இலங்கை
மக்களின் பிரச்சினைகளை பேச முடியவில்லை : கல்முனை மாநகர சபை உறுப்பினர்

மக்கள் பிரச்சினைகளை பேச வேண்டிய மக்கள் சபையில் முன்வரிசை ஆசனங்களுக்கான சண்டை இடம்பெறுவதாகவும், மக்கள் மீது கல்முனை மாநகர சபை ஆதன, திண்மக்கழிவகற்றல் வரி முறைமை மூலம் அதிக சுமைகளை சுமத்தி இருப்பதாகவும், வெறுமனே பெட்டி கடை போட முனையும் மாநகரசபை மகன் ஒருவன் சுமார் 15 ஆயிரம் ரூபாவுக்கு மேற்பட்ட வரித் தொகையை செலுத்த வேண்டி உள்ளதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பிலான கல்முனை மாநகர சபை உறுப்பினர் பீ.எம். ஷிபான் குற்றம் சுமத்தினார்.
கல்முனை மாநகர சபையின் 34வது மாதாந்த அமர்வு கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றக்கீப்பின் தலைமையில் நடைபெற்றது. அதன்போது நடைபெற்ற கூச்சல் குழப்பநிலை காரணமாக சபை அமர்வு இடைநடுவில் ஒத்திப்போடப்பட்டது. அந்த சபை அமர்வு தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர்,
எப்போதோ ஒரு காலத்தில் குடியேறும் ஆசையில் மாடி வீடு கட்ட படி போட்டமைக்காக இப்போதே மாடிவீட்டு வரி செலுத்த மக்கள் நிர்ப்பந்திக்கப்படுவதாகவும், உரிய அதிகாரிகளின் அளவீடின்றி குப்பை வரி அறவிட வருபவர்களே ஆதன வரிகளுக்கான அளவுகளையும் செய்கின்றார்கள் எனவும், பூட்டி கிடக்கின்ற வீடுகளுக்கும் திண்மக்கழிவகற்றல் வரி அறவீடு செய்வது முறைகேடானது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான நிலை தொடர்ந்து செல்லுமாயின் , இலங்கையில் பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தையும் சுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடனோடு பிறப்பது போன்று , கல்முனை மாநகர சபை குடிமக்கள் கடன் சுமையோடு வாழ வேண்டி வரும்.
இந்தப் பிரச்சினைகளை எல்லாம் சபையிலேயே பேச தயாராகிக்கொண்டு வந்தால் சபை பல நேரங்களில் போர்க்களம் ஆகவும், சில நேரங்களில் சொந்த விடயங்கள் பேசும் களமாகவும் மாற்றம் கண்டு உள்ளதால் மக்கள் விடையங்களை பேச முடியவில்லை எனவும் ஆதங்கம் வெளியிட்டார்.
இலங்கையிலே மிலேச்சத்தனமாக ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதை கண்டித்தே தாம் இன்றைய அமர்வில் கறுப்பு பட்டி அணிந்து வருகை தந்திருந்ததாகவும், ஐக்கிய நாடுகள் சபை கட்டாய ஜனாஸா எரிப்பினை நிறுத்தக் கோரியும் இலங்கை அரசு கண்டுகொள்ளாத நிலையில் இருப்பது கண்டு தாம் வருவதாகவும் சபை அமர்வின்போது மாநகரசபை உறுப்பினர் க.செல்வராசா அவர்களை அதிகாரத் தொனியில் சபையை விட்டு வெளியேற மேயர் அவர்கள் பணித்தமையானது கௌரவ மாநகர சபை உறுப்பினர் அவர்களின் சிறப்புரிமைக்கு களங்கத்தை ஏற்படுத்திய செயல் எனவும், இதற்கான தனது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்