Connect with us

இலங்கை செய்திகள்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோயில் போலவே நடந்துகொள்ளுகிறது.கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் ஸ்தாபகத் தலைவர் த.கோபாலகிருஷ்ணன்.

Published

on

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோயில் போலவே நடந்துகொள்ளுகிறது. தேர்தல் வெற்றியைக் குறி வைத்து வாக்குச் சேகரிப்பதற்காகவும் போலித்தமிழ்த் தேசியம் பேசும் தற்போதைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரை ( தமிழரசுக்கட்சி) விடவும் வடகிழக்கு இணைந்த தாயக கோட்பாட்டை மனதார ஏற்று உண்மையான தமிழ்த் தேசியத் தளத்தில் இயங்குபவன் நான். அதனால் தான் மக்களை ஏமாற்றும் கூட்டமைப்பை விமர்சிக்கவும் எதிர்க்கவும் வேண்டிய தேவை ஏற்படுகிறது என, கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் ஸ்தாபகத் தலைவரும் அகில இலங்கை தமிழர் மகா சபையின் முன்னாள் செயலாளரும் அம்பாறை மாவட்ட தமிழர் மகாசங்கத்தின் முன்னாள் மாவட்ட இணைப்பாளருமான செங்கதிரோன் த.கோபாலகிருஷ்ணன்; ஞாயிறு            உண்மைக்கதிர் இணையத்தள செய்தித்தாளுக்கு அளித்த செவ்வியிலேயே இவ்வாறு கூறினார். அந்தச் செவ்வியின் முழு விவரம் வருமாறு,
01) கேள்வி :- தமிழ்த்தேசிய அரசியலை சின்னாபின்னமாக்குகின்ற செயற்பாடுகளை நீங்கள் முன்னெடுத்துக்கொண்டிருப்பதாக      கூறப்படுகிறதே, அதை  ஏற்றுக்கொள்கின்றீர்களா ?

பதில் :- அம்பாறை மாவட்டத் தமிழர்களைப் பொறுத்தவரை 1947 இல் இருந்து 1977 வரை சுமார் முப்பது வருடங்கள் தங்களுக்கென்று ஒரு தமிழ் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் இன்றியே இருந்துள்ளனர். 1976 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் தொகுதி எல்லைகள் மீள் நிர்ணயத்தின் போது புதிய பொத்துவில் தொகுதியை தமிழர் ஒருவரும் முஸ்லிம் ஒருவரும் தெரிவு செய்யப்படக்கூடியவாறு இரட்டை அங்கத்தவர் தொகுதியாக்கும் படியான கோரிக்கை குறித்த அறிக்கையினையும் புள்ளிவிபரம் மற்றும் வரைபடங்களையும் எல்லைகள் மீள்நிர்ணய ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிப்பதற்காக அவற்றைத் தயாரித்துக் கொடுத்ததில் எனது வகிபாகம் முக்கியமானது. அதன் அடிப்படையில் பின்னாளில் உருவான பொத்துவில் இரட்டை அங்கத்தவர் தொகுதி மூலம்தான் 1977 ஆம் ஆண்டு தேர்தலில் அமரர் ம.கனகரட்ணம் இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானதன் மூலம் அம்பாறை மாவட்டத் தமிழர்களுக்கு முதன் முறையாகத் தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைத்தது.

1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் பின்னர் இடம்பெற்ற நாடளாவிய தமிழ் – சிங்கள இனக்கலவரத்தின் போது அம்பாந்தோட்டை மாவட்ட தனமன்வல்ல உதவி அரசாங்க பிரிவில் அமைந்த தஞ்சை நகர் என்ற கிராமத்திலிருந்து அடித்து விரட்டப்பட்ட தமிழ்க்குடும்பங்கள் பொத்துவில் தொகுதியிலுள்ள உமிரி, சங்கமன்கண்டி ஆகிய இடங்களில் எனது முயற்சியினால் பாராளுமன்ற உறுப்பினர் ம.கனகரட்ணத்தின் உதவியுடன் குடியேற்றினேன். இன்று பெரிய கிராமங்களாக அவை வளர்ச்சி பெற்றுள்ளன.

அமரர் ம.கனகரட்ணத்துடன் மிக நெருக்கமாகச் செயற்பட்டு பொத்துவில் தொகுதியில் கஞ்சிகுடிச்சாறு குளத்தை மேலும் ஆறடி உயர்த்துதல் உட்பட பல அபிவிருத்தி வேலைகளை முன்னெடுப்பதில் சூத்திரதாரியாகச் செயற்பட்டேன். அன்று ம.கனகரட்ணமும் அவரது மரணத்தின் பின் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பெற்ற திருமதி ரங்கநாயகி பத்மநாதனும் அவர்களுடைய பதவிக்காலத்தில் ( 1977- 1989) இட்ட அத்திவாரத்தில்தான் அம்பாறைத் தமிழர்களின் நலன்கள் வேரூன்றியுள்ளன.

உரிமைப் போராட்ட அரசியல் ஈடுபாட்டினால் எனது அரசாங்க பதவியை இழந்துள்ளேன். ஓய்வூதியம் இன்னும் கிடைக்கவில்லை. பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைதாகி தடுப்புக்காவலிலும் விளக்கமறியல் கைதியாகவும் சிறைவாசம் அனுபவித்துள்ளேன். நாடு கடந்து சென்று அஞ்ஞாதவாசம் செய்யும் நிலைமையும் எனக்கு ஏற்பட்டது. அவற்றை விரித்துக்கூற விரும்பவில்லை. தமிழ்த் தேசிய அரசியல் ஈடுபாட்டினால் நான் எதிர்கொண்ட சவால்களில் இவை சிலவே.

இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தினை தொடர்ந்து 1989 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதய சூரியன் சின்னத்தின் கீழ் ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் வேட்பாளராக நிறுத்தப்பெற்றேன்.

1994 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்ட தமிழர் மகாசங்கத் தூதுக்குழுவின் கோரிக்கைகளையும் ஆலோசனைகளையும் அசட்டை செய்துவிட்டு தமிழர் விடுதலைக் கூட்டணி யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மாவை சேனாதிராசாவைத் தலைமை வேட்பாளராக நிறுத்தியபோது அம்பாறை மாவட்ட தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர் அம்மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடனும் அம்பாறை மாவட்டத் தமிழர்களின் கெளரவத்தை காப்பாற்றவும் அத்தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணியை எதிர்த்து அம்பாறை மாவட்டத் தமிழர் மகாசங்க சுயேச்சைக் குழுவுக்கு தலைமை தாங்கிப் போட்டியிட்டேன். தமிழ்த் தேசிய அரசியல் பின்னடைவுகளுக்கு காரணமான மேலதிக்க அரசியலுக்கு சவால் விட்டேன்.

2000 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், அதற்கு முந்திய 1994 ஆம் ஆண்டில் நடைபெற்றது போல் அம்பாறைத் தமிழர்களுடைய ஒரேயொரு பாராளுமன்ற பிரதிநிதித்துவமும் பறிபோய்விடக்கூடாது என்பதற்காக தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பு மனுவை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து அதனை நிராகரிக்கச் செய்து அம்முறை அம்பாறை மாவட்டத் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை அம்பாறை மாவட்ட தமிழர் மகாசங்கத்தின் சுயேட்சைக் குழுவுக்கு தலைமை தாங்கிப் போட்டியிட்டு காப்பாற்றினேன். இத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி, ஐக்கிய தேசிய கட்சி பட்டியலில் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்களையே ஆதரித்தது. ஆனாலும் அம்பாறை மாவட்ட தமிழர் மகாசங்கச் சுயேச்சைக்குழுவுக்கு ஆசனம் கிடைத்தது.

2000 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்புமனுவை நீதிமன்ற தீர்ப்பின் மூலம் நான் நிராகரிக்கச் செய்தது கிழக்குத் தமிழர்களின் நலன்கள் மீது கரிசனை கொள்ளாத மேலாதிக்க அரசியலுக்கு நான் விடுத்த இன்னுமொரு சவாலாகும்.

மேற்குறிப்பிடப்பட்ட கிழக்குத் தமிழர்களின் நலன் சார்ந்த எனது செயற்பாடுகளால் கலையரசன் கூறுவது போல தமிழ்த்தேசிய அரசியல் சின்னாபின்னமாகி விட்டதா ?

02) கேள்வி :- அவ்வாறாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிப்பதிலும் எதிர்ப்பதிலும் கிழக்கில் நீங்கள் முன்னணியில் திகழ்வதனாலா அப்படிக்      கூறுகிறார்கள் ?

பதில் :- தமிழ்த்தேசியம் என்ன தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மட்டும் சீதனம் எழுதிக் கொடுக்கப்பட்டதா ? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேலாதிக்க அரசியலுக்கு வால் பிடிப்பதும் தேர்தல்களில் அதற்கு வாக்களிப்பது மட்டும்தான் தமிழ்த்தேசியம் என அவர் கருதுகிறாரா ?

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோயில் போலவே நடந்துகொள்ளுகிறது. தேர்தல் வெற்றியைக் குறி வைத்து வாக்குச் சேகரிப்பதற்காகவும் போலித்தமிழ்த் தேசியம் பேசும் தற்போதைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரை ( தமிழரசுக்கட்சி) விடவும் வடகிழக்கு இணைந்த தாயக கோட்பாட்டை மனதார ஏற்று உண்மையான தமிழ்த் தேசியத் தளத்தில் இயங்குபவன் நான். அதனால்தான் மக்களை ஏமாற்றும் கூட்டமைப்பை விமர்சிக்கவும் எதிர்க்கவும் வேண்டிய தேவை ஏற்படுகிறது.

03) கேள்வி :- கிழக்கில் பிள்ளையான், கருணா அம்மான் போன்றோருடன் உங்களுக்கு ஊடாட்டம் உள்ளதே ?

பதில் :- இவர்கள் மட்டுமல்ல வியாழேந்திரனுடனும் கூட ஊடாடுவதில் தவறில்லையே. கிழக்கு மண்ணின் மீதும் மக்கள் மீதும் வற்றாத வாஞ்சை கொண்ட என்போன்றோர்கள் கிழக்கு அரசியல் களத்தில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் கருணா அம்மான், பிள்ளையான், வியாழேந்திரன் போன்றோருடன் ஊடாடுவதில் என்ன தவறு இருக்கிறது. இவர்களுடைய அரசியல் நிலைப்பாடுகள் அத்தனையுடனும் எனக்கு உடன்பாடில்லை. இவர்கள் மட்டுமல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சாணக்கியன், கருணாகரம் ஆகியோரையும் எதிரிகளாக பார்க்கவில்லை. அவர்களுடன் எனக்குள்ள கருத்து முரண்பாடுகள் நட்பு முரண்பாடுகளே தவிர அவை பகை முரண்பாடுகளல்ல. கிழக்குத் தமிழர்களின் சமூகப் பொருளாதார அரசியல் நலன்கள் என்று வருகின்றபோது இவர்கள் எல்லோருடனும் ஊடாடத்தானே வேண்டும். அது அவசியமும் கூட.

04) கேள்வி :- கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் உருவாக்கமும் அதன் எதிர்கால செயற்பாடுகளும் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குச் சவாலாக அமையுமா ?

பதில் :- கிழக்கின் இன்றைய களநிலையில் கிழக்குத் தமிழர்கள் ஐக்கியப்பட்டு ஒன்றுதிரண்ட அரசியல் சக்தியாக மேற்கிளம்புகிற போது மட்டுமே தங்களது சமூகப் பொருளாதார அரசியல் இருப்பைத் தக்க வைத்துப் பேணி வளர்த்தெடுக்க முடியும். அதனைக் கிழக்கில் செயற்படுகின்ற அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்த ஒரு கூட்டுப்பொறிமுறையொன்றின் மூலமே சாத்தியப்படுத்த முடியும். சகல தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒரு பொதுச் சின்னத்தின் கீழ் ஒன்றிணைப்பதற்காகவே கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு உருவானதே தவிர, அது தனிப்பட்ட எந்தத் தமிழ் அரசியல் கட்சிக்கும் எதிரானதும் அல்ல; ஆதரவானதும் அல்ல. கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் கதவுகள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உட்பட சகல தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் அகலத் திறந்தேயுள்ளன. கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியாக எந்தத் தமிழ் கட்சியும் இணைந்துகொள்ளலாம்.

05) கேள்வி :- கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் அரசியல் கட்டமைப்பு பற்றி கூற முடியுமா ?

பதில் :- தேர்தல் விதிகளின் படி ஒன்றுக்கு மேற்பட்ட பதிவு செய்யப் பெற்ற அரசியல் கட்சிகள் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றின் ஊடாக ஒன்றிணைந்து அரசியல் கூட்டணியை ஏற்படுத்தலாம். அதன் அடிப்படையில் பதிவுசெய்யப்பெற்ற அரசியல் கட்சிகளான அகில இலங்கைத் தமிழர் மகா சபையும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியும் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டு உரிய ஆவணங்களைத் தேர்தல்கள் ஆணையகத்திற்கு சமர்ப்பித்து, கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு ஓர் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியாக இயங்குவதற்குரிய அனுமதியைத் தேர்தல்கள் ஆணையகத்திலிருந்து எழுத்துமூலம் பெற்றிருக்கின்றோம்.

06) கேள்வி :- இதில் ஏனைய பதிவுசெய்யப்பெற்ற தமிழ் அரசியல் கட்சிகளையும் இணைத்துக்கொள்வது எப்படி ?

பதில் :- அதற்கான ஷரத்துக்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. நடந்து முடிந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்னர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியையும் பங்காளிக் கட்சிகளிலொன்றாக இணைத்துக்கொள்வதற்கு பகீரதப் பிரயத்தனம் செய்தோம்.

தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சந்திரகாந்தன் தேர்தல் முடிந்து தனது, விடுதலையின் பின்னர் மக்கள் முன்னிலையில் பகிரங்க மேடையில் வைத்து உரிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு கிழக்குத்தமிழர் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளிலொன்றாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்துகொள்ளும் என்ற வாய்மொழி வாக்குறுதியை எமக்குத் தந்திருந்தார். அதன் அடிப்படையிலேயே கடந்த தேர்தலில் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்திலே படகுச் சின்னத்துடன் இணைந்தும் அதாவது எமது பிரதிநிதியொருவரை படகுச் சின்னப் பட்டியலில் நிறுத்தியும் திகாமடுல்ல (அம்பாறை ) மற்றும் திருகோணமலை தேர்தல் மாவட்டங்களில் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளிலொன்றான அகில இலங்கைத் தமிழர் மகாசபையின் கப்பல் சின்னத்தில் கருணாம்மான் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியை உள்வாங்கியும் போட்டியிட்டது.

கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளிலொன்றாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியையும் இணைத்துக்கொள்வதற்குப் பிள்ளையான் சிறையிலிருந்து விடுதலையாகி வெளிவரும்வரை காத்திருக்கின்றோம். ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளுடன் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளாக இணைத்துக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கவும் உள்ளோம்.

07) கேள்வி :- கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ளும் ?

பதில் :- கிழக்கின் மூன்று மாவட்டங்களிலும் தமிழர்களின் சார்பில் தமிழ்க்கட்சிகள் யாவும் இணைந்து ஒரு பொதுச்சின்னத்தில் போட்டியிட்டால் மட்டுமே கிழக்கு மாகாண சபையின் ஆட்சியதிகாரத்தை தமிழர்கள் தம்வசப்படுத்த முடியும். அதற்கான கூட்டு அரசியல் பொறிமுறையொன்றினை கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேசி உருவாக்கி இத்தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ளும்.

08) கேள்வி :- அவ்வாறாயின் பொதுச்சின்னம் எதுவாக இருக்கும் ?

பதில் :- முதலில் கூட்டுப்பொறிமுறையை ஏற்படுத்திய பின் அப்பொறிமுறைக்குள் இணையும் அரசியல் கட்சிகள் கூடிப்பேசிப் பொதுச்சின்னம் தீர்மானிக்கப்பெறும்.

09) கேள்வி :- கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு வடகிழக்கு இணைப்புக்கு எதிரானதா ?

பதில் :- இல்லை. கிழக்குத் தமிழர்கள் எதிர்நோக்கும் தனித்துவமான சமூகப் பொருளாதார அரசியல் பிரச்சினைகள் மீது வடக்கைத் தளமாகக் கொண்டு தம்மைத்தாமே தமிழ்த்தேசியக் கட்சிகள் என்று குறிப்பிட்டுக் கொண்டுள்ள கட்சிகளுக்கு ஆத்மார்த்தமான அக்கறை கிடையாது. தத்தம் கட்சிகளுக்கு கிழக்கு மாகாணத்தில் பாராளுமன்ற, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களையும் பெற்றுக்கொள்வதே அவர்களது ஒரே நோக்கமாக உள்ளது. இதுதான் கிழக்குத் தமிழர்களின் கடந்த எழுபது வருட கால அனுபவம். ‘எலி வளையானாலும் தனி வளை வேண்டும்’, அழுதும், பிள்ளை அவளே’ பெறவேண்டும்.

கிழக்குத் தமிழர்களுக்கான தனித்துவமான அடையாள அரசியல் தளத்தில் காலூன்றி நின்று வடக்குடன் கை கோர்ப்பதே கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாடு. தவிர, கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு தமிழ்த்தேசியத்திற்கோ வடகிழக்கு இணைந்த தாயக கோட்பாட்டிற்கோ வடகிழக்கு இணைந்த ஒற்றை அதிகாரபகிர்வு அலகிற்கோ ஒற்றை மொழிவாரி மாகாணத்திற்கோ எதிரானதல்ல. இதனைக் கூட்டங்களிலும் ஊடகங்களிலும் எம்மால் வெளியிடப்பெற்ற துண்டுப்பிரசுரங்களிலும் பல தடவைகள் தெளிவுபடுத்தியுள்ளோம்.

உண்மையான பிரச்சினை என்னவெனில் கிழக்குத் தமிழர்களின் தமிழ்த்தேசியம் சார்ந்த அகவயப்பட்ட அவாக்களையும் அபிலாசைகளையும் எதிர்பார்ப்புகளையும் யாழ். மேலாதிக்கவாதம் புரிந்துகொள்ள மறுக்கிறது. இது எதைப் போன்றதென்றால் தமிழ் மக்களின் உணர்வுகளையும் ஆதங்கங்களையும் அரசியல் அபிலாசைகளையும் பெளத்த சிங்கள பேரினவாதம் புரிந்துகொள்ள மறுப்பதைப் போல.

10) கேள்வி :- அவ்வாறாயின் கலையரசனின் கூற்றை ஏற்றுக்கொள்ளவில்லையா ?

பதில் :- தமிழரசுக் கட்சியையும் தமிழர் விடுதலைக் கூட்டணியையும் கிழக்கு மண்ணில் வளர்த்தெடுத்ததிலும் உரிமைப் போராட்ட அரசியலில் எனது பங்களிப்பு என்ன என்பதைப் பற்றியும் தமிழ்த்தேசிய அரசியலில் எனது பின்னணி குறித்தும் நேற்றுப் பெய்த மழைக்கு இன்று முளைத்த காளான் போன்ற கலையரசனுக்கு தெரிய வாய்ப்பில்லை. அதனால் அவை பற்றி அவர் சார்ந்த தமிழரசுக்கட்சியின் தலைமை மாவை சேனாதிராசாவிடமும் அவருக்கு தேசியப் பட்டியல் கிடைக்க காரணமான தமிழரசுக்கட்சியின் முன்னாள் செயலாளர் சட்டத்தரணி கி.துரைராஜசிங்கத்திடமும் கேட்டு தெரிந்து கொள்ளட்டும். எனது பதினெட்டாவது வயதில் தமிழரசுக்கட்சியின் உறுப்பினனானவன், இப்போது வயது எனக்கு எழுபது என்றார்.
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *