இலங்கை
மாணவர்கள் என்பவர்கள் எப்போதும் தமது பெற்றோர்களுடைய எதிர்பார்ப்பை நிறைவேற்றுபவர்களாக இருக்க வேண்டும்

மாணவர்கள் என்பவர்கள் எப்போதும் தமது பெற்றோர்களுடைய எதிர்பார்ப்பை நிறைவேற்றுபவர்களாக இருக்க வேண்டும் என அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சட்டத்தரணி ஏ.எம்.அப்துல் லத்தீப் தெரிவித்தார்.
பெரியநீலாவணை புலவர்மணி சர்புத்தீன் மஹா வித்தியாலயத்தில் இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு அனுமதி அட்டையை கையளிக்கும் நிகழ்வும் பாடசாலையின் “விண்மணி” நூல் வெளியீட்டு விழாவும் இன்று (26.02.2021) பாடசாலையில் அதிபர் எம்.எம். முகம்மட் நியாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேலதிக அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றுகையில்,
மாணவர் பருவம் மீண்டும் எம்மை வந்து சேர்வது கிடையாது. ஒரு கட்டத்தில் மீண்டும் மாணவர் பருவம் கிடைக்காதா? என்று ஆதங்கப்படுகின்ற காலம் ஒவ்வொருவருக்கும் வருவதுண்டு. எனவே பாடசாலை பருவத்தை பயனுள்ளதாக ஒவ்வொரு மாணவர்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கல்வி கற்கும் பொழுது சவால்களை சாதனைகளாக மாற்றி முன்னேறுவதற்கான வழிகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாணவர்களுடைய பெற்றோரும் ஒவ்வொரு எதிர்பார்ப்போடு உங்களை பாடசாலைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். எனவே அவர்களுடைய எதிர்பார்ப்பை, கனவுகளை நிறைவேற்றுபவர்களாக மாணவர்களான நீங்கள் மாற வேண்டும். அதற்கு பரீட்சையில் உயர்ந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள வேண்டும். உயர்ந்த பெறுபேறுகளைப் பெற வேண்டுமென்றால் காலத்தையும் நேரத்தையும் சரியாக பயன்படுத்தி கற்றலில் ஈடுபட வேண்டும்.
மூளையின் முழு பகுதியையும் நினைவாற்றல் மற்றும் திறனை கொண்டு உங்கள் பாடப்பரப்புகளால் நிரப்பப்படுமாக இருந்தால் நீங்கள் ஒவ்வொருவரும் வெற்றி பெறுவீர்கள். சாதனைகளை படைப்பீர்கள். சிந்தனைகளை திசைதிருப்பி வேறு எண்ணங்களை மூளைக்குள் நிரப்பிக்கொண்டால் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற முடியாமல் போய்விடும்.
இலகுவான சில வாய்ப்பாடுகளை எமக்குள் நாம் உருவாக்கிக் கொண்டால் ஞாபகசக்தியை அதிகரித்துக் கொள்ள முடியும். இங்குள்ள ஒவ்வொரு மாணவர்களும் சிறந்த பெறுபேறுகளை பெற்று எதிர்காலத்தில் எமது பிரதேசத்தில் உயர் நிர்வாக துறைகளில் சேவையாற்றும் தலைமுறையினராக மாறவேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கல்முனை பிரதேச செயலகத்தில் நிருவாக உத்தியோகத்தர் எம்.என்.எம்.றம்ஸான், கல்முனை கல்வி வலயத்தின் சிறுவர் செயற்பாட்டு அதிகாரி எம்.எம்.ஏ. ஹபிழ், பாடசாலையின் பிரதி அதிபர் எம்.சி.நசார், உதவி அதிபர் ஹஸ்மி மூஸா உட்பட ஆசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.