Connect with us

இலங்கை

மாகாணசபை தேர்தலை நடாத்த அரசாங்கம் முன்வரவேண்டும் – கல்முனை விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்தின் தேரர் தெரிவிப்பு

Published

on


அரசாங்கம் மாகாணசபை தேர்தலை நடாத்தி வடகிழக்கில் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களை துரிதமாக அபிவிருத்தி செய்வதற்கு முன்வர வேண்டும் என்று கல்முனை ஸ்ரீ சுபத்திராம விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்தின் தேரர் (21.01.2021) தெரிவித்தார்.

கல்முனை ஊடக மையத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கும் போது,

விஷேடமாக தற்பொழுது இந்த அரசாங்கத்தில் இருக்கின்ற அமைச்சர்கள் சிலர் மாகாண சபைத் தேர்தல் நடத்த கூடாது என்று ஒரு விடயத்தை கூறினாலும் நான் நிச்சயமாகச் சொல்ல விரும்பியது மாகாண சபை தேர்தலை நடாத்தி பிரதேச ரீதியாக வாழும் மக்களுக்கு அதிகாரத்தை  கொடுக்க வேண்டும். அப்படி ஒரு பிரதேசத்தை அபிவிருத்தி செய்யக்கூடிய வாய்ப்பு கிடைக்கும் போது அந்தந்த பிரதேசங்களில் இருந்து தெரிவு செய்யப்படுகின்ற உறுப்பினர்கள் ஊடாக அவர்களது பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியும்.  இன்று அரசாங்கம் பல அபிவிருத்திகளை செய்ய வேண்டும்  என்று நினைத்த போதிலும் சிலர்  தாம் விரும்பிய  பிரதேசங்களை மாத்திரமே அபிவிருத்தி செய்வதை காணமுடிகின்றது. கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கு கல்முனை மக்களின் பிரச்சினை என்ன? என்பது புரியாது.

அம்பாறை, மட்டக்களப்பு ,திருகோணமலை மாவட்டங்களில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நடைபெறுவதை காணவில்லை.  நாட்டுக்கு ஒரு புதிய ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்ட பிற்பாடு ஆறு மாதம் கழித்தும்  நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்ற பல அபிவிருத்திகளை எமது பிரதேசத்திலே காணவில்லை இது எங்களுக்கு திருப்தி அடையக் கூடியதாக இல்லை என்பதையும் இந்த இடத்தில் நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் அம்பாறை மாவட்ட மக்கள் சந்திப்பு நடைபெற்ற சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களுக்காக எந்த ஒரு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. இது ஏன்? என்று எனக்குத் தெரியாது. இலங்கை அழகான நாடு நாட்டை கட்டியெழுப்புவதற்கு யார் நடவடிக்கைகளை எடுத்தாலும் அவர்களுக்கு ஆதரவாக நான் இருக்கின்றேன். கல்முனை பிரதேச மக்களின் பிரச்சினைகளை கேட்டு அறிவதற்காக அதிமேதகு ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட அமைச்சர்கள் எல்லோரும் இங்கு வந்து இந்த மக்களுடைய பிரச்சினைகளை கேட்டறிய வேண்டும்.  அப்போது நான் அவர்களுக்கு தெளிவாக பிரச்சினைகளை எடுத்துச் சொல்வதற்கு தயாராக இருக்கின்றேன் என்றும் தெரிவித்தார்.

இந்த ஊடக சந்திப்பில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் எஸ்.ராஜனும் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தார்.