Connect with us

இலங்கை

விலங்குகளின் சரணாலயமாக காணப்படும் பொதுக் கட்டடம்

Published

on

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் சிலவற்றின் அபிவிருத்திகள் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.

அதிலும் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டு பூரணப்படுத்தப்பட்டாலும் அவை மக்கள் பாவனைக்கு பூரணமான பயன்பாட்டிற்கு இன்னமையாகவோ அல்லது திருப்தி இன்மையாகவோ காணப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் தியாவட்டவான் கிராம அதிகாரி பிரிவிலுள்ள பாலைநகர் கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடம் விலங்குகளின் சரணாலயமாக காணப்படுவதாகவும், சமூக சீர்கேட்டு மையமாகவும் விளங்குவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த 2016ம் ஆண்டு காலப்பகுதியில் நல்லாட்சி அரசாங்கத்தின் நிதி உதவி மூலம் கட்டப்பட்ட கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடம் கடந்த சில வருட காலமாக முழுமையாக இயங்காத நிலையில் தற்போது விலங்குகள் கட்டப்படும் நிலையில் விலங்குகளின் சரணாலயமாக காணப்படுகின்றது.

அரசாங்கத்தினால் கிராமங்களுக்கு வழங்கப்படும் கட்டடங்கள் அரச திணைக்கங்களின் பார்வையின் கீழ் இயங்கும் வகையில் கட்டடத்தில் இயங்கும் நிறுவனங்களின் செயற்பாடுகள் அமைந்திருக்க வேண்டும். இதனை அரச திணைக்களங்கள் தொடர்ச்சியாக தங்களது மேற்பார்வையின் கீழ் கொண்டு செல்ல வேண்டும்.

ஆனால் சில கட்டடங்களை உரிய அரச திணைக்கங்கள் தங்கள் திணைக்களத்தின் கீழ் இருந்தாலும் அதனை பார்வையிடுவதோடு, அது தொடர்பில் அதிரடி விசாரணைகள் மேற்கொள்வதோ குறைவாகவே காணப்படுகின்றது. இதன் காரணமாக பல கட்டடங்கள் செயலிழந்த நிலையில் காணப்படுகின்றது.

அந்த வகையில் குறித்த கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடம் இயங்காத நிலையில் இங்கு பயன்பாட்டுக்கு வழங்கப்பட்ட தளபாடங்கள் உட்பட்ட பல பொருட்கள் இல்லாமல் காணப்படுவதுடன், அலுமாரிகள் உடைந்த நிலையில் காணப்படுவதுடன், யன்னல்கள் களற்றப்பட்டு உடைத்து காணப்படுகின்றது.

இங்கு பெரும்பாலான பகுதிகளில் மாடுகளின் சாணம் மற்றும் வைக்கோல், பறவைகளின் எச்சங்கள் என்பன காணப்படுவதுடன், மின்சார சாதனங்கள் இன்றி காணப்படுவதுடன், வளாகம் முழுவதும் பற்றைக்காடாக காட்சி அளிக்கின்றது.

மேலும் இரவு நேரங்களில் குறித்த கட்டடத்தினை போதைப் பொருள் பாவனை மற்றும் சமூக சீர்கேடான செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் குறித்த பகுதியில் பாரிய கலாசார சீர்கேடுகள் இடம்பெறுவதற்கு வழி வகுக்கும் என்று மக்கள் அச்சம் கொள்கின்றனர்.

பெரும்பாலும் தற்போது இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை அதிகரித்து காணப்படும் நிலையில் இவ்வாறான கட்டடங்கள் இயங்காத நிலையில் பொதுமக்களின் நடமாட்டம் இன்றி காணப்படுவதால் குறித்த கட்டடத்தினை போதைப் பொருள் பாவனைக்கு தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலைமையே உருவாகி வருகின்றது.

குறித்த விடயம் தொடர்பில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளரின் கவனத்துக்கு பல தடவைகள் தெரிவித்தும் எந்தவித பதிலும் கிடைக்காத நிலையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கும் முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இடம்பெறவில்லை என்று ஓட்டமாவடி பிரதேச சபையின் தியாவட்டவான் வட்டார உறுப்பினர் ஏ.ஜி.அஸீஸுல் றஹீம் தெரிவித்தார்.

எனவே பாலைநகர் கிராமத்தில் மற்றும் அதனை அண்டி வாழும் தமிழ், முஸ்லிம், மக்களின் அவசிய தேவைகளான குடும்பநல கிளினிக், பாலர் பாடசாலை, பல்தேவை கட்டடம், கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடம் என பல தேவைகளுக்கு கட்டடம் இல்லாத நிலையில் பெரிதும் கஷ்டப்படுகின்றனர். கட்டடம் இருந்தும் கட்டடம் இல்லாதது போன்று கிராம மக்கள் சிரமப்படுகின்றனர்.

ஆகவே குறித்த விடயம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன், பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் உரிய அரச அதிகாரிகள் இதில் கூடிய கவனம் செலுத்தி மிக விரைவாக கட்டடத்தினை புனரமைப்பு செய்து மக்கள் பாவனைக்கு கையளிக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

எனவே இந்த அரசாங்கத்தின் மூலமாவது இக்கட்டடம் புனரமைப்பு செய்யப்பட்டு பாலைநகர் மக்களது மிக நீண்ட நாள் தேவையாக காணப்படும் பொதுக் கட்டட தேவையினை நிறைவேற்ற அரசியல்வாதிகள் மற்றும் அரசா அதிகார்கள் இனியாவது நடவடிக்கை எடுப்பார்களா என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *