங்கள், தனிமைப்படுத்தல் பிரதேசங்கள் மற்றும் எந்தெந்தப் பகுதிகள் மிகுந்த ஆபத்திற்குரியது என்பது பற்றி வைத்தியசாலைக்கு அறிவிக்கின்றனர்.

பிராந்திய சுகாதார பணிமனை அறிவிக்கும் பிரதேசங்களைப் பொறுத்து உடனடியாக செயற்பட்டு அக் குறிப்பிட்ட பிரதேசங்களில் இருந்து வரும் நோயாளர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களுக்கு கோவிட்-19 நிலை அறியப்பட்டு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.

எமது வைத்தியசாலையில் நிறுவப்பட்டுள்ள கொரோனா தடுப்பு செயலணி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

06) கேள்வி :- கொரோனா தொடர்பாக மாவட்ட செயலக நிர்வாகத்துடனான தொடர்பு எவ்வாறுள்ளது ?

பதில் :- சமுதாயத்தில் கொரோனா பரவல் தடுப்பு முறைகள் பற்றி மாவட்டச் செயலக நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து செயற்பட்டு வருகின்றோம்.

07) கேள்வி :- வைத்தியசாலைக்கு வருபவர்களிடமிருந்து கொரோனா தொடர்பாக எவ்வாறானவற்றை எதிர்பார்க்கின்றீர்கள்?

பதில் :- சரியான முறையில் வாய் மற்றும் மூக்கை மூடிய வகையில் முறையாக முகக் கவசங்களை அணிதல். முகக்கவசங்களை பாவித்த பின்பு பாதுகாப்பான முறையில் அவற்றை அகற்றுங்கள். ஆகக் குறைந்தது இருவருக்கிடையில் ஒரு மீற்றர் தூர சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

வைத்தியசாலையின் வாயிலில் நோயாளர்கள் கை கழுவுவதற்குரிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நோயாளர்கள் முறையாக தங்களது கைகளை குறைந்தது 20 செக்கன்களுக்காவது
சவர்க்காரமிட்டு கழுவுங்கள்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நிலையில், கோவிட்-19 நிலையை அறிவதற்காக கேட்கப்படும் வினாக்களுக்கு சரியான உண்மைத் தகவல்களை வழங்குங்கள். நீங்கள் பிழையான தகவல்களை வழங்கும் போது நீங்கள் மாத்திரமல்ல, உங்களைச் சார்ந்திருக்கின்ற உங்களது உறவினர்கள் மற்றும் சமூகத்தையே நோய்த் தொற்றுக்குள்ளாக்கும் ஆபத்தை விளைவிக்கின்றீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்

விடுதியிலுள்ள நோயாளர்களை பார்வையிடும் போது குறித்த நோயாளரின் உறவினர்
ஒருவருக்கே பார்வையிடுவதற்காக அனுமதி வழங்கப்படுகின்றது. இதனைக் கருத்திற் கொண்டு நோயாளர்களைப் பார்வையிடுவதற்காக நோயாளரின் உறவினர் ஒருவர் தவிர்ந்த ஏனைய உறவினர்கள் விடுதியினுள் உள்நுழைய வேண்டாம் என்று
கேட்டுக்கொள்கின்றோம்.

வைத்தியசாலையின் ஊழியர்களால் வழங்கப்படும் ஆலோசனைகளைப் பின்பற்றி அவற்றுக்கமைய நடக்க வேண்டும்.

 08) கேள்வி :- கொரோனா தொற்றாளரான ஒருவரை பொது வெளியில் அடையாளப்படுத்துவது ஆரோக்கியமானதா?

பதில் :- நிச்சயமாக இல்லை.
அவ்வாறு செய்வதன் மூலம், அவரை மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்க வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தக்கூடும். இது சமூகத்திற்கு ஆரோக்கியமற்றது.

09) கேள்வி :- வைத்தியசாலையினுள் கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த எவ்வாறான செயற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன?

பதில் :- வைத்தியசாலையின் ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான போதனைகள் வழங்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள், அவர்களைப் பார்வையிட வரும் உறவினர்கள் மற்றும் வைத்தியசாலையில் பணிபுரிகின்ற ஊழியர்கள் தங்களது கைகளை முறையாக கழுவுவதற்குரிய வசதிகள் வைத்தியசாலையின் அனைத்து வாயில்களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் மற்றும் வைத்திய ஊழியர்கள் கட்டாயமாக சரியான முறையில் முகக்கவசங்கள் அணிவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா சந்தேகத்திற்கிடமான நோயாளர்களை பார்வையிடும் போது வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் முறையான பாதுகாப்பு அங்கிகளை அணிதல்
கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எங்களுக்குத் தேவைப்படும் மேலதிகமான பாதுகாப்பு
அங்கிகளை, நாங்கள் எங்களது வைத்தியசாலையிலேயே தயாரித்துக் கொள்கின்றோம்.

நோயாளர்களுக்கும் வைத்தியசாலை ஊழியர்களுக்குமிடையில் சமூக இடைவெளியைப் பேணும் விதத்தில் தற்காலிகமாக தடுப்பு முறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நோயாளர்களுக்கிடையில் சமூக இடைவெளியைப் பேணுவதற்காக “X” அடையாளமிடப்பட்ட கதிரைகளில் நோயாளர்கள் அமர முடியாது. விடுதிகளில் தங்கியுள்ள நோயாளர்களை பார்வையிடுவதற்காக நோயாளரின் உறவினர் ஒருவருக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வெளிநோயாளர் பிரிவு, சாய்சாலைகள், விடுதிகள் மற்றும் ஏனைய பிரிவுகளிலுள்ள நேயாளர்கள் மற்றும் நேயாளர்களை பார்வையிட வருபவர்களுக்கு
கொரோனா தடுப்பு முறைகள் தொடர்பாக வைத்தியசாலை உத்தியோகத்தர்களினால்
நேரடியாக அறிவுறுத்தப்படுகின்றது.

கொரோனா எப்படி பரவுகின்றது? இதனைத் தடுக்கும் வழிமுறைகள் மற்றும் கொரோனா தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் உணவுகள் மற்றும் வழிமுறைகள் என்பன ஒரு மணித்தியாலத்திற்கு ஒரு தடவை ஒலி பெருக்கியின் ஊடாக வைத்தியசாலையின் சகல பிரிவுகளுக்கும் ஒலிபரப்பப்படுகின்றது. அநாவசியமாக வைத்தியசாலைக்கு வர வேண்டாம் என நோயாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், இதயநோய், நீரிழிவுநோய், சுவாசக்கோளாறு உள்ளவர்கள் உட்பட நீண்ட நாட்பட்ட நோயாளர்கள் மற்றும் கர்ப்பிணித்தாய்மார்கள் ஆகியவர்களை
அவசியமில்லாமல் வைத்தியசாலைக்கு வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நோய் நிலைமைகள் மோசமடைவதாக உணர்ந்தால் வைத்தியசாலைக்கு செல்லுங்கள் என நோயாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெளிநோயாளர் பிரிவு, சாய்சாலை, விபத்து மற்றும் அவசரசிகிச்சை பிரிவு ஆகியன
வைத்தியசாலையினுள் நோயாளர்கள் உள் நுழைகின்ற மூன்று பிரதான பகுதிகள் ஆகும். இம்மூன்று பிரிவுகளிலும் உள்நுழைகின்ற நோயாளர்களின் கோவிட் -19 நிலை தாதிய உத்தியோகத்தர்களினால் முறையான பாதுகாப்பு
அங்கிகளுடன் அறியப்படுகின்றது. மேற்கூறிய மூன்று பிரதான பகுதிகளிலும் ஆங்காங்கே அற்ககோல் தொற்று நீக்கித் திரவம் கைகளை சுத்தம் செய்யும் பொருட்டு வைக்கப்பட்டுள்ளது.

அதிகளவான நோயாளர்கள் சாய்சாலைக்கு வருவதனை குறைக்கும் நோக்கில் அவர்களது மருந்துகள் பொதிகள் மூலம் தபாலகங்களினூடாக விநியோகிக்கப்படுகின்றது.

நோயாளர்களது சந்தேகங்களை தெளிவுபடுத்தும் விதத்தில் வைத்தியசாலை தொலைபேசி இலக்கம், சாய்சாலைகளின் உள்ளக இலக்கங்கள், மருந்தகத்தின் உள்ளக இலக்கம் என்பன அச்சிடப்பட்டு மருந்துப்பொதியினுள்
வைக்கப்பட்டுள்ளது.

கட்டாயமாக பார்வையிடப்பட வேண்டிய நோயாளர்களுக்கு, குறிப்பிட்ட நேரத்தை வழங்கி முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் வைத்தியர்கள் அந்நோயாளர்களை பார்வையிட்டு அவர்களுக்குரிய சிகிச்சைகளை வழங்குகின்றனர்.

கொரோனா சம்பந்தமான விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரங்கள் சுகாதார கல்விப்பிரிவினால் நோயாளர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களுக்கு விநியோகிக்கப்படுகின்றது.

கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட மேற்குறிப்பிட்ட விடயங்களை எமது வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்புச் செயலணி உடனுக்குடன் ஆராய்ந்து வைத்தியசாலையினுள் கொரோனா பரவலைத் தடுக்க அயராது உழைத்து வருகின்றது.

10) கேள்வி :- கிழக்கில் கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ள நிலையில் வைத்தியசாலை ஊழியர்களை  பாதுகாப்பதில் எவ்வாறான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன?

பதில் :- நோயாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கிடையில் தற்காலிக தடுப்பு ஏற்படுத்தப்பட்டு சமூக இடைவெளி பேணப்படுகின்றது. சகல ஊழியர்களும் முகக்கவசங்கள் அணிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலை ஊழியர்கள் தங்களது கைகளை கிருகி நீக்கம் செய்யத் தேவையான அற்ககோல் கிருமி நீக்கித் திரவம் வைத்தியசாலையின் அனைத்து பிரிவுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனாத் தொற்று சந்தேகத்திற்கிடமான நோயாளர்களை அணுகுவதற்காக முறையான பாதுகாப்பு அங்கிகள் வழங்கப்பட்டுள்ளது. மற்றும் கொரோனா தொடர்பாக சகல வைத்தியசாலையின் ஊழியர்களுக்கும் விழிப்புணர்வு
ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது

11) கேள்வி :- கொரோனா நோய் நிலமையினால் வைத்தியசாலைக்கு வருவோரின் வருகை எவ்வாறுள்ளது?

பதில் :- மிகக் குறைவாகவே உள்ளது. நோயாளர்களுக்குரிய மருந்துகளை பொதிகள் மூலம் அனுப்புவதனால் வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது என்றார்.