Connect with us

இலங்கை செய்திகள்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தேசியம் பேச வேண்டும்.தமிழரசுக்கட்சி சுயநலன்களுக்காக செயற்படவில்லை.தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்.

Published

on

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தேசியம் பேச வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தேசியம் பேச வேண்டும். மக்கள் சார்ந்த விடயங்களில் அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். தமிழர்களின் உரிமையை பேசுவது கூட்டமைப்பின் பிரதான கொள்கை. தமிழ்மக்கள் உரிமை சார்ந்த விடயத்திலே எங்களோடு இணைந்து பயணிப்பார்கள் என்பதிலே எந்தவித ஐயமுமில்லை என; கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான த.கலையரசன்; ஞாயிறு உண்மைக்கதிர் இணையத்தள செய்தித்தாளுக்கு அளித்த விசேட செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறினார். அந்தச் செவ்வியின் முழு விவரம் வருமாறு,

01) கேள்வி :- தமிழ் தேசிய கட்சிகள் வெறுமனே தேர்தல் அரசியல் மட்டும்தான் செய்கின்றன என்ற குற்றச்சாட்டு நிலவுகிறதே ?

பதில் :- தமிழர்களுடைய மொழி, இருப்புக்காக இலங்கைத் தமிழரசுக்கட்சி மாத்திரமே நீண்டகாலமாக
போராட்டத்தை முன்னெடுத்தது. அவ்வாறு முன்னெடுக்கின்றபோது வெறுமனே எந்த விடயத்தையும் இதய சுத்தியோடு அரசாங்கம் தமிழர்களுக்காக வழங்கியது என்றால், அது கேள்விக்குறியே. அவ்வாறான நீண்ட கால போராட்டத்தின் மத்தியிலேதான் ஒவ்வொரு விடயங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ் தேசிய அரசியல் என்கின்ற வகையில் இனம் மத மொழி கலை கலாசாரம் என்ற அடிப்படையில் தமிழர்களுக்கெதிராக பெரும்பான்மை சக்தியினரால் கொண்டு வரப்பட்ட அடக்குமுறைக்கு எதிராக செயற்பட்டிருக்கிறார்களே தவிர இலங்கைத் தமிழரசுக்கட்சியிலுள்ளவர்கள் சுயநலன்களுக்காக செயற்பட்டது கிடையாது. எவ்வாறான அடக்குமுறை இருந்தாலும் கிழக்கு அம்பாறையில் மூவின பரம்பலும் வாழ்வதால் ஒரு சிலவற்றை கையாள முடியாமல் இருக்கின்றது. இருந்தும் வடக்கில் தமிழர், தமிழ்தேசியம் என்ற அடிப்படையில் ஒன்றிணைந்தபோது உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அந்தப் போராட்டம் அரசியலுக்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டமாக பார்க்க முடியாது.

02) கேள்வி :- இலங்கையில் மத தலைவர்களின் செயற்பாடுகளை எவ்வாறு பார்க்கின்றீர்கள் ?

 

பதில் :- மத தலைவர்கள் நிதானத்தோடு மதத்தின் தொன்மை அடிப்படைகளை பின்பற்ற வேண்டியது தலையாய கடமையாக இருக்க வேண்டும். அதனை மீறிய ஒரு செயற்பாடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச அதிகாரிகளை தாக்கிய விடயம் என்பது உண்மையில் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. அவ்வாறு ஒருவர் செய்கின்ற விடயம் ஏனைய மத துறவிகளையும் சந்தேக பார்வைக்கு இட்டுச்செல்வதாகவுள்ளது. மத தலைவர் நடந்துகொள்கின்ற விடயம் ஏனைய சமூகங்களுக்குள் சந்தேகங்களை பாரிய எதிர்ப்புகளை உருவாக்கி இவ்வாறுதானா இவர்களுடைய நடைமுறை என்ற கேள்வியினை ஏற்படுத்துகின்றது. நாட்டில் வாழுகின்ற பெளத்த மத தலைவர்கள் மதத்தை கண்ணியமாக மதித்து செயற்பட வேண்டும். இவரைப் போன்றவர்களால் இன ரீதியான முறுகல் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு. ஆகவே நாட்டின் நன்மை கருதி மத தலைவர்கள் தான்தோன்றித்தனமாக நடவடிக்கைகளை விட்டு அரச நிர்வாக ரீதியானவற்றை முன்னெடுத்து அரச திணைக்களங்களோடு தொடர்புகளை ஏற்படுத்தி அதன் ஊடகவே நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமே தவிர இவர்கள் சட்டத்தை கையிலெடுத்து நடைமுறைப்படுத்துவதென்பது எதிர்காலத்தில் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு நிலைமையே உருவாகும்.
03) கேள்வி :- தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சிக்குள் தவறுகளை வைத்துக்கொண்டு, பிற கட்சிகளே கூட்டமைப்பின் சரிவு வீழ்ச்சிக்கு காரணம் என வீண்பழி சுமத்துவது ஆரோக்கியமானதா ?
பதில் :- தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பொதுவான கொள்கைகள் இருக்கின்றது. தமிழ் மக்கள் சார் இருப்பு, தமிழர்களுடைய நிலையான அரசியல் கட்டமைப்பு என்ற அடிப்படையில் கூட்டமைப்பு பிரதான கொள்கைகளுடன்தான் செயற்படுகிறது. பலமான கூட்டமைப்பினை கொண்டதனால் கூட்டமைப்புக்குள் இருக்கும் கட்சிகளுக்குள் இடைக்கிடையே கருத்து வேறுபாடுகள் வருவது வழமை. அவ்வாறான கருத்து வேறுபாடுகளை கலந்துரையாடி பேசித் தீர்க்கும் விடயமே இருந்துகொண்டிருக்கின்றது. எனவே ஜனநாயகம் கட்சி என்ற அடிப்படையில் கருத்து முரண்பாடுகள், பிரச்சினைகள் ஏற்படுவது வழமை. பிரச்சினைகளை இலகுவாக பேசித் தீர்த்த வரலாறுகளே இருக்கும் நிலையில் எதிர்காலத்திலும் அவ்வாறே செயற்படுவோம்
04) கேள்வி :- கூட்டமைப்பின் அரசியல், பேச்சுக்களும் அறிக்கைகளுமாகவே இருந்துகொண்டிருக்கின்றது என்று மக்கள் மத்தியில் விசனம் தெரிவிக்கப்படுகிறதே ?

பதில் :- எங்களை தமிழ் மக்களிலிருந்து பிரித்துக்கொள்வதற்காக செயற்படுபவர்களால் முன்வைக்கப்படும் கருத்தாகவே என்னால் பார்க்க முடிகிறது. கல்முனை வடக்கு உப பிரதேச செயலகப் பிரிவை தரமுயர்த்தி கொடுக்காததற்காக இக்கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. கல்முனை பிரதேச செயலகப் பகுதிகளில் தமிழர்கள் மாத்திரமல்ல முஸ்லிம்களும் வாழ்கிறார்கள். கூட்டமைப்பு ஜனநாயகம் பொருத்திய கட்சி என்ற அடிப்படையில் ஜனநாயக ரீதியாக சென்றுதான் கல்முனை பிரதேச செயலக விடயத்தை தீர்த்துக்கொள்ள வேண்டும். கூட்டமைப்பை இல்லாமலாக்கி மாற்றுத்தலைமைகளை கொண்டு வருகின்ற செயற்பாடுகளும் பிரதேச, மாவட்ட ரீதியாக இடம்பெற்றுக்கொண்டு வருகின்றது.


தமிழர் மகா சபையின் கர்த்தாவாக செயற்படுகின்ற கோபாலகிருஷ்ணனின் ஒவ்வொரு செயற்பாடுகளும், தமிழ் தேசிய அரசியலை சின்னபின்னமாக்குகின்ற செயற்பாடுகளாகவே  இருந்துகொண்டிருக்கின்றது.    எனவே மக்கள் மத்தியில் எழுப்பப்படுகின்ற கேள்வி நியாயமாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்ளத் தயார். அறிக்கை விடுகின்ற அரசியலாளர்கள் சிலர் இருக்கலாம், இல்லையென்று சொல்லவில்லை. கட்சியை விட்டு சாதிக்கப் போகிறோம் என்று வெளியேறி சென்றவர்கள் கூட சாதிக்கவில்லை.
ஏமாற்றப்படுபவர்களின் கதைகளை ஏமாளியாக இருந்து பார்க்க முடியாது. அதையெல்லாம் அலசி ஆராய்து முறையான தீர்மானங்களை எடுப்பது காலத்தின் தேவையாகும்.

05) கேள்வி :- வடகிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வீழ்ச்சி எவ்வாறு நிவர்த்தி செய்யப்படவுள்ளது ?

பதில் :- தமிழ் மக்கள் மத்தியிலே தொழில்வாய்ப்பு, அபிவிருத்தி என்ற பார்வை இருக்கிறது. அவை நிறைவு செய்யப்பட வேண்டும். போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நாட்டில் தமிழ்மக்களின் அபிலாசைகள் பூர்த்தி செய்யப்பட்டிருந்தால் மக்கள் எழுச்சி முன் மாதிரியாக இருந்திருக்கும். சில சலுகைகளுக்காக சோரம் போயிருக்கும் தமிழ் தலைமைகளின் போலிப் பிரச்சார கருத்துக்களை உள்வாங்கியதனாலேயே வீழ்ச்சி நிலை ஏற்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் மக்களை தெளிவுபடுத்தி எங்களை பலப்படுத்த வேண்டிய கடப்பாடு, கூட்டமைப்பின் பாதையை விளங்கப்படுத்தி மக்களுடைய எதிர்கால இருப்பை பலப்படுத்தக்கூடிய வகையில் கூட்டமைப்பு செயல்பாடுகளை முன்னெடுக்கும். நிச்சயமாக எங்கள் கட்சியை கட்டமைத்து கொண்டு செல்ல வேண்டிய கடப்பாடு எங்களுக்கு உண்டு.

06) கேள்வி :- தமிழ் மக்கள் மத்தியில் தேசியம் உரைத்துக்கொண்டிருப்பதனால் அனைத்தும் சரியாகி விடுமா ?

பதில் :- வெறுமனே அரசியலுக்காக தேசியம் பேசவில்லை. எங்களை பேச வைத்தது பெரும்பான்மையின தலைவர்கள். பேரின பெரும்பான்மை தலைவர்கள் கையாண்ட ஒவ்வொரு விடயத்திலும் தமிழ் மக்களின் இருப்புகளை கேள்விக்குறியாக்கிய விடயங்கள், அந்த விடயங்களை எடுத்து செல்வதில் நியாயமற்றதாக இருக்க முடியாது. தமிழ் தேசியம் என்ற அடிப்படையில் மக்களுக்கு ஏற்பட்ட அநீதிகளை சொல்வதில் பிழையான காரியமாக இருக்க முடியாது. ஆகவே சிங்கள தமிழ் மக்கள் மத்தியில் பேசப்பட வேண்டிய விடயத்தினையே பேசியிருக்கின்றோம். ஒவ்வொரு காலகட்டத்திலும் நடந்த விடயங்களை தெளிவுபடுத்தி நகர வேண்டிய கடப்பாடு எங்களுக்கு இருக்கின்றது.                                                                      தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தேசியம் பேச வேண்டும். மக்கள் சார்ந்த விடயங்களில் அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். தமிழர்களின் உரிமையை பேசுவது கூட்டமைப்பின் பிரதான கொள்கை. தமிழ்மக்கள் உரிமை சார்ந்த விடயத்திலே எங்களோடு இணைந்து பயணிப்பார்கள் என்பதிலே எந்தவித ஐயமுமில்லை.

07) கேள்வி :- கடந்த 2020, பாராளுமன்ற தேர்தலில் உரிமையா அபிவிருத்தியா வெற்றியடைந்தது ?

பதில் :- தமிழ் தேசிய கூட்டமைப்பை தமிழ்மக்கள் கைவிடவில்லை. இந்த அரசினால் திட்டமிட்டு செயற்படுத்தப்படுகின்ற பொய்யான பிரசாரத்தின் மாயையிலே தமிழ்மக்கள் சிக்குண்டுள்ளனர். நிச்சயமாக கூட்டமைப்பை மீளவும் கட்டியமைத்து அதனை வழிநடத்தக்கூடிய வகையிலே எங்களை கொண்டுசெல்வார்கள்.

2009 இல் முள்ளிவாய்க்காலில் போர் மெளனிக்கப்பட்டதற்கு பிறகு நடந்த மாகாண சபை தேர்தலிலே பிரசாரங்களை முன்னெடுக்காமலே வடக்குத் தமிழர்கள் வாக்களித்தார்கள் என்பதையும் விளங்கிக்கொள்ள வேண்டும். அதே போன்றுதான் யுத்தம் முடிந்த கையோடு நடைபெற்ற மாகாண சபை, பாராளுமன்ற தேர்தலில் எங்களுடைய தமிழ்மக்கள் பலமாக வாக்களித்தார்கள். எங்களுடைய தமிழ் மக்கள் எங்களுடன் இருக்கின்றார்கள் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.

08) கேள்வி :- சவால்களுக்கு மத்தியிலேயே கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனம் கிடைத்த நிலையில், ஒருவேளை கிடைக்காமல் இருந்திருந்தால் கூட்டமைப்பினதும் அம்பாறை தமிழர்களினதும் எதிர்கால இருப்பு எவ்வாறு இருந்திருக்கும் ?

பதில் :- ஒரு இலெட்சத்து இருபதினாயிரத்துக்கு மேற்பட்ட கிட்டத்தட்ட95,000 மேற்பட்ட தமிழ் வாக்காளர்களைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தில், 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்பு சார்பாக ஒரு பிரதிநிதியை பெற்றிருந்தோம். அம்பாறையில் பரந்துபட்ட சமூக கட்டமைப்பு இருப்பதனால் தேவைகள் அதிகமிருந்தும் சாதுர்யமாக எல்லா இடங்களுக்கும் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க வேண்டிய மாவட்டமாக இருக்கிறது. அவ்வாறான நிலையில் கடந்த பாராளுமன்ற பிரதிநிதியின் சேவைகளை முழுமையாக ஏற்றுக்கொள்ளாத திருப்தியற்ற நிலைமையும் இருந்திருக்கின்றது.

அந்த சந்தர்ப்பத்தில் இந்த தடவை(2020) தேசியப் பட்டியல் வழங்கப்படாமல் இருந்திருந்தால், உண்மையிலேயே அம்பாறையில் அவ்வாறான சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டிருந்தால் அம்பாறை மாவட்ட தமிழ்தேசிய அரசியல் கேள்விக்குறியாக இருந்திருக்கும்.

அம்பாறை மாவட்டத் தமிழர்கள் அரசாங்கத்தின் பலாபலன்களை கடந்த காலத்தில் நிறைவாக பெறாத நிலையில், அதற்கும் போராடுகின்ற நிலைமைதான் கடந்த காலங்களில் இருந்தது. தமிழ் தேசிய அரசியலில் இருந்து தமிழ்மக்கள் விடுபடக்கூடிய சூழல் உருவாகியிருக்கும். அவ்வாறு உருவாகின்ற போது தமிழ்மக்கள் சின்னாபின்னமாகி அலைக்கழிக்கப்பட்டு கட்டமைப்பு இல்லாமல் பலமற்றவர்களாக அம்பாறை தமிழர்கள் இருந்திருப்பார்கள்.

அதே வேளை தேர்தல் காலங்களில் அரசியல் வியாபாரிகளின் ஆக்கிரமிப்பு அம்பாறை மாவட்டத்தில் அதிகம். சிலர் சில அரசியல் கட்சி ரீதியாக பணத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு வாக்குச் சேர்க்கின்ற நிலைமை அம்பாறையில் இருக்கின்றது. இவ்வாறான நிலையில், தேசியல் பட்டியல் ஆசனம் வழங்கப்படாமல் இருந்திருந்தால் மாற்றுக் கட்சிகளின் ஊடுருவல் அதிகரித்து எங்களுடைய பிரதேசங்களிலே பல முகவர்கள் உருவாகி தமிழ்மக்களின் அபிலாசை எதிர்பார்ப்பை இல்லாமல் செய்து மிகவும் மோசமான சூழலை எதிர்நோக்க வேண்டி வந்திருக்கும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *