Connect with us

நேர்காணல்

சரணாகதி அரசியலுக்கு செல்லமுடியாது!

Published

on

நேர்கண்டவர் :- துறையூர் மோகனதாஸ் 

அரசாங்கம் தீர்வைக் காண்பதற்கு காட்டுகின்ற விருப்பமில்லாத பின்னடிப்பு நிலைதான் தீர்வு இழுபட்டு பின்தள்ளப்படுவதற்கு ஏதுவாகிறது. ஏனைய கட்சிகள் ஒட்டுறவான அரசியலை செய்ய முயன்றாலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முக்கியமான இனப்பிரச்சினை தீர்வை விடுத்து சரணாகதி அரசியல் நிலைக்கு செல்லாது. தீர்வுக்காக முயற்சி எடுத்தாலும் கூட கடும்போக்கு வாதமுடைய அரசாங்கங்கள் அக்கறையில்லாமல் இருப்பதென்பதற்காக நாங்கள் முயற்சி எடுக்கவில்லையென்று சொல்வதற்கில்லை என, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் ஞாயிறு உண்மைக்கதிர் இணையத்தள செய்தித்தாளுக்கு அளித்த நேர்காணலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இவருடனான நேர்காணல் வருமாறு,

கேள்வி :- வடக்கு கிழக்கில் காணி அபகரிப்பு தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளதே ?

பதில் :- புதிய கோத்தபாய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இரண்டு விதமாக காணிகளை கையகப்படுத்தி அபகரிக்கின்ற செயற்பாடுகள் அரங்கேறுவதை மட்டு. அம்பாறை மாவட்டத்தைக் கொண்டு அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. தொல்லியல் இடங்களை அடையாளம் காணுதல் அவற்றை பாதுகாத்தல் என்ற போர்வையில் காணிகள் மட்டக்களப்பில் கையகப்படுத்தப்பட்டிருக்கின்றது. குறிப்பாக சொல்லப்போனால் போரதீவுப்பற்று வேத்துச்சேனைப் பிரதேசம், ஈரலக்குளம், குசலானமலை, குடும்பிமலை போன்ற பிரதேசங்களில் தனியார் காணிகளை அபகரிப்பதற்கான பிரயத்தன செயற்பாடுகள் நடைபெறுவதாக தெரியவருகிறது.

அதே போன்று மட்டக்களப்பின் எல்லைப்புறமாகவுள்ள ஏறாவூர்பற்று மற்றும் செங்கலடி செயலக பிரதேசத்திற்குட்பட்ட மயிலத்தமடு, மாதவணை காணியில் சோளப்பயிர்ச் செய்கையில் ஈடுபடுதல் என்ற அடிப்படையில் பெரும்பான்மை இனத்தவர்கள் அத்துமீறி குடியேறுகின்ற செயற்பாடுகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இதே போன்று வடக்கு கிழக்கிலுள்ள பல மாவட்டங்களிலும் காணி அபகரிப்பு திட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருப்பதனால், அரசாங்கம் மாவட்ட எல்லைகள் கடந்து மக்களை குடியேற்றுகின்ற
செயற்பாடுகள் ஆரோக்கியமாக தென்படவில்லை.

கேள்வி :- பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதி வழங்குதல் மற்றும் போர்க் குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறல் என்பனவற்றை இலங்கையரசு சாத்தியப்படுத்துமா ?

பதில் :- பாதிக்கப்பட்ட தமிழினத்திற்கு நீதியை வழங்கக்கூடிய விதத்தில் அரசின் முன்னெடுப்புகள் நம்பிக்கை தரக்கூடிய வகையில் இல்லை. ஆனால் போரின்போது ஏற்பட்ட அவல அநீதிகள் என்கின்ற விடயம் உள்நாட்டிலிருந்து வெளிநாடுகளின், சர்வதேச ரீதியாக பேசப்படுகின்ற விசாரிக்கப்பட வேண்டும் என்கின்ற கருத்தியல் உருவாகிக்கொண்டிருப்பதனால் இந்த அரசாங்கம் அக்கறை காட்டாது விட்டாலும் ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைப் பேரவையினால் பேசப்படுகின்ற விடயமாக மாறியிருக்கின்றது. எனவே மறுக்கப்பட்ட நீதி என்பது, நாட்டில் ஜனநாயகம் இல்லை என்பதை காட்டக்கூடிய விதத்தில் அமைந்திருக்கும். எனவே அரசாங்கம் செய்யாது தவிர்த்தாலும் கூட செய்துதான் ஆகவேண்டும் என்கின்ற இயற்கை பொதுநீதி இருக்கின்றது. எனவே மனித உரிமைப் பேரவை, ஐக்கிய நாடுகள் சபையின் வற்புறுத்தல் ஊடாகக் கூட இதனை செய்யவேண்டிய நிர்ப்பந்தம், இலங்கை அரசுக்கு இருக்கின்றது.

கேள்வி :- 1970 களின் பிற்பகுதியில் அமைக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி போன்று கூட்டமைப்பும் கடந்த இரண்டு தசாப்த கால வரலாற்றில் எதுவும் சாதித்ததாக தெரியவில்லையே?

பதில் :- கூட்டமைப்பினை பொறுத்தமட்டில் அரசியல் யாப்புத் தீர்வினை காண்பதுதான் மிக முக்கிய விடயமாக இருக்கின்றது. தீர்வு காணப்படாத நிலையில் எந்த ஒரு விடயத்தையும் சாதிக்க முடியாது. அரசியல் தீர்வு மூலமாகத்தான் காணி, காவல், நிதி சம்பந்தமான தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அக்கறையாக செயற்பட்டாலும், அரசாங்கங்கள் கடந்த காலத்தில் நழுவல் ஏமாற்றப் போக்கை கடைப்பிடித்து வருகின்றதென்பது கண்கூடு.

எனவே அரசாங்கம் தீர்வைக் காண்பதற்கு காட்டுகின்ற விருப்பமில்லாத பின்னடிப்பு நிலைதான் தீர்வு இழுபட்டு பின்தள்ளப்படுவதற்கு ஏதுவாகிறது. ஏனைய கட்சிகள் ஒட்டுறவான அரசியலை செய்ய முயன்றாலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முக்கியமான இனப்பிரச்சினை தீர்வை விடுத்து சரணாகதி அரசியல் நிலைக்கு செல்லாது. தீர்வுக்காக முயற்சி எடுத்தாலும் கூட கடும்போக்கு வாதமுடைய அரசாங்கங்கள் அக்கறையில்லாமல் இருப்பதென்பதற்காக நாங்கள் முயற்சி எடுக்கவில்லையென்று சொல்வதற்கில்லை.

 கேள்வி :- இறந்த உறவுகளை எதிர்கால சந்ததி நினைவுகூருவதென்பது சாத்தியமானதா ?

பதில் :- தமிழ்மக்கள் சார்பாக போராடியவர்களை நினைவுகூருவதற்கு கோத்தபாய அரசாங்கம் பல்வேறுபட்ட நெருக்குவாரங்களை கொடுத்து, நீதிமன்றம் ஊடாக தடையுத்தரவுகளை விதித்திருந்தது. அரசாங்கம் கெடுபிடி நிலைகளை விதித்திருந்தாலும், நினைவுகூருகின்ற விடயம் தமிழ்மக்களின் மனங்களிலிருந்து அகற்ற முடியாது. அது நடந்துகொண்டுதான் இருக்கும். அதனை தவிர்ப்பதென்பது தமிழ்மக்களின் உணர்வை உரிமையை மறுக்கின்ற செயலாக இருக்கும். அதனைத் தவிர்ப்பது புத்திசாலித்தனமான செயலாக இருக்க முடியாது.

 கேள்வி :- தேசியத்துக்காகக் குரல் கொடுக்கும் 10 தமிழ் கட்சிகளில், ஏழு கட்சிகள் கூட்டமைப்பிலிருந்து பிரிந்துவந்த நிலையில், மீளவும் இணைந்து செயற்படுவதென்பது சாத்தியமானதா ?

பதில் :- அடிப்படைவாத அரச கட்சிகளின் செயற்பாடுகளால் தமிழ்மக்கள் பாதிக்கப்படுவதனால், ஒரு பொது நோக்கின் அடிப்படையில் கட்சிகள் இணைந்து பயணிக்க வேண்டிய நிர்ப்பந்தத் தேவை ஏற்பட்டிருக்கின்றது.

தமிழ்த்தேசியக் கட்சிகள் எப்போதும் தமிழர்களின் உரிமை உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்ற கட்சியாக இருப்பதனால், அரசாங்கம் கெடுபிடிகளை கையாளும்போது சிறு சிறு பிரச்சினைகளை ஒரு பக்கம் தள்ளிவிட்டு கட்சிகள் எல்லாம் இணைந்து பயணிக்கக்கூடிய ஒரு வாய்ப்பு உருவாகும். எனவே நிரந்தரமான இனப்பிரச்சினை தீர்வினை எதிர்பார்க்கின்ற படியால் கட்சிகள் ஒரு பொது வேலைத் திட்டத்தின் கீழ் பயணிக்க வேண்டிய ஒரு நிலைமை ஏற்படும். அந்த வகையில் கூட்டமைப்பு இணைந்து பயணிக்கின்ற செயற்பாட்டினை ஒரு சாதக விடயமாக பார்க்கின்றது. இதே போன்று ஏனைய தமிழ்த்தேசிய கட்சிகளும் நினைக்கின்றபோது இணைந்து பயணிக்கக்கூடிய நோக்கம் நிறைவேறுவதற்கான வாய்ப்பு நிறைய இருக்கின்றது.

கேள்வி :- 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட நிலையில், புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படவுள்ளதென்பது வெறும் கண் துடைப்பு தானே ?

பதில் :- புதிய அரசியல் சீர்திருத்தம் கொண்டு வருவதாக இருந்தால் அதற்கு முன்பு அவசரப்பட்டு 20 ஆம் திருத்தத்தை கொண்டு வந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அவ்வாறு புதிய அரசியல் சீர்திருத்தம் மிக விரைவாக கொண்டு வரவுள்ளதாக இருந்தால் 20 ஆவது திருத்தத்தை கொண்டு வந்திருக்க மாட்டார்கள். 20 ஆவது திருத்தத்தை அவசரமாக கொண்டு வந்தவர்களுக்கு புதிய அரசியல் யாப்பு திருத்தத்தினை கொண்டுவர வேண்டிய தேவை குறைவாக காணப்படுகின்றது. அப்படித்தான் புதிய யாப்பு திருத்தம் கொண்டு வந்தாலும் கூட புரையோடிப் போயிருக்கின்ற இனப்பிரச்சினையை தீர்க்கக்கூடிய விதத்தில் எந்தளவுக்கு அக்கறை காட்டும் என்ற விடயமும் கேள்வியாக இருக்கின்றது.

அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கின்ற விடயத்தை விட பேரின அடிப்படைவாதத்தை  இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும் என்ற போக்கில்தான் செயற்படுகிறது. இருந்தாலும் சர்வதேச நாடுகளும் புரையோடிப் போயிருக்கின்ற இனப்பிரச்சினை சம்பந்தமான விடயங்களை ஆராய முற்பட்டிருக்கின்றது. அதே போன்று பிரித்தானியாவில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை நீடிப்பதற்கான போதிய சான்றுகள் இல்லையென்று சொல்லியிருக்கின்றது. அதாவது இனியும் தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலைப்பாடுகளில் தங்களுடைய கருத்தியலை சொல்லி வருகிறார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பின்பற்றுகின்ற இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்துமாக இருந்தால் இனியும் ஒருகாலத்தில் வரக்கூடிய இடர்பாடுகளை தவிர்த்துக்கொள்வதற்குரிய புத்திசாலித்தன செயற்பாடாக இருக்கும். எனவே அரசாங்கம் தர மறுத்தாலும் கூட இன்றைய காலகட்டத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைத்துத்தான் ஆக வேண்டும். அதற்குரிய இராஜதந்திர செயற்பாடுகளை தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சிகள் ஒரு கூட்டாக செய்ய வேண்டிய காலம் கனிந்திருக்கின்றது. அதனை செய்வதன் ஊடாக பொருத்தமான தீர்வினை அடைவதற்குரிய பயணத்தை நாங்கள் தொடர வேண்டும். அப்படி அரசாங்கம் வழங்காது விட்டாலும் கூட இனப்பிரச்சினைக்கான தீர்வின் தேவை இல்லாது போய்விட மாட்டாது. அது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.

கேள்வி :- கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதி பதிவியேற்றதிலிருந்து, தமிழர் தரப்புடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடாத்தவில்லை தானே ?

பதில் :- சிறுபான்மை தேசிய இனங்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளையறிந்து அவற்றில் அக்கறை காட்டி தீர்க்கின்ற போதுதான் அவர் பல்லின மக்களுக்கும் பொதுவான தலைவராக கருதப்படுவார். அவ்வாறு இல்லாது தனியே சிங்கள இன மக்களின் விருப்பத் தேவைகளை மாத்திரம் நிறைவேற்றக்கூடிய ஜனாதிபதியாக இருந்தால்
இந்த நிலைப்பாடுகள்தான், கடந்த காலத்திலும் ஆளுகின்ற அரசாங்கங்கள் ஒரு இனத்தின் மத மொழி கலாசார பொருளாதாரத் தேவையை முன்னேற்றுவதற்கு முற்பட்ட படியால்தான் ஆயுதப் போராட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டு மெளனிக்கப்பட்டது.

போராட்டம் மெளனிக்கப்பட்டதனால் தமிழர்கள், பிரச்சினைகளுக்கான தீர்வை கேட்காமல் மெளனமாக இருந்துவிடுவார்கள் என்று நினைக்கக்கூடாது. அடக்கு ஒடுக்கு முறையினால் மனதில் ஏற்படுகின்ற உணர்வுகளை உரிமைத் தாகத்தினை அடக்கிவிட முடியாது என்பதை கோத்தபாய அரசாங்கம் அறிந்து செயற்பட வேண்டும். ஜனாதிபதி பிடிவாதமாக தமிழ்த் தரப்போடு பேசாமல் விடுவதென்பது ஒரு இனத்தின் தலைமைத்துவத்தை மறுக்கின்றார் என்றால் அந்த இனத்தின் தலைவராக இருப்பதற்குரிய தகுதியை தானாக இழந்துகொள்வதற்குரிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றாரா ?

எனவே பல்லினத் தலைவராக இருந்தால் சிறுபான்மையினருக்குரிய தீர்வும் காணுகின்ற போதுதான் அவர் பல்லினமக்களின் தலைவராக இருக்க முடியும். ஓரினத்தின் அபிலாசைகளை தீர்க்கின்ற போது அவர் ஓரினத்தின் தலைவராகவே கருதப்பட வேண்டியிருக்கின்றது.

கேள்வி :- வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கு பிரச்சினைகளிருந்தும், அரசியல் ரீதியில் எந்தப் பிரச்சினைகளும் இல்லை என்றுதானே அரசாங்கம் கூறுகிறது ?

பதில் :- அபிவிருத்தியும் வேலைவாய்ப்பும் தான் பிரச்சினை என்று சொல்லுகின்றவர்கள் தமிழ்மக்களின் உணர்வுகளை மதிக்கத்தெரியாதவர்கள். பயிர்ச்செய்கை அபிவிருத்தியென்று வாழ்விடங்களையும் தொல்லியல் போர்வையில் நிலங்களை அபகரித்தாலும், மொழியுரிமை கலாசாரங்கள் பாதிக்கப்பட்டாலும் பிரச்சினையில்லை என்றெல்லாம் அரச கட்சி சார்ந்தவர்கள் நினைக்கின்றார்கள்.

எனவே தமிழ்மக்களுக்கு பிரச்சினைகளில்லை என்று சொல்லுகின்றவர்கள் கடும்போக்குள்ள அடிப்படை இனவாதிகளாகவே இருக்க முடியும். தமிழ்மக்களுக்கு பிரச்சினையிருக்கென்று உணராதவர்களால் பிரச்சினைக்குரிய தீர்வை முன்வைக்க முடியாது.

எனவே, ஒரு நாட்டில் தங்கியிருந்து தங்களது அதிகாரத்தை செலுத்தி சர்வதேச நாடுகளுக்கு கொடுத்த உத்தரவாதத்தை நிறைவேற்றாது காலத்தை வீணாக கடத்துவார்களாக இருந்தால், சர்வதேச ரீதியான நெருக்கடிகளை இலங்கை அரசாங்கம் எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்படும். அதன் பின்பாவது பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும். கடும்போக்குவாதம் சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கின்றது.தென்னிலங்கை வாக்குகளை மாத்திரம் வைத்துக்கொண்டு அரசியல் செய்வதென்பது சிங்கள மக்களுக்கு மாத்திரம் பணியாற்றுவதாக அமையுமெயொழிய வடக்கு கிழக்குத் தமிழ் பேசும் மக்களின் புரையோடியப் போயிருக்கின்ற பிரச்சினைகளை தீர்க்கும் மார்க்கம் இல்லாமல் போகும் என்ற நிலைமையையே எடுத்துக்காட்டும். எனவே சகல மக்களுக்குமுரிய பொதுவான பல்லின ஜனநாயகத் தலைவராக செயற்பட்டால்தான் பிரச்சினைகளுக்குரிய தீர்வினை கண்டுகொள்ள முடியும்.

கேள்வி :- அதிகாரங்கள் தனியொருவரிடத்தில் குவிக்கப்படுவதனால் தமிழர்களின் இருப்புக்கும் இறைமைக்கும் ஆபத்துதானே ?

பதில் :- எங்கெல்லாம் அதிகாரங்கள் குவிக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் அடக்குமுறை, சர்வாதிகாரம், ஒடுக்கு முறை, மனித உரிமை மீறல்கள் ஏற்படும். எனவே 20 ஆவது திருத்தத்தின் அடிப்படையில் கடும்போக்கு வாதம் கடைப்பிடிக்கப்படுமாக இருந்தால், இனிவருகின்ற காலத்தில் அரசியல் யாப்பை இன்னுமொரு அரசாங்கம் வந்து திருத்த வேண்டிய ஒரு நிலைமை ஏற்படலாம். ஏனென்றால், ஜனநாயகத்தை விஸ்தரிப்பதற்காகத்தான் நாடுகள் பாடுபடுகின்றனவே ஒழிய சர்வாதிகாரத்தை ஏற்படுத்திக்கொள்வதற்கு அல்ல. மக்களாட்சியின் உரிமை முக்கியமானதா ஆளுகின்ற சர்வாதிகாரியின் இறைமை முக்கியமானதா என்று பார்க்கின்றபோது சர்வாதிகார நாடாக இருந்தால் சர்வாதிகாரிகளின் இறைமை முக்கியமானது. இது ஒரு மக்களாட்சி நாடாக இருக்கின்ற படியால் மக்களின் உரிமை முக்கியமானது. மக்களின் உரிமைகளை சர்வாதிகாரிகள் இறைமையைக் கொண்டு மீறுகின்றபோது நிச்சயமாக மக்கள் கொந்தளிக்கக்கூடிய சூழல் இருக்குமேயொழிய அடங்கிக் கிடக்கமாட்டார்கள். அடங்கிக் கிடக்கின்ற மக்கள் பக்கமாக சர்வதேச ஆதரவுகளும் நெருங்கும். ஆட்சியாளர்களின் கடும்போக்கு வாதத்துக்குரிய பதிலடிகளாகவும் அவை அமைவதற்கும் வாய்ப்பு இருக்கின்றது.

கேள்வி :- நிறைவேற்றப்பட்ட 20 ஆவது திருத்தத்தில், ஜனநாயக குறைபாடுகள் உள்ளதுதானே ?

பதில் :- பாராளுமன்றத்தின் இறைமை மற்றும் பதவிக்காலம் இரண்டறை ஆண்டுகளாக குறைக்கப்பட்டிருக்கின்றது. ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தன்மை இழக்கப்படுகின்ற போது சர்வாதிகார பிடிவாதங்கள் இறுகக்கூடிய நிலைமையிருக்கின்ற படியால் பல்வேறு பலவீனத்தன்மைகளை ஏற்படுத்தும். மக்களுக்கு பாதகமாக சர்வாதிகாரத்துக்கு சாதகமாக அமையும்