சர்வதேசம்
சுலைமானி மரணத்துக்கு நிச்சயம் பழிவாங்குவோம்: ஈரான்

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்ற நிலையில், ஈரான் புரட்சிகரப் படைத் தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்கு நிச்சயம் பழிவாங்குவோம் என்று அயத்துல்லா அலி காமெனி மீண்டும் கூறியுள்ளார்.
இதுகுறித்து அயத்துல்லா அலி காமெனி தனது ட்விட்டர் பக்கத்தில், “சுலைமானியின் மரணத்துக்குப் பழிவாங்குவது தவிர்க்க முடியாதது. சுலைமானியின் மரணத்துக்கு உத்தரவிட்ட மனிதரும் (ட்ரம்ப்) பழிவாங்கலை எதிர்கொள்ள வேண்டும். பழிவாங்கல் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்” என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஜனவரி 3-ம் தேதி பாக்தாத்தில் ஈரானின் குவாட்ஸ் படையின் தளபதி குவாசிம் சுலைமானி, துணைத் தளபதி அபு மெஹதி முஹென்திஸ் உள்ளிட்ட ராணுவ வீரர்களை அமெரிக்காவின் ஆள் இல்லா ராணுவ விமானம் மூலம் குண்டுவீசித் தாக்கியது. இதில் சுலைமானி உள்ளிட்ட முக்கிய ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டார்கள்.
இந்த விவகாரத்தில் பழிக்குப் பழி வாங்குவோம் என்று முழக்கமிட்ட ஈரான் அரசு, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பைத் தீவிரவாதியாக அறிவித்தது.
மேலும், பதிலடியாக ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தில் ஈரான் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியது. இதில் கொல்லப்பட்ட அமெரிக்க ராணுவ வீரர்கள் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில் ஈரான் தளபதி சுலைமானி உள்ளிட்ட ராணுவத்தினரைக் கொலை செய்ததில் 40 அமெரிக்க அதிகாரிகளுக்குப் பங்கு உண்டு என்பதை ஈரான் ராணுவம் கண்டறிந்துள்ளது.
இதையடுத்து அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் உள்ளிட்ட 40 பேரைக் கைது செய்ய ஈரான் நீதிமன்றம் ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.