இலங்கை
வனஇலாகாவினர் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதாக ஆசிகுளம் பிலவு வீதி மக்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

வவுனியா, ஆசிகுளம், பிலவு வீதியில் உள்ள விவசாய காணிகளை வனஇலாகாவினர் கையகப்படுத்துவதாக அப்பகுதி மக்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
மனித உரிமை ஆணைக்குழுவின் வவுனியா காரியாலயத்தில் இன்று காலை குறித்த முறைப்பாட்டினை அப்பகுதி மக்கள் மேற்கொண்டிருந்தனர்.
வவுனியா, ஆசிகுளம், பிலவு வீதியில் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக மக்கள் விவசாயம் மற்றும் சேனைப் பயிற் செய்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து, அம் மக்கள் மீள் குடியேறி காணிகளை துப்பரவு செய்து மீளவும் பயிற் செய்கை நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், வனஇலாகாவினர் குறித்த காணிகளில் காட்டு மரங்களை நாட்டியுள்ளதுடன், அக் காணிகளில் பயிற்செய்கையில் ஈடுபட வேண்டாம் எனவும், கால்நடைகளை மேய விட வேண்டாம் எனவும் அச்சுறுத்தி வருவதாகவும் குறித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ள அப் பகுதி மக்கள் தமது காணிகளை மீள தமக்கு பெற்று தருவதுடன் விவசாய நடவடிக்கைக்கு அனுமதியை பெற்றுத்தருமாறும் கோரியே மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த பகுதியைச் சேர்ந்த 38 பேரின் சார்பாக குறித்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது. அக் கிராம மக்களுடன் இணைந்து தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் செல்வநாயகம், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளரர் ச.தனுஸ்காந் உள்ளிட்ட பலரும் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.
விவசாய நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தமது விவசாய காணிகளை மீட்டுத் தருவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அம் மக்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.