இலங்கை செய்திகள்
போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மண்டூர் வெல்லாவெளி தாம்போதிகளை பாலமாக அமைக்குக.
வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குட்பட்ட வெல்லாவெளி மற்றும் மண்டூர் ஆகிய கிராமங்களை இணைக்கும் பிரதான பாதையில் உயரமற்ற வீதியுடன் இணைந்த மூன்று தாம்போதிகள் காணப்படுவதனால், மழை வெள்ள காலத்தின் போது குறித்த பாதை ஊடாக பயணிப்பவர்கள் பல்வேறு அசெளகரியங்களுக்கு உட்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறாக மூன்று தாம்போதிகளுக்கும் மேலாக மூன்று அடி உயரத்திற்கு வெள்ள நீர் வழிந்தோடுவதனால் தாம்போதிக்கு அருகிலுள்ள வட்டவளை, வேத்துச்சேனை, காக்காச்சிவட்டை போன்றவற்றில் நெற்செய்கையினை மேற்க்கொள்ளும் விவசாயிகளின் வயல் நிலங்கள் வெள்ளத்தினால் அழிவுற்று சேதமுறுவதாக கவலையடைகின்றனர்.
தாம்போதிகள் ஊடாக ஓரிரு வாரத்திற்கு மேலாக வெள்ளநீர் வழிந்தோடுவதனால் தாம்போதிகள் உடைந்து வெடிப்புற்று குழி போன்ற நிலையிலும், தாம்போதி ஊடாக அவசர தேவையின் நிமித்தம் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் வெள்ளநீரில் அடித்து இழுத்துச் செல்லப்பட்டுள்ள நிலைமையும் கடந்தகாலங்களில் ஏற்பட்டுள்ளது.
செயலகப் பிரிவுக்குட்பட்ட பொதுமக்களின் அவசிய தேவை கருதி நீர் வழிந்தோடக்கூடிய மூன்று தாம்போதிகளையும் பாலமாக புனரமைத்து தருமாறு பொதுமக்களும் சமூக மட்ட குழுக்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.