இலங்கை
சீன தூதரகத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு !

சீன- இலங்கை நட்புறவின் அடையாளமாக இலங்கையில் அமைந்துள்ள சீனத்தூதரகம் ஊடாக கொழும்பு உட்பட பல மாவட்டங்களையும் சேர்ந்த 2500 தேவையுடைய மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் தலைவர் மௌலவி மிப்ளால் தலைமையில் மாளிகாவத்தை பீ.டி.சிறிசேன விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இஸ்லாமிய கலாச்சார கலை நிகழ்வுகளுடன் வரவேற்பளிக்கப்பட்டு சிறுவர்களின் நிகழ்ச்சிகள் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கைக்கான சீன தூதுவர் திரு. ஷீ ஜன்ஹொங் பிரதம அதிதியாகவும் கௌரவ அதிதிகளாக இலங்கைக்கான சீன தூதுவராலய அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான தலைமையதிகாரி மற்றும் இலங்கைக்கான சீன தூதுவரின் செயலாளர் சங் ஹன்லீன்,முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் செயலாளர் ரூமி ஆமித், பொருளாளர் ஜௌபர் ஹாஜி, பொலிஸ் உயரதிகாரிகள், உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பாடசாலை புத்தக பைகளை வழங்கி வைத்தனர்.
இங்கு உரையாற்றிய முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் தலைவர் மௌலவி மிப்ளால், சீன- இலங்கை நட்புறவின் அடையாளமாக பல வேலைத்திட்டங்களை செய்து வரும் இலங்கையில் அமைந்துள்ள சீனத்தூதரக உயரதிகாரிகள் முதல்தடவையாக பொது மக்களின் நிகழ்வொன்றில் கலந்துகொள்வது இதுவே முதன்முறை. இது எங்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார். இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்த சீன தூதுவருக்கு நினைவுசின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
