Connect with us

மங்கையர்

பெண்களின் வாழ்க்கைக்குள் நுழையும் ‘மூன்றாம் நபர்கள்’

Published

on

திருமண வாழ்க்கை முறையில், இந்திய கலாசாரத்திற்கும்- மேலைநாட்டு கலாசாரத்திற்கும் இடையே பெரிய வித்தியாசம் இருக்கிறது. மேலைநாடுகளில் தம்பதிகளில் யாரேனும் ஒருவருக்கு இன்னொருவரோடு முரண்பாடான உறவு உருவாகிவிட்டால், பின்பு அந்த தம்பதிகள் ஒன்றாக வாழ்வதில்லை. மூன்றாம் நபரால் அவர்கள் தங்கள் உறவை முறித்து, விவாகரத்து பெற்றுவிடுவார்கள். அந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் இருந்தாலும்கூட விவாகரத்து செய்துவிடுவதுதான் பெரும்பாலானவர்களின் முடிவாக இருக்கிறது. சட்டரீதியாகவும், மனிதாபிமானத்துடனும் அவர்கள் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டுவிடுவார்கள்.

 

தம்பதிகளின் வாழ்க்கையில் மூன்றாம் நபர்களின் தலையீடு எப்படி ஏற்படுகிறது? அதனால் ஏற்படும் பிரச்சினைகள் என்னென்ன?

 

“நிறைய பேர் வீட்டை விட்டு வெளியே சென்று வேலைபார்ப்பதும், செல்போன் இன்டர்நெட் வழியாக மற்றவர்களுடன் நட்பை உருவாக்கிக்கொள்வது எளிதாகிவிட்டதும், திருமண பந்தத்திற்கு வெளியே உறவுகள் தோன்ற காரணமாகிவிட்டன. திருமணமான தம்பதிகளின் வாழ்க்கையில் மூன்றாம் நபர்கள் நுழைவது இன்று நேற்று ஏற்பட்டதல்ல. திருமணம் என்பது எப்போது நடைமுறைக்கு வந்ததோ அப்போதிருந்தே திருமணத்திற்கு வெளியேயான உறவுகளும் தோன்றிவிட்டன. நூறு ஆண்டுகளுக்கு முந்தைய சமூகம், ‘இதெல்லாம் வாழ்க்கையில் ஒரு அங்கம்’ என்ற மனநிலையில்தான் இருந்தது. பண்ணையார்களாக வலம் வந்தவர்கள், ஊருக்கு வெளியே இன்னொரு குடும்பம் உருவாக்குவதும், அவர்களுக்கு தேவையான வீடு- வசதி-வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுப்பதும் அப்போதெல்லாம் சில இடங்களில் நடைமுறையில் இருந்தது.

 

தனது வாழ்க்கைத்துணைக்கு தெரியாமல் மற்றவர்களிடம் உறவை உருவாக்கிக்கொள்ள யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அவர்களில் சிலர் திருமணத்திற்கு வெளியே இன் னொரு உறவை ஸ்தாபிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். அதில் சிக்கிக்கொள்ளக்கூடாது என்று நினைத்து விலகிவிடுகிறவர்களும் நிறைய இருக்கிறார்கள்.

 

மணவாழ்க்கையில் இணைந் தவர்கள் அந்த வாழ்க்கை பிடிக்காமல் போனால் அதில் இருந்து விலகிவிடுவது நமது கலாசாரப்படி எளிதல்ல. அதனால் தாம்பத்ய வாழ்க்கை வெறுமையும், சூன்யமும் ஆகிவிட்ட நிலையிலும் விவாகரத்து பெற விரும்பாமல் பலர் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். விவாகரத்துக்களில் இருக்கும் சிக்கல்களே வெளியே தெரியாமல் இன்னொரு உறவை உருவாக்கவும் சில நேரங்களில் காரணமாகிவிடுகிறது.

 

ஒரு குடும்பத்தலைவி ‘ஒரே ஒரு மிஸ்டுகாலில் மயங்கிவிட்டாள்’ என்பது போன்ற பல சம்பவங்களை கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த நபரின் பேச்சில் அவள் விழுந்துவிட்டாள் என்று சொல்வது, உண்மையல்ல. தனது கணவரிடம் இருந்து அவள் அகன்று நின்றதுதான் அதற்கான உண்மையான காரணம். அதுவே அவளை அந்த மிஸ்டுகால் நபரிடம் விழவைத்திருக்கும். சொந்த வாழ்க்கையில் யாரெல்லாம் திருப்தியில்லாமல் இருக்கிறார்களோ அவர்களில் சிலரே மூன்றாம் நபர் உறவுகளில் மூழ்கிப்போகிறார்கள்.

 

வாழ்க்கையில் திருப்தியில்லாமல் இருக்கும் பெண்களை அடையாளங்கண்டு அவர்களுக்கு வலைவீசுவதையே தங்கள் வாழ்க்கை கடமையாகக்கொண்டு சிலர் செயல்பட்டு வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களிடம் ஏமாறும் பெண்கள் அதிகம். ‘கணவரை விட பலவிதங்களில் நல்லவர்.. அன்பானவர்.. திறமையானவர்..’ என்று இந்த மூன்றாம் நபர்களை நம்பும் பெண்கள் ஏமாற்றத்தின் எல்லை வரை சென்றுவிடுகிறார்கள்.

 

தம்பதிகள் தங்கள் துணைக்கு தெரியாமல் இன்னொரு நபருடன் உறவை வளர்த்துக்கொள்ளும்போது குற்றஉணர்ச்சியால் மிகுந்த மனநெருக்கடிக்கு உள்ளாகுவார்கள். அவர்களது எதிர்காலம், வளர்ச்சியை அந்த உறவு கடுமையாக பாதிக்கும். அந்த ஒட்டுமொத்த குடும்பத்தின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடும். அதனால் பெண்கள் தங்கள் இணையுடன் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான வழிமுறைகளை ஆராயவேண்டும். இருவருக்கும் இடையேயான உறவை மேம்படுத்திக்கொள்ள சரியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் தாம்பத்ய வாழ்க்கையை சீர்படுத்தி சிறப்பாக்கிக்கொள்ளலாம். அதே நேரத்தில் எந்த சூழ்நிலையிலும் தங்கள் குடும்ப விஷயத்திற்குள் மூன்றாம் நபர்கள் யாரையும் எக்காரணத்தைக்கொண்டும் பெண்கள் அனுமதித்துவிடக்கூடாது. அனுமதித்தால் அது ஆபத்தாகிவிடும்” .

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *