இந்தியா
பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க இயலாது

டெல்லியில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.87.60 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.73 ஆகவும் உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நாடு முழுவதும் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. விலை உயர்ந்துள்ளதால் வரியை குறைக்க வேண்டும் என்பது தொடர்பாக பலரும் மத்திய அரசை கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளார். அதில், பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைப்பதற்கான எந்தவித திட்டமும் இல்லை என கூறியுள்ளார். மத்திய அரசின் நிலை மற்றும் சந்தை நிலவரத்தை பொறுத்தே வரியை அதிகரிப்பது, குறைப்பது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விலை என்பது சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் விலையை பொறுத்தே அமைகிறது என்றும், மத்திய, மாநில அரசுகள் வரியின் மூலம் கிடைக்கும் வருவாயை மக்கள் நலத்திட்டங்களுக்கான பயன்படுத்துவதாகவும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.