கிழக்கு செய்திகள்
மனப்பிட்டி பாதையின் அவலத்தினால் மட்டக்களப்பு செல்வோர் அவதி.
வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குட்பட்ட அம்பிளாந்துறை தாமரைப்பூ சந்தியிலிருந்து மனப்பிட்டி சந்தி வரைக்குமான வால்கட்டு பிரதான பாதை குன்றும் குழியுமாக சேதமுற்று உடைந்த நிலையில் காணப்படுவதாக பிரதேச வாசிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
மண்டூரிலிருந்து மட்டக்களப்பு நகருக்கு செல்லும் பிரதான பாதையில், தாமரைப்பூ சுற்றுவட்ட சந்தியிலிருந்து மனப்பிட்டி சந்தி வரைக்குமான 7 கிலோமீற்றர் பாதையே இவ்வாறு புனரமைப்பற்று குண்டும் குழியுமாக சேதமடைந்த நிலையில் காணப்படுவதாக பாதையை பயன்படுத்துவோரால் தெரிவிக்கப்படுகிறது.
தாமரைப்பூ சுற்றுவட்ட சந்தியிலிருந்து வால்கட்டு, மனப்பிட்டி சந்தி ஊடாக காஞ்சிரங்குடா, கொத்தியாபுல, தாண்டியடி, குறிஞ்சாமுனை, வவுணதீவு, வலையிறவு பாலம் ஊடாக மட்டக்களப்பு நகருக்கு செல்லும் மிகப் பிரதான பாதை மார்க்கம் பட்டிப்பளை, வவுணதீவு மற்றும் மட்டு மண்முனை வடக்கு ஆகிய செயலக பிரிவுகளை இணைப்பதுடன், மட்டு மாவட்ட செயலகம் உட்பட நகரின் பல்வேறு அலுவலகங்களுக்கும் செல்லும் பிரதான மார்க்கமாகவும் காணப்படுகின்றது.
இப்பாதை மார்க்கத் தேவை கருதி புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் பிரதிநிதிகளிடம் பல தடவை கோரியும் இற்றைவரை எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லையென பொதுமக்கள் கவலையுடன் அங்கலாய்ப்பதுடன், குறித்த வீதியின் புனரமைப்பை இழுத்தடிக்காமல் துரித கதியில் மேற்க்கொள்ளுமாறு பிரதேச வாழ் பொதுமக்களும் சமூக மட்ட அமைப்புகளும் உரிய அதிகாரிகளுகக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.