சர்வதேசம்
மியான்மரின் 9 ராணுவ அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடை

மியான்மர் ராணுவத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் மீது பிரிட்டன் மற்றும் கனடா நாடுகள் பொருளாதாரத் தடையை விதித்துள்ளன.
கடந்த வாரம் மியான்மர் ராணுவ அதிகாரிகள் மீதும் அவர்கள் குடும்பத்தினர் மீது அமெரிக்க பொருளாதாரத் தடையை விதித்தது
இந்த நிலையில் பிரிட்டனும், கனடாவும் மியான்மரின் 9 ராணுவ அதிகாரிகள் மீது பொருளாதார தடை விதித்துள்ளன.
இதுகுறித்து பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், “ நாங்கள் எங்கள் நட்பு நாடுகளுடன் இணைந்து மியான்மர் மக்களுக்கு நீதி கிடைக்க ராணுவத்திற்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்போம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியான்மர் ராணுவ தலைவர் மின் அங், மீது பிரிட்டன் ரோஹிங்கியா விவகாரத்திலேயே பொருளாதாரத் தடை விதித்து இருந்தது.
புதிய பொருளாதாரத் தடை குறித்து மியான்மர் ராணுவம் தரப்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.
முன்னதாக, ராணுவத்துக்கு எதிராகப் போராடுபவர்களுக்கு சுமார் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மியான்மர் ராணுவம் எச்சரிக்கை விடுத்தது. மேலும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் நடந்துகொண்டால் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினால் மியான்மர் கடுமையான விளைவுகளை சந்திக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்தது.