இலங்கை
மாற்றங்கள் புதிய அனுபவங்களை தரும். சேவை நலன் பாராட்டு விழாவில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் தெரிவுப்பு

மாற்றங்கள் ஒன்றுதான் மாறாதது இவை புதிய அனுபவங்களை தரும் என அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் தெரிவித்தார்.
கல்முனை பிரதேச செயலகத்தின் முன்னாள் பிரதேச செயலாளர் எம்.எம்.முகம்மட் நஸீர் மற்றும் கணக்காளர் வை.கபீபுல்லா ஆகியோரது சேவையை பாராட்டி கெளரவிக்கின்ற நிகழ்வு பிரதேச செயலகத்தின் சமூர்த்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் (20) மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி மருதூர்கனி மண்டபத்தில் நடைபெற்றது.
சமூர்த்தி தலைமை பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேலதிக அரசாங்க அதிபர் இதனை தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றும் போது,
பொதுமக்களுக்கு சேவையாற்றும் அரச அதிகாரிகள் மதிக்கப்பட வேண்டியவர்கள். அரச சேவை என்பது இறைவன் வழங்கிய ஒரு அருட்கொடையாகும். எனவே இறைவனுக்கு நன்றி செலுத்தும் நோக்கத்துடன் அர்பணிப்புடன் தமது கடமைகளை முன்னெடுத்த அதிதிகளின் சேவைக்காலம் பெறுமதியானதாகும்.
அரச சேவையில் ஈடுபடும் அதிகாரிகள் தாம் பணியாற்றுகின்ற பிரதேசங்களில் என்றாலும் சரி அல்லது பொதுமக்கள் மத்தியில் என்றாலும் சரி நல்ல தடங்களை பதிக்க வேண்டும். அரசு அலுவலகங்களை பொருத்தவரையில் பல்வேறு பிரிவுகளாக பல்வேறு வகையான சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக சமூர்த்தி திணைக்களத்தின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்ற பணியானது முக்கியமானதாகும். பாதிக்கப்பட்டுள்ள அல்லது வருமானம் குறைந்த பொதுமக்களோடு பயணிக்கின்ற பெறுமதியான சேவை சமூர்த்திச் சேவையாகும்.
மக்களை வாழ வைப்பது என்பது எல்லோருக்கும் கிடைப்பதல்ல. அடுத்தவரை வாழ வைக்க உழைக்கின்ற அரச சேவையாளர்கள் பாராட்டப்பட வேண்டும். அலுவலகங்களில் இணக்கப்பாட்டு நிருவாக முறைமை அவசியமான ஒன்றாகும். இதனூடாகத்தான் உயர்ந்த அடைவுகளை பெறமுடியும். கல்முனை பிரதேசம் என்பது நான் பிறந்து வளர்ந்து வாழ்கின்ற பிரதேசமாகும். இந்த பிரதேசத்தில் நல்லிணக்கம் மற்றும் சமாதான சூழலோடு கூடிய அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகும். அதனை கடந்த காலங்களில் இங்கு பணியாற்றிய பிரதேச செயலாளர், கணக்காளர் ஆகியோர் மிகவும் திறமையாக முன்னெடுத்திருக்கிறார்கள். அவர்களை நான் பாராட்டுவதில் மகிழ்ச்சியடைகின்றேன் என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி, நிருவாக அதிகாரி ரி.எம் றம்சான், முகாமைத்துவ பணிப்பாளர் திருமதி எம்.எஸ்.ரிபாயா , திட்ட முகாமையாளர் திருமதி நயீமா, மருதமுனை – நற்பிட்டிமுனை சமுர்த்தி வங்கி முகாமையாளர் சட்டத்தரணி எம்.எம்.எம்.முபீன், கல்முனை குடி சமூர்த்தி வங்கி முகாமையாளர் எம். மோசஸ் புவிராஜ் உட்பட திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் சமூர்த்தி வங்கியில் கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் செல்லும் நுவரேலிய பிரதேசத்தைச் சேர்ந்த அலுவலக உதவியாளர்
எம்.ஆர்.துமேஸா உத்தியோகத்தர்களால் பாராட்டி கெளரவிக்கப்பட்டார்.