இலங்கை
வெல்லாவெளியில் தொடர் திருட்டுச் சம்பவங்கள்!

வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தமிழ்க்கிராமங்களில் சமீப காலமாக தொடரும் திருட்டுச்சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
நள்ளிரவு வேளைகளில் வீட்டு கதவை தட்டுவதாகவும் வீட்டு வளாகத்திலுள்ள முக்கிய உடமை உட்பட வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு,கோழி மற்றும் மாடு போன்றவை நாளாந்தம் களவாடப்படுவதாகவும் உடமையாளர்களால் தெரிவிக்கப்படுகிறது.
வீதியால் சென்ற தாயொருவரிடம் விலாசம் விசாரிக்கும் தோரணையில் அவரது கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை களவாடிய சந்தர்ப்பமும் மிக அண்மையில் நடந்தேறியதுடன், இதுவரை 12 திருட்டுச் சம்பவங்களுக்கு மேல் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட மண்டூர், தம்பலவத்தை, வெல்லாவெளி, பொறுகாமம், பிலாலிவேம்பு, விவேகானந்தபுரம், வேத்துச்சேனை ஆகிய கிராமங்களில் பூட்டியிருக்கும் வீடுகளை உடைத்து பகல், இரவு வேளைகளில் உள்நுழையும் திருடர்கள் பணம், நகை உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக உடமையாளர்களால் கவலை தெரிவிக்கப்படுகிறது.
திருட்டுச்சம்பவங்கள் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களினால் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்ட போதிலும் இதுவரை திருடர்கள் கைது செய்யப்படவில்லை என சம்பந்தப்பட்டவர்கள் விமர்சனம் தெரிவிக்கின்றனர்.
தொடர்ச்சியாக இவ்வாறான திருட்டுச்சம்பவங்கள் வெல்லாவெளி பிரதேச தமிழ்க்கிராமங்களில் நடைபெற்றுவருவதனால், பொலிஸார் திருடர்களை கைது செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், சிவில் உடையில் ரோந்து நடவடிக்கையிலும் ஈடுபட்டு இவ்வாறான திருட்டுச்சம்பவங்களை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.