கட்டுரை
சிதறுண்டு போயிருக்கும் தமிழர் அரசியல்!

வளவன்
இன்று உலகத்தில் முக்கிய பேசுபொருளாக கொரோனா வைரஸின் தாக்கம் இருந்தாலும் அந்தந்த நாடுகள் தங்களுடைய ஜனநாயகக் கடமைகளை நிறைவேற்றுவதில் பின்னிற்கவில்லை. குறிப்பாக வடகொரியா, தாய்வான் போன்ற நாடுகளில் தேர்தல் நடந்து முடிந்திருக்கின்றது. அவ்வாறு இலங்கையிலும் பாராளுமன்றத் தேர்தல் நடத்தி முடிக்கப் பட்டிருக்கின்றது. அத்துடன் ஜனநாயக நாடான அமெரிக்காவிலும் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த நிலையில் இலங்கை அரசியலில் நீண்டகாலமாக தமிழர் விடுதலை அரசியல் என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகின்றது. தமிழர்கள் பக்கம் அரசியல் விடுதலைக்கான கோரிக்கைகளை முன்வைப்பதில் பங்கு ஏராளமான தமிழர்களுக்கு இருக்கின்றது.
பல்வேறு கலந்துரையாடல்களிலும், பல்வேறு கூட்டங்களிலும் பல்வேறு அறிஞர்கள், நோபல் பரிசு பெற்றவர்கள் கனவான்கள் போன்றோர்கள் இலங்கைத் தமிழர்கள் நீண்டகாலமாக அரசியல் பிரச்சினைகளுக்குள் சிக்கியிருக்கின்றார்கள் என்பதை ஏற்றுக்கொண்டே வருகின்றார்கள்.
ஆனால் இலங்கையில் இருக்கக்கூடிய பெரும்பான்மை அரசியல்வாதிகள் அந்தப் பிரச்சினைகளைத் தட்டிக் கழிப்பதில் பெரும்பங்கு வகித்து வருகின்றார்கள். அவர்களுக்கு உறுதுணையாக செயற்படும் வகையில் இலங்கையில் இருக்கக்கூடிய தமிழ் அரசியல்வாதிகளும் அவர்களுக்கு ஒத்துழைப்பாகவே இருந்து வருகின்றார்கள்.
அதன் உச்சக்கட்டமாகத்தான் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் வாக்குகள் சின்னாபின்னமாக இருந்தன. அந்த வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரியளவில் இழந்தது. இலங்கையில் இருக்கக்கூடிய பிரதான தமிழ் அரசியல் கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இருந்து வந்தது. அந்த நிலையை தமிழ் தேசிய கூட்டமைப்பு பெருமளவு இழந்திருக்கின்றது என்றே சொல்ல வேண்டும்.
ஒற்றுமையாக தமிழர்கள் வாக்களித்ததன் காரணமாக 2004ஆம் ஆண்டுத் தேர்தலில் 22 ஆசனங்களைப் பெற்று தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரிய ஜனநாயக சக்தியாக பாராளுமன்றத்திற்குள் நுழைந்தது. ஆனால் அன்றைய தினம் இருந்த தமிழ் அரசியல் தலைவர்கள் தங்களுடைய அரசியல் கடமைகளை சரியாக நிறைவேற்றத் தவறியதன் காரணமாக மீது பாரிய யுத்தம் ஒன்று 2009ஆம் ஆண்டு ஏற்பட்டு பேரழிவுகள் இடம்பெற்று ஆயுதப் போராட்டம் மௌனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கக் கூடிய அன்று தெரிவு செய்யப்பட்ட பெரும்பாலான உறுப்பினர்கள் இராஜதந்திர ரீதியாக செயற்பட்டிருப்பார்களாக இருந்தால் அந்த இழப்பை, மக்களின் பேரவலத்தை நிச்சயமாகத் தடுத்திருக்க முடியும். ஆனால் அவர்கள் அந்த ஜனநாயகக் கடமையிலிருந்து முற்றுமுழுதாகத் தவறியிருக்கின்றார்கள்.
அதன் விளைவுதான் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை வெறுக்கத் தொடங்கினார்கள். அதனால் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அந்த ஆசனங்கள் 16 ஆகக் குறைந்தது. அவ்வாறே 2020 ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 10 ஆசனங்களைப் பெற்று செயற்பட்டுக் கொண்டிருந்தாலும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையே பாரிய முரண்பாடுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனுடைய செயற்பாடுகள் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தன. இருந்தாலும் அவர் யாழ்ப்பாண மாவட்டத்தில் வெற்றியடைந்திருந்தார். அவர் எவ்வாறு வெற்றியடைந்தார் என்பது பல வாதப்பிரதி வாதங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் கடந்த வாரம் இடம்பெற்ற கூட்டமொன்றில் பேசிய தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சியான புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் குறிப்பிடுகையில், சுமந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளராக இருக்கின்றாரா இல்லையா என்பது பற்றி தமக்குத் தெரியாது என்று குறிப்பிட்டிருந்தார். இதிலிருந்து அவர்களுக்கிடையிலான ஒற்றுமை எந்தளவுதூரம் இருக்கின்றது என்பது நன்றாக விளங்கிக் கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.
இன்று இலங்கையில் இருக்கக்கூடிய எந்தவொரு அரசியல்வாதியும் எந்தவொரு இடத்திற்கும் மிகச் சுதந்திரமாகச் சென்று வரக்கூடிய நிலைமை ஒன்று காணப்படுகின்றது.
அவ்வாறிருந்தாலும் கூட தமிழ் அரசியல்வாதி சுமந்திரன் மாத்திரம் தமிழ் பகுதிகளுக்கு சுதந்திரமாகச் சென்றுவர முடியாத நிலை காணப்படுகின்றது. அவர் அதிரடிப்படையின் பாதுகாப்பின் மத்தியில்தான் மக்கள் மத்தியில் சென்றுவரக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருக் கின்றது. இதிலிருந்து பெருமளவு மக்கள் சுமந்திரனை வெறுக்கின்றார்கள் என்பதில் மாற்றுக் கருத்திற்கிடமில்லை.
ஆகவே அவர் தொடர்ந்தும் தன்னுடைய நிலைப்பாடுகளை மாற்றாமல் தான் தோன்றித்தனமாக செயற்படுவாராக இருந்தால் இந்தப் பத்து ஆசனங்கள் அடுத்தமுறை ஐந்து ஆசனங்களாக மாறுவதற்கு பெருமளவு வாய்ப்பிருக்கின்றது.
இப்பொழுது இந்தக் கொரோனாத் தொற்று இருக்கின்ற நிலையில் இவ்வாறு தமிழ் கட்சிகள் சின்னாபின்னமாகியிருப்பது தமிழ் மக்களுக்கு ஆரோக்கியமான செயற்பாடாக இருக்காது. இவர்கள் தனித்தனியே நின்று எதையும் சாதிக்கப்போவதில்லை.
யாழ்ப்பாணம் என்பது தமிழர்களின் கோட்டையாக இருக்கக்கூடிய அந்தத் தேசத் திலே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் போட்டியிட்ட அங்கஜன் இராமநாதன் பெருமளவு வாக்குகளைப் பெற்றிருக்கின்றார். இதிலிருந்து தமிழ் மக்கள் இனவாதிகள் அல்லர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கின்றார்கள்.
ஏனெனில் தனிச்சிங்களக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, அதில் போட்டியிட்ட அங்கஜன் இராமநாதன் இவ்வளவு வாக்குகளைப் பெற்றிருக்கின்றார் என்றால் அது தமிழ் மக்கள், சிங்கள மக்களுக்கு தாங்கள் விரோதிகள் அல்லர் என்ற செய்தியைச் சொல்லியிருக்கின்றார்கள்.
இதே அம்பாந்தோட்டையிலோ, மாத்தறையிலோ அல்லதுபெருமளவு சிங்கள மக்கள் வாழும் தொகுதியிலே சிங்களவர் தமிழ் கட்சியில் போட்டியிடுவாராக இருந்தால் ஆயிரம் சிங்கள வாக்குகளைக் கூடப் பெறமாட்டார். அதிலிருந்து சிங்கள மக்கள் யாரும் தமிழ் கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டார்கள். அவ்வாறே முஸ்லிம் மக்களும் கூட தமிழ் கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டார்கள். ஆகவே இதிலிருந்து தமிழ் மக்கள் இனவாதிகள் அல்லர் என்ற செய்தி கடந்த தேர்தல் உட்பட பல்வேறு தேர்தல்களில் நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.
ஆகவே தமிழ் மக்கள் இனவாதிகளாக இல்லாத அதே சமயம் தமிழ் மக்கள் தாங்கள் இந்தத் தீவிலே நிம்மதியாக வாழவேண்டிய மக்கள் கூட்டமாகவும் ஏங்கிக் கொண்டிருக்கின்றார்கள். ஆகவே தமிழர்களும் இந்த நாட்டிலே சமமானவர்கள் என்று சிங்கள அரசியல்வாதிகள் தங்கள் வாய்களால் சொன்னாலும் கூட செயல்களால் அவ்வாறு செய்வதில்லை. ஆகவே இதுஒரு சிறந்த நிலைமை அல்ல.
இந்தநிலைமையில் தமிழ் மக்களின் உரிமைகளை, தமிழ் மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களை, தமிழ் மக்கள் இந்தத் தேசத்திலே ஒதுக்கப் படுவதை எடுத்துக்கூறக்கூடிய தமிழ் அரசியல் கட்சிகள் வலுவிழக்குமாக இருந்தால் இந்தத் தேசத்திலே தமிழ் மக்களின் குரல் நசுக்கப்படும் என்பதில் மாற்றுக்கருத்திற்கிடமில்லை.
தமிழர் கலாச்சாரம், பண்பாடு, வரலாறு என்பன இன்று நேற்று தொடங்கியதல்ல. அது நீண்ட வரலாற்றைக் கொண்ட ஓர் இனம் தமிழ் இனம். ஆகவே அத்தகைய இனத்தை அடையாளம் இல்லாமல் செய்ய முற்படுவது ஆரோக்கியமானதல்ல. ஆகவே கொரோனா என்ற விடயத்தைக் காரணம் காட்டி அரசியல்வாதிகள் அமைதிகாத்து அமந்து போவது தேசத்திற்கும், மக்களுக்கும் சிறப்பானதாக இருந்துவிட முடியாது.
ஏனெனில் கொரோன நாளைக்குள் கட்டுப்படுத்திவிட முடியும் என்று கூறிவிட முடியாது. நீண்ட நாட்கள் கொரோனாவுடன் வாழவேண்டிய சூழ்நிலைக்குள் எம்மை தயார்படுத்தி கொள்ள வேண்டும்.
எனவே எமது அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக தமிழ் மக்களுக்காகத் தெரிவு செய்யப்பட்ட தமிழ் பிரதிநிதி களுக்கிடையே ஓர் ஐக்கியத்தை ஏற்படுத்தி மழுங்கவிடாமல் கொண்டு செல்ல வேண்டியது தமிழ் அரசியல்வாதிகளின் கடமையாகும்.
