கிழக்கு செய்திகள்
முடக்க நிலையிலிருந்து மருதமுனையை பாதுகாப்போம்.

மருதமுனை ஜம்மியத்துல் உலமா மற்றும் அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் ஒத்துழைப்புடன் “முடக்க நிலையிலிருந்து மருதமுனையை பாதுகாப்போம்” .அரச சட்ட திட்டங்களையும் சுகாதாரப் பொது விதிகளையும் பொறுப்புடன் கடைப்பிடித்து கோவிட்-19 இல்லாத நாட்டை உருவாக்க பங்களிப்புச் செய்வோம். எனும் தொனிப் பொருளில் விழிப்புணர்வு பேரணியும் துண்டுப் பிரசுரம் வெளியீட்டு நிகழ்வு (18) நடைபெற்றது. இதன் போது மருதமுனையில் உள்ள அனைத்து பாதைகள் ஊடாகவும் ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வு அறிவித்தல் செய்யப்பட்டது.
உலகளாவிய தொற்று நோயாக உயிர் கொல்லியாக மரணத்தை ஏற்படுத்தி வரும் கோவிட்-19 பரவல் அண்மைக்காலமாக இலங்கையில் சமூகப் பரவலாக மாறி வருவதையும் 160க்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவாகி உள்ளது. மேற்படி மரணங்களில் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் அடக்கம் செய்வதில் பாரிய சவால்களை முகம் கொடுத்து வரும் நிலையில் பொது மக்களாகிய நீங்கள் சுகாதார நடைமுறைகளை கடைபிடித்து மருதமுனையில் கோவிட்-19 தொற்று அதிகரித்து வருவதை தடுக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணன் மற்றும் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி றிஸ்னி முத்து கலந்து கொண்டு அறிவிருத்தல்களை வழங்கினார்கள். இவர்களுக்கு துண்டு பிரசுரத்தின் பிரதிகளை மருதமுனை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர், மெளலவி எம்.ஜ.ஹுசைனுத்தீன் (றியாழி) அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
இவ்விழிப்புணர்வு நிகழ்வில் ஜம்மியத்துல் உலமா சபையின் உறுப்பினர்கள், அனைத்து பள்ளிவாசல் சம்மேளன உறுப்பினர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், மருதமுனை வர்த்தக சங்க உறுப்பினர்கள் மற்றும் பொது நிறுவனங்களின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்கினார்கள்.



Continue Reading