Connect with us

இலங்கை செய்திகள்

சாணக்கியனின் முஸ்லிங்களுக்கு ஆதரவான பாராளுமன்ற உரை இந்தியாவின் அஜந்தாவில் வந்த ஒன்றே என நினைக்கிறேன் – மு.மா.சபை உறுப்பினர் ஜவாஹிர் சாலி.

Published

on

சாணக்கியனின் முஸ்லிங்களுக்கு ஆதரவான பாராளுமன்ற உரை இந்தியாவின் அஜந்தாவில் வந்த ஒன்றே – மு.மா.சபை உறுப்பினர் ஜவாஹிர் சாலி தெரிவிப்பு

இந்த நாட்டிலே 2012 இலிருந்து முஸ்லிம்களுக்கு ஏதோவொரு வகையில் அடிக்கடி பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கின்றன. மதத்தலைமைகளை விட, கற்றறிந்த சிவில் சமூகத் தலைமைத்துவங்களை விட அரசியல் தலைமைகளையே தலைவர்களாக நம்பிக் கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகம் பிரச்சினை காலங்களில் இந்தத் தலைமைகளில் நம்பிக்கை இழந்து, அந்த நேரத்தில் தங்கள் எண்ணங்களுக்கேற்ப யார் பேசுகிறாரோ அவரைப் புகழும் உணர்ச்சிக்கு கட்டுப்பட்ட சமூகமாகவே இருக்கிறது. இது அவர்களின் பிழையல்ல. காலத்திற்கு காலம் உணர்ச்சிகளால் ஏமாற்றப்படும் அவர்களைக் குறை கூற முடியாது என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜவாஹிர் சாலி தெரிவித்துள்ளார்.

அண்மையில் மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் உரை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தனது கருத்தில்

இரண்டு நாட்களாக முஸ்லிம் சகோதரர்களின் சமூக வலைத்தளங்களில் அதிகம் புகழப்படுவதாகவும் பகிரப்படுவதாகவும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் அவர்களின் பெயரும் பாராளுமன்ற உரையின் வீடியோவுமே உள்ளன.

தைரியமான பேச்சு, புதியவரென்றாலும் பாராளுமன்றத்தின் நிலையியல் கட்டளை பற்றிய அறிவுள்ளவர், தமிழை விடவும் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் சிறப்பான பேச்சு என்பவற்றிற்காக நானும் அவரைப் புகழ்ந்து பாராட்டுகிறேன். அநுரகுமார திஸாநாயக்க, சுமந்திரன், சரத் பொன்சேகா, கர்த்தினால் மல்கம் ரஞ்சித் என்று எத்தனையோ பேரை புகழ்ந்து பின் உணர்ந்து பரிதவிக்கும் நம் சமூகம் மிக உச்சக்கட்ட சோதனையிலிருக்கும் இக்கால கட்டத்தில் எமக்காக யாராவது பேசமாட்டார்களா? என ஏங்கிக் கொண்டிருந்த நேரத்தில் சாணக்கியனின் பாராளுமன்ற உரை ஆறுதலளித்ததால் வந்த புளகாங்கிதமும் நம்பிக்கையும் தான் இந்த வாழ்த்துக்களுக்கு காரணமென்பதை மறுக்க முடியாது.

இவரது உரையின் சுருக்கம் சீனா இலங்கையைச் சுரண்டுகிறது. இதை சிங்களப் பெரும்பான்மை உணர்ந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும். இல்லாவிட்டால், இலங்கையும் பாகிஸ்தான், லாவோஸ் போன்றாகி விடும் என்பதே. இதற்கு ஆதாரமாக இடையில் குறுக்கீடு செய்த ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தமிழர்களையோ, முஸ்லிம்களையோ, கிறிஸ்தவ மதத்தவர்களையோ பற்றிப் பேசவில்லை. சாணக்கியன் சீன விடயத்தில் சிங்களவர்களை பிழையாக வழிநடத்தப் பார்க்கிறார் என்றே குற்றஞ்சாட்டினர்.

சாணக்கியனின் இந்த உரை இந்தியாவின் அஜந்தாவில் வந்த ஒன்றே என நான் நினைக்கிறேன். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பெரும்பாலான முஸ்லிம் உறுப்பினர்கள் போல விரும்பியதையெல்லாம் பேசாமல் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் வகுத்து வழிநடத்தப்படுகின்றனர்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சார்ள்ஸ் நிர்மலநாதன், சாணக்கியன் ஆகியோரின் உரைகளை வைத்தே நாம் இதனை ஊகிக்கலாம். 2009ம் ஆண்டு கடந்து 11 வருடங்கள் பாதுகாப்பு அமைச்சுக்கான பட்ஜெட் உரை மூன்று அரசாங்கங்களின் கீழ் இடம்பெற்றுள்ளன. அப்படியிருக்கையில் 2009ம் ஆண்டு சம்பவம் இம்முறை போல் எம்முறையும் ஆளுந்தரப்பைத் தாக்கவில்லை. மூன்றில் இரண்டையும் வைத்துக் கொண்டே தடுமாறும் நிலையும் காணப்படுகிறது. எனவே தான் இப்போது நடப்பது நமது மக்களுக்கான வாதமல்ல. இந்தியாவா?, சீனாவா? என்ற போட்டியே.

இப்போது சாணக்கியனின் உரையின் வீடியோவை மீளப்பாருங்கள். அவரது குறிப்பிலிருந்து சீன விடயத்தை மெய்ப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்ட விடயங்கள் தமிழ் மக்களுக்காகப் பேசுவதாக,மாவீரர் தினத்தில் பிரபாகரனின் படத்தை முகநூலில் இட்ட வடக்கு, கிழக்கு தமிழ் இளைஞர்களின் கைது. War Cemetery களில் நினைவுத்தூபிகள் உடைக்கப்பட்டமை. கார்த்திகை தீபத்துக்காக கோயில்களில் ஏற்றப்பட்ட விளக்குகள் பொலிசாரால் உடைக்கப்பட்டமை.

இவை மூன்றையும் குறிப்பிலிருந்து எடுத்து சிறப்பாக உரையாற்றிய அவரின் உணர்ச்சி வேகத்தில் வந்த விடயங்கள் தான் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் பற்றிய விடயங்கள். சாணக்கியனின் உரையில் ஒரு விடயம் முஸ்லிம் இளைஞர்களைப் பாதிக்கக்கூடியது. எனவே, அது பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை.

முஸ்லிம்களின் பெரும்பான்மை வாக்குகளைப்பெற்ற எதிர்க்கட்சி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதுவும் பேசாத நிலையில், சாணக்கியன் முஸ்லிம்களுக்காகப் பேசியது மகிழ்ச்சி தான். அதற்காக எல்லா முஸ்லிம் தலைவர்களையும் குற்றஞ்சாட்ட முடியாது. இது தான் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் உண்மை நிலை.எதிர்க்கட்சியில் இருந்தாலும் பிரச்சினையை மறைமுகப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முயற்சிக்கும் சிலர். குறைந்த வாக்குகளோடு பாராளுமன்றத்தில் ஆளுங்கட்சியோடு இருப்பதால் அவர்களை அழுத்தங் கொடுக்காமல் அணுகி வெல்லும் முயற்சியில் இருவர். தேசியப்பட்டியலில் சென்றதால் அழுத்தங் கொடுக்க முடியாத நிலையில் இருவர். தான் முஸ்லிமா? என்று தெரியாத நிலையில் ஒருவர். யார் எரிந்தாலும் பரவாயில்லை. பட்ஜெட் முடிந்த பின்னாலாவது ஒரு அமைச்சைப் பெற வேண்டுமென்ற நிலையில் எதிர்க்கட்சியில் ஓரிருவர்.

இவர்கள் பேசுவதை எதிர்பார்க்காமல் முஸ்லிம்களின் மிகப்பெரும் பிரச்சினையான எரித்தல் விடயத்தில் நியாயம் கிடைக்கப் பிரார்த்திப்போம். ஆட்சியை மாற்றுவதற்கு நோன்பு நோற்கச் சொன்னவர்கள் இதற்கு சொல்லமாட்டார்கள். எனவே, முஸ்லிம் சிவில் சமூகம் இதற்கான ஏற்பாட்டைச் செய்யட்டும். பேச்சை விட பிரார்த்தனை சக்தி வாய்ந்தது என்பதைக் காட்டுவோம். என்று தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *